துருக்கி நாட்டின் பொருளாதாரம் கடுமையான சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டு அரசிற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
துருக்கியை ஆளும் ஜனாதிபதி தையிப் ஏர்டோகன் தலைமையிலான அரசின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக அந்நாட்டில் பணவீக்க விகிதம் கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, டாலருக்கு நிகராக அந்நாட்டின் நாணயமான லிரா கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு 30 சதவிகிதம் வரை சரிவை சந்தித்துள்ளது. இதனால் அந்நாட்டில் பணவீக்கம் 2022ம் ஆண்டின் துவக்கத்தில் 30 சதவிகிதத்தை எட்டும் என கருதப்படுகிறது.
அதேநேரம், இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் அரசாங்கத்தால் திட்டமிட்டு குறைத்து காட்டப்படுவதாக பொருளாதார அறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதாவது, உண்மையான பணவீக்கம் 58 சதவிகிதம் வரை உயரக்கூடும் என அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அந்நாட்டு நாணயத்தின் மதிப்பு மேலும் சரியக்கூடும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, துருக்கி அரசின் தவறான, பிற்போக்குத்தனமாக பொருளாதார கொள்கையின் காரணமாக அந்நாடும், அந்நாட்டு மக்களும் படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறி அந்நாட்டின் புகழ்பெற்ற நகரான இஸ்தான்புல் நகரில் ஞாயிறன்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பங்கேற்றோர் அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், நாங்கள் ஒவ்வொரு நாளும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வாழ்க்கையை நகர்த்தி வருகிறோம். எங்களின் குறைந்தபட்ச தேவைகளைக் கூட எங்களால் பூர்த்தி செய்ய முடிவதில்லை. கையில் இருந்த அனைத்து சேமிப்புகளையும் இழந்து நடுத்தெருவிற்கு வந்து விட்டோம். ஆனால், இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத தையிப் ஏர்டோகன் தலைமையிலான அரசு, நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக மீண்டும், மீண்டும் பொய் மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, இனியும் எங்களை முட்டாள்களாக அரசு கருதக்கூடாது என போராட்டத்தில் பங்கேற்றோர் ஆவேசமாக தெரிவித்தனர்.