காத்மண்டு, ஆக. 5- நவம்பர் 20 அன்று பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள தால் நேபாள அரசியல் கட்சிகள் அதைச் சந்திக்கத் தயாராகிவிட்டன. நேபாள நாடாளுமன்றத்தில் 275 இடங்கள் உள்ளன. இவற்றில் 165 உறுப்பி னர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படு வார்கள். இதற்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவதென்று நேபாள தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. பிரதமர் ஷேர் பகதூர் தாபா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் கிடைத்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலோடு, மாகாண அவைகளுக்கான தேர்தல்களும் ஒரே நாளில் நடைபெறவிருக்கின்றன.
தற்போது நேபாள காங்கிரஸ் தலைமை யிலான கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்தக் கூட்டணியில் மாவோயிஸ்டு மையம், ஐக்கிய சோசலிஸ்டு, ஜனதா சமாஜ்வாதி மற்றும் ராஷ்டிரிய ஜன்மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது மற்றும் எத்தனை இடங்கள் என்பதை முடிவு செய்வதற்கான பேச்சுவார்த்தையை இந்தக் கட்சிகள் தொடக்கவுள்ளன. தொகுதிப் பங்கீட்டில் சில சிக்கல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(ஒன்றுபட்ட மார்க்சிஸ்டு லெனினிஸ்டு)யின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கே.பி.சர்மா ஒலி, தேர்தல் அறிவிப்பை வரவேற்றிருக்கிறார். தேர்தல் நடத்தத் தங்களுக்கு 120 நாட்கள் வரையில் தேவைப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு நாளுக்கும், தேர்தல் நாளுக்கும் இடையில் 112 நாட்கள்தான் உள்ளன என்பதால் சில எதிர்க்கட்சிகள் தேர்தலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளி வைக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளன. தொகுதிப் பங்கீட்டில் பிரச்சனைகள் எதுவும் இல்லையென்றால், தற்போதைய ஆளும் கூட்டணி வெற்றி வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(யு.எம்.எல்) தனித்துப் போட்டியிட்டிருந்தாலும் ஏராளமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆளும் கூட்டணிக்கும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(யு.எம்.எல்)க்கும் இடையில் கடும் போட்டி இருக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன.