ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கிய ஆசியக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணி விளையாடிய 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்றது. அந்த அணி சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அதே உத்வேகத்தில் இன்றைய இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்குகிறது இலங்கை அணி.
இந்த ஆசியக் கோப்பை முழுவதும் பாகிஸ்தான் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இலங்கை அணியுடனான சூப்பர் 4 சுற்றில் தோல்வியைத் தவிர்த்து அந்த அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகவே விளையாடியது. கடந்தப் போட்டியில் இலங்கை அணியிடம் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் , ஆசியக் கோப்பையை கைப்பற்றும் முனைப்போடும் களமிறங்குகிறது பாகிஸ்தான் அணி