கே. ஏ. சுப்பிரமணியம் என்ற கொல்லங்கலட்டி அம்பலப்பிள்ளை சுப்பிரமணியம் இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தோழர் மணியம் அல்லது மணியம் தோழர் எனக் கட்சித் தோழர்க
ளால் அழைக்கப்பட்டவர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் முழு நேர அரசியலில் ஈடுபட்டவர்.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் நிறுவனர்களில் ஒருவர், தாயகம் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலும் இருந்தவர். கே. ஏ. சுப்பிரமணியம் 1952 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். 1953 ஆம் ஆண்டு இடதுசாரிக் கட்சிகள் இணைந்து நாடு தழுவிய ரீதியில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் தனது முழுமையான பங்களிப்பைச் செலுத்தினார். அன்றைய காலகட்டத்தில் வடக்கு மாகாணத்தில் கம்யூனிச இயக்கத்தை வழிநடத்தி வந்த மு. கார்த்திகேசன், மரு. சு. வே. சீனிவாசகம், பொன். கந்தையா, அ. வைத்தியலிங்கம், எம். சி. சுப்பிரமணியம் போன்றவர்களின் நெருங்கிய தொடர்பினால் கட்சியில் முழுநேர ஊழியரானார்.
1950களின் இறுதியில் வி. பொன்னம்பலம் காங்கேசன்துறைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகளை கிராமம் தோறும் நிறுவுவதற்கு சுப்பிரமணியம் பக்கபலமாக செயற்பட்டார்.1956 பொதுத்தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியுடன் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆட்சியைப் பிடித்தார். இதனையடுத்து பாடசாலைகள்தேசியமயமாக்கல் இடம்பெற்றது. இதற்கு ஆதரவாக மணியம் வாலிபர்களைத் திரட்டுவதில் முன்னணியில் நின்றார்.1964 ஆம் ஆண்டில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்தது. நா. சண்முகதாசன் தலைமையில் உருவான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங் சார்பு) உடன் சுப்பிரமணியம் தன்னை இணைத்துக் கொண்டார். 1967 இல் அல்பேனியாவில் நடைபெற்ற வாலிபர் அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். 1963, 1967, 1975, 1979 ஆகிய ஆண்டுகளில் வாலிபர் அமைப்பு மற்றும் கட்சிப் பிரதிநிதியாக மக்கள் சீனக் குடியரசுக்குச் சென்றார். 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் நாள் சுப்பிரமணியம் காலமானார்.
===பெரணமல்லூர் சேகரன்===