world

img

தீக்கதிர் உலக செய்திகள்

நேட்டோவை கைவிடும்  நட்பு நாடு 

நேட்டோ படை உக்ரைனில் நுழைந்து ரஷ்யாவிற்கு எதிராக போரிட்டால் அந்தப் போரில் பங்கேற்க மாட்டோமென ஹங்கேரி அறிவித்துள்ளது. ரஷ்யாவை அச்சுறுத்துவதற்காக அமெரிக்கா மிகப்பெரிய போர் பயிற்சியில் நேட்டோவை ஈடுப்படுத்தியுள்ள நிலையில் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஒப்ரன் நேட்டோ போரில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் நேட்டோ ரஷ்யா மீது தாக்குதலை துவங்கினால் அதன் நட்பு நாடுகளாலேயே கைவிடப்படும் என இந்த முடிவு காட்டுவதாக கூறப்படுகிறது. 

அமைதியை கடைபிடிக்க வலியுறுத்துக: ஜெர்மனியில் போராட்டம் 

ரஷ்யாவுடனான மோதல் போக்கை கைவிட்டுவிட்டு அமைதியை கடைபிடிக்க வேண்டும் என ஜெர்மன் மக்கள் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.இந்த போராட்டத்தின் போது நேட்டோவிற்கு ஜெர்மனி ஆயுதங்களை தரக்கூடாது என போராட்டக்காரர்கள்  வலியுறுத்தியுள்ளனர். மேலும் “நாங்கள் ரஷ்யாவுடன் சண்டையிடவில்லை” “நேட்டோவை ஜெர்மனியில் இருந்து வெளியேற்ற வேண்டும்”. “நேட்டோ வேண்டாம் அமைதி வேண்டும்” என பதாகை ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர்.

பாலூட்டிகளுக்கும் பரவும்  பறவைக்காய்ச்சல்

அமெரிக்காவில் கோழிகள், பறவைகளுக்கு ஏற்பட்ட பறவைக்காய்ச்சல் பாலூட்டிகளுக்கும் பரவத்துவங்கியுள்ளது. தற்போது அந்நாட்டில் 31 மாநிலங்களில்  பூனைகள் மற்றும் நாய்களுக்கும் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளது தெரிய வந்துள்ளது. துவக்கத்தில் பண்ணைகளில் உள்ள விலங்குகள் மீது பறவைக்காய்ச்சல் பரவிய போதே பூனைகளுக்கு இந்த தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது தான் அந்த பாதிப்பின் தீவிரம் கவனிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

லெபனானை விட்டு வெளியேற  குவைத் மக்களுக்கு வலியுறுத்தல் 

லெபனானில் உள்ள குவைத் மக்களை நாட்டிற்கு திரும்ப அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது எப்போது வேண்டுமானாலும் முழு அளவிலான போரை துவங்கும் சூழலில் அந்நாட்டில்  உள்ள குவைத் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிக மக்களை அழைத்து வரும் வகையில் குவைத் விமானங்களின் இருக்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

லெபனானுக்கு  தலிபான்கள் ஆதரவு 

லெபனான் - இஸ்ரேல் முழு அளவிலான போரைத் துவங்கினால் தலிபான் அரசும் தனது வீரர்களை லெபனானுக்கு ஆதரவாக களமிறக்கும் என தெரிவித்துள்ளது. அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய போது விட்டுச் சென்ற சில நவீன கவச வாகனங்கள், டாங்கிகள், துப்பாக்கிகள் ஆகியவற்றை மேம்படுத்தி தலிபான் ராணுவத்தில் பயன்படுத்தி வருவதாக சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. இந்நிலையில் போர் ஆதரவு அறிவிப்பை கொடுத்துள்ளது தலிபான் அரசு.