world

img

நைஜரில் நடந்தது ‘கலகம்’ அல்ல... கிளர்ச்சி

மேற்கு ஆப்பிரிக்காவில் நடப்பது என்ன?

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள  ராணுவத்தினர், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விடுத்த மிரட்டலை முற்றாக நிராகரித்துள்ளனர். நைஜரின் வான் எல்லைகளை மூடியுள்ள ராணுவத்தினர், நைஜர் மீது போர் தொடுக்கும் நோக்கத்துடன் அத்துமீறி எவர் உள்ளே நுழைந்தாலும் மிகக்கடுமையான பதிலடியையும் பின்விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளனர். இந்தப் பின்னணியில், நைஜரில் நடந்துள்ள ராணுவக் ‘கலகத்தை’ நிதானமாக கையாளாமல் அந்நாட்டின் ராணுவத்தினருக்கு எதிராக பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் போர் நடவடிக்கைகளில் இறங்குமானால், அது ரஷ்யா உள்ளிட்ட நாடுகளையும், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி உள்ளிட்ட பெரிய நாடுகளையும் போருக்குள் இழுக்கும் மிகப்பெரும் நாசகர முடிவாக அமையும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில், நைஜரில் இருக்கும் தங்களது படைகளை முற்றாக விலக்கிக் கொள்வது குறித்து பிரான்ஸ் ராணுவத் தளபதி, பிரான்ஸ் ஆட்சியாளர்களுடன் பேசி வருவதாக பாரீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2023 ஜூலை 26 அதிகாலை 3 மணி. நைஜர் தலை நகர் நியாமேயில் உள்ள தமது மாளிகையில் ஜனாதிபதி முகமது பஜும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். திடீரென அவரது அறைக்குள் சென்று மெய்க்காவலர்களே அவரை கைது செய்தனர்.  நைஜர் ராணுவத்தின் தளபதி பிரிகேடி யர்  ஜெனரல் அப்தரஹ்மான் சியானி தலைமை யிலான ராணுவத்தினர் உடனடியாக நாட்டின் எல்லைகள் மூடப்படுவதாகவும் நாடு முழு வதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அறிவித்தார். ஜனாதிபதியை சிறை வைத்து, ஆட்சியைக் கைப்பற்றியது நைஜர் ராணுவம். இந்தத் தகவல் அடுத்த சில நிமிடங்களில் ஆப்பிரிக்க நாடுகள் முழுவதிலும் பரவியது. மேற்கு ஆப்பிரிக்க பொருளாதாரக் கூட்டமைப்பு, ஆப்பிரிக்க யூனியன், ஐரோப்பிய யூனியன் ஆகியவை நைஜர் ராணுவத்தை கடுமையாக கண்டித்தன. 

இவர்கள் எல்லோரையும் விட பெரும் அதிர்ச்சி பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் தான். ஏனென்றால் பல நூறு ஆண்டுகளாக நைஜரை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலனி ஆதிக்க சக்தி பிரான்ஸ். 1960 ஆகஸ்ட் 3 அன்று நைஜர் விடுதலை பெற்ற பிறகும் கூட இன்று வரையிலும் அங்கு பிரான்சின்  ஆதிக்கமே நிலவுகிறது. நைஜரின் ஆட்சி யாளர்கள் பிரான்சின் கைக்கூலிகளாகவே செயல்பட்டார்கள்.  இதைவிட இன்னும் அதிர்ச்சி, அமெரிக்கா மற்றும் பிரான்சுக்கு நைஜரிலேயே ராணுவத் தளங்கள் உள்ளன; அந்த ராணுவத் தளங் களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு நைஜர் ராணுவத்தினர் இந்தக் கலகத்தை நடத்தியிருப்பதுதான்.  ஜூலை 28 அன்று நைஜர் தேசியக் கவுன்சிலின் புதிய தலைவராக - அதாவது ஜனாதிபதியாக - பிரிகேடியர் ஜெனரல்  அப்தரஹ்மான் சியானி நியமிக்கப்பட்டிருப்ப தாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராணுவம் வெளியிட்டது.

‘கலகம்’ நடந்த 4வது நாடு

மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜருக்கு அருகே உள்ள பெரிய நாடுகள் மாலி  மற்றும்  புர்கினோ பசோ ஆகியவை. நைஜரில் தற்போது நடந்திருப்பது போலவே மாலியில்  2020 ஆகஸ்ட்டிலும் புர்கினோ பசோவில் 2022 ஜனவரியிலும் கினியில் 2021  செப்டம்பரிலும் ராணுவத்தினர் கலகத்தில்  ஈடுபட்டு, ஆட்சியாளர்களை சிறைப்பிடித்த னர். அடுத்தடுத்து இந்த நாடுகளில் நடந்துள்ள  ராணுவக் கலகங்கள், மக்கள் மத்தியில் அச்ச த்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பதிலாக மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள் ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், தங்களது நாடுகள் மிக நீண்டகாலமாக, நிரந்தரமாக பொருளாதார நெருக்கடியிலும் ஒடுக்குமுறையின் பிடியிலும் இருப்பதற்கு காரணமே இங்குள்ள ஆட்சியாளர்களின் உதவியோடு பிரான்ஸ் மற்றும் அமெரிக்க ராணுவப் படைகள் மிக நீண்டகாலமாக முகாமிட்டிருப்பதுதான் என இம்மக்கள் கருதுகிறார்கள். 

அடிமைகளான ஆட்சியாளர்கள் 

நைஜரில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ராணுவத்தின் முதல் பத்து உயரதிகாரி கள் கூட்டாக அரசாங்கத்தை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு 2010 பிப்ரவரியில் நைஜரில் ஒரு ராணுவக்கலகம் நடந்தது. மீண்டும் 2011-ல் ஜனாதிபதித் தேர்தல்  நடைபெறுகிற வரை ராணுவத்தினர் ஆட்சி  நிர்வாகத்தை நடத்தினார்கள். ஆனால் அப்போதும் ஆட்சிக்கு வந்த நபர்கள் அமெரிக்கா மற்றும் பிரான்சின் அடிமை களாகவே தங்களை நிலைநாட்டிக் கொண்ட னர். குறிப்பாக ராணுவக் கலகத்திற்குப் பிறகு  2011 தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியான மகமதவ் ஐசோபவ், உலகிலேயே அமெரிக்கா வின் மிகப்பெரிய ஆளில்லா போர் விமான  தளத்தை நைஜரின் அகடிசு நகரில் அமைப்ப தற்கு கையெழுத்திட்டார். அதேபோல, பிரான்சின் மிகப்பெரிய யுரேனிய சுரங்கக் கம்பெனியான ஒரானா (முன்பு இது அரீவா என்று அழைக்கப்பட்டது)அமைந்துள்ள இர்லிட் என்ற மிகப்பெரும் நகரத்தின் ஒட்டு மொத்த பாதுகாப்பு நிர்வாகத்தையும் பிரான்ஸ் ராணுவ சிறப்புப் படைகளிடம் ஒப்படைத்தார்.

ஜெனரல் சாலிபவ் மோதி

இப்படி அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர் கள், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஏகாதிபத்தி யங்களின் நலன்களுக்கு அடிமைச் சேவகம் செய்து வந்தது. இது நைஜர் மக்கள் மத்தியிலும் ராணுவ அதிகாரிகள் மத்தியிலும் ஆத்திரத்தை யும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. 2010-ல் ராணுவக் கலகத்திற்கு தலைமையேற்ற அதிகாரியான ஜெனரல் சாலிபவ் மோதி, அடுத்த கிளர்ச்சிக்கான தருணத்திற்காக காத்தி ருந்தார். இந்தப் பின்னணியில் மாலியில் நடந்த ராணுவக் கலகத்தைத் தொடர்ந்து நைஜர் ராணுவத்திற்குள் மீண்டும் கிளர்ச்சி சிந்தனை எழுந்தது. 2023 பிப்ரவரியில் ரோமில் நடைபெற்ற, ஆப்பிரிக்க கண்டத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவப் பிரிவுகளின் கமாண்டர்களது மாநாட்டில், நைஜர் ராணுவத்தின் தளபதி என்ற முறையில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மேற்கண்ட ஜெனரல் சாலிபவ் மோதிக்கு கிடைத்தது. அந்த  மாநாட்டில் பங்கேற்ற அவர், ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமெரிக்க ராணுவம் எப்படியெல் லாம் ஒடுக்குமுறைக்கு திட்டமிடுகிறது என்பதை அறிந்து கொண்டார். இத்தகைய பின்னணி யில் 2023 மார்ச்சில் ஜெனரல் சாலிபவ் மோதி, மாலி நாட்டிற்கு சென்று, அங்கு ஆட்சியைக் கைப்பற்றி நிர்வாகம் நடத்திவரும் ராணுவத் தளபதிகளை நேரில் சந்தித்தார். நைஜர் மற்றும் மாலி ராணுவங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என அவர்கள் முடிவு செய்தனர். இந்த சந்திப்பு, நைஜர் ஜனாதிபதியாக இருந்த முகமது பஜுமுக்கு தெரிந்தே நடந்தது என்ற போதிலும், இரு ராணுவ தளபதிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை ரகசியமானதே!

இதன்பின்னர் ஜூன் மாதத்தில் மேற்கண்ட ஜெனரல் சாலிபவ் மோதி ராணுவத்தி லிருந்து விடுவிக்கப்பட்டு, ஐக்கிய அரபு அமீ ரகத்திற்கான நைஜரின் தூதராக நியமிக்கப் பட்டார். ராணுவத்திற்கு வெளியே அவர் இருந்த போதும், அவரைத் தொடர்ந்து தளபதி யாக பொறுப்புக்கு வந்த அப்தரஹ்மான்  சியானியுடனான தொடர்பிலேயே இருந்தார் என்றும் அடுத்த நகர்வுகள் குறித்து வழிகாட்டி வந்தார் என்றும் நைஜர் தலைநகர் நியாமேவில் தற்போது கூடியிருக்கும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். எனவே நைஜரில் தற்போது நடந்திருப்பது திடீர் கலகம் அல்ல; மாறாக தங்களது நாட்டை கூறுபோடும் அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக நீண்ட நாட்களாக திட்டமிட்டு தெளிவான முறையில் நடத்தப்பட்ட ஒரு ராணுவக் கிளர்ச்சியே ஆகும்.

பிரான்ஸ் கைக்கூலி

சிறைபிடிக்கப்பட்டு அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள ஜனாதிபதி முகமது பஜூமை,  ‘‘ஒரு பிரான்ஸ் கைக்கூலி” என்று ராணுவத்தின ரும் மக்களும் சாடுகிறார்கள். அவரும் அவரது தலைமையிலான பணவெறி பிடித்த கும்பலும் நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும்  பிரான்சிடமிருந்து அடகுவைத்துவிட்டார்கள் என்று குமுறுகிறார்கள். உலகில் யுரேனியம் குவிந்திருக்கும் நாடுகளில் ஒன்று நைஜர் என்பது உலகோருக்கு தெரியாத விசயம். இத்த னை மிகப்பெரிய சொத்து தங்களது பூமியில் இருந்தும், அதை தமது சொந்த மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தாமல் பிரான்சின் கொள்ளைக்காக, பிரான்ஸ் அணுமின் உற்பத்தி கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்காக வாரி இரைக்கும் பாதகத்தைத்தான்  ஜனாதிபதி முகமது பஜும் கடந்த பத்தாண்டு காலமாக செய்து வந்தார் என அந்நாட்டு மக்கள் கொதிக்கிறார்கள்.  

நைஜர் யுரேனியம்  பிரான்சில் ஒளிர்கிறது

நைஜரின் மிகப்பெருவாரியான யுரேனிய கனிம வளத்தை பிரான்சைச் சேர்ந்த ‘சோமைர்’ எனும் கார்ப்பரேட் நிறுவனமே அள்ளிச் செல்கிறது. இந்த நிறுவனத்துடன்  கூட்டு  ஒப்பந்தம் செய்து கொண்டதாக நைஜர் அர சாங்கம் அறிவித்திருந்தாலும், உண்மையில் இந்த நிறுவனத்தின் 85 சதவீத பங்கு பிரான்ஸ் அணுசக்தி ஆணையம் மற்றும் இரண்டு பெரும் பிரெஞ்சு கார்ப்பரேட் கம்பெனிகள் வசமே உள்ளது; வெறும் 15 சதவீத பங்குகளே நைஜர் அரசாங்கத்திற்கு சொந்தம். உலகில் ஒட்டுமொத்த உற்பத்தியாகும் யுரேனியத்தில் 5 சதவீதத்திற்கும் அதிகமான யுரேனியம் நை ஜரிலிருந்து செல்கிறது. நைஜர் யுரேனியம் தான் உலகிலேயே மிக வீரியமும் அதிக எரி திறன் தரமும் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. இது தவிர எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் தங்கம் ஆகியவை குவிந்துகிடக்கிற பூமி நைஜர். பிரான்சில் வீடுகளில் எரியும் ஒவ்வொரு மூன்று மின் விளக்குகளில் ஒரு விளக்கு நைஜரிலிருந்து கிடைக்கப்பெறும் யுரேனியத்தால் உருவான மின்சாரத்தில் எரிகிறது. இத்தனை பெரிய செல்வ வளம் கொண்டுள்ள நாடாக இருந்த போதிலும் நைஜரில் 42 சதவீத மக்கள் கொடிய வறுமையின் பிடியில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக தங்களது கைகளில் இருந்த செல்வ வளங்கள், கனிம வளங்கள் பறிக்கப்பட்டு செல்வதையே நைஜர் மக்கள் வேதனையோடு பார்த்து வருகிறார்கள். 

நைஜரில் ராணுவம் கிளர்ச்சி செய்ததும்; அதற்கு லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு தெரிவித்து தலைநகர் நியாமேயில் கூடியிருப்பதும்; கிளர்ச்சியைக் கைவிட்டு பழைய ஜனாதிபதியையே மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கவில்லையென்றால் ராணுவ நடவடிக்கையை வெளியிலிருந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் மிரட்டலுக்கு பதிலடி கொடுப்பதும்; மீறி உள்ளே நுழைந்தால் வரலாறு காணாத அடியைப் பெறுவீர்கள் என்று கம்பீரமாக எச்ச ரிக்கை விடுப்பதும்... இவை அனைத்தும் பல்லாண்டு காலமாக பிரான்ஸ் ஏகாதிபத்திய த்தின் அடிமைகளாக இருந்த மக்களின் கொந்தளிப்பும் எழுச்சியுமே ஆகும்.

ஜூலை 30 அன்று கூடிய, அமெரிக்கா மற்றும் பிரான்சின் ஆதரவு பெற்ற, ‘மேற்கு ஆப்பிரிக்க பொருளாதாரக் கூட்டமைப்பு’, ஆகஸ்ட் 6க்குள்  ஜனாதிபதி முகமது பஜுமை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்காவிட்டால் ராணுவ நடவடிக்கை உள்பட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நைஜர் ராணுவ தளபதிகளுக்கு மிரட்டல் விடுத்தது. ஆகஸ்ட் 6 அன்று இதற்கு பதிலடி கொடுத்த நைஜர் ராணுவ அதிகாரிகள், பிரான்சின் ராணுவம் உடனடியாக நைஜரை விட்டு முகாம்களை காலிசெய்து வெளியேற வேண்டுமென்று கெடு விதித்தனர். ஆகஸ்ட் 6 அன்று அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஏகாதிபத்தியங்களுக்கு எச்சரிக்கை விடும் விதத்தில், தலைநகர் நியாமேயில் உள்ள விளையாட்டு மைதானத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கூடினர். அவர்களை புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஜெனரல் அப்தரஹ்மான் சியானி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

லிபியாவில் நடந்த பயங்கரத்தின் தாக்கம்

இந்தப் பிரதேசத்தையொட்டி அமைந்துள்ள லிபியாவில் 2011-ஆம் ஆண்டில் நேட்டோ ராணுவத்தை இறக்கி அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் கொடிய தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டன. ஜனாதிபதி மும்மர் கடாபி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். லிபியாவின் அதிக எரிதிறன் கொண்ட பெட்ரோலிய வளத்தை முழுமையாக கைப்பற்றிக் கொண்ட அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள், ஐஎஸ் உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புகளிடம் அந்த நாட்டை ஒப்படைத்தனர். கடந்த 12 ஆண்டுகளாக லிபியாவில் ஆயுத வியாபாரம், மனிதப் படுகொலைகள், மனிதக் கடத்தல்கள், போதைப் பொருள் கடத்தல், இயற்கை வளங்கள் சூறையாடல் என ஏகாதிபத்தியத்தின் வெறியாட்டம் இடைவிடாமல் தொடர்கிறது. அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை நேரடியாக பாதித்துள்ளன. இது மாலி மற்றும் நைஜர் உள்ளிட்ட நாடுகளின் மக்களிடையே கொதிப்பையும் எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட ஏகாதிபத்திய நாடுகளுடன்தான் தங்களது நாடுகளின் ஆட்சியாளர்கள் மிக நெருக்கமான உறவு கொண்டிருக்கிறார்கள் என்பதும் உள்நாட்டு மக்களின் நலன்களைப் புறக்கணித்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஏகாதிபத்திய நலன்களுக்காக சேவகம் செய்பவர்களாக தங்களது ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் மக்களை, ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி உந்தித் தள்ளியது. இந்தப் பின்னணியில் தான், ஊழல் ஆட்சியாளர்களை தூக்கியெறிந்த ராணுவத்தினருக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.