what-they-told

img

பொங்கல் விழாவையொட்டி மண்பாண்டங்கள் தயாரிப்பு பணி மும்முரம்

தஞ்சாவூர், ஜன.6- பொங்கல் விழாவை முன்னிட்டு மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.  கடந்த ஏழு வருடங்களாக விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்த நிலையில் இந்தாண்டு டெல்டா பகுதியில் பருவமழையும், காவிரி கடைமடை பகுதிகளுக்கு காவிரியும் முழுமையாக கைகொடுத்தது. அதனால் இந்த ஆண்டு முழு வீச்சில் விவசாயிகள் பல லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் விவசாயம் செய்துள்ளனர்.  இதில் பொங்கலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணியில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பான நிலையில் உள்ளது. நீலகண்டபுரத்தில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள், மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இவர்களின் முக்கியத் தொழில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாகும், இப்பகுதிகளில் குடிசை தொழிலாகவும் உள்ளது. மண்பானைகள், மண்அடுப்புகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை, உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுக்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

மண்பாண்ட தயாரிப்புக்காக முன்பெல்லாம் ஆறுகள், நீர் ஓடைகள், வாய்க்கால், பகுதிகளில் உள்ள களிமண்கள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து எடுத்து வந்து மண்பாண்டங்களை தயாரித்து வந்தனர். ஆனால் தற்போது இவை அனைத்தும் ஆக்கிரமிப்பில் அடைபட்டு விட்டதால் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. மண்பாண்டத் தயாரிப்பின் முக்கிய அம்சமாக விளங்கும் “திருகுசக்கரம்” வாயிலாகவே மண்பாண்டங்களை தயாரிக்கப்படுகின்றன. மண்பாண்ட தொழிலாளர்கள் இந்த தொழிலால் லாபம் கிடைக்காமல் செய்யும் தொழிலே தெய்வம் எனக் கருதி பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலை நடத்தி வருகிறார்கள். “தொழிலை விடவும் மனமில்லை. தொழிலால் லாபமும் இல்லை” என கவலையுடன் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளர்கள் நீலகண்டன் சங்கரன் (60), ராமமூர்த்தி சங்கரன் (50), முருகேசன் சங்கரன் (40) ஆகியோர் கூறியதாவது,

 “பானைகள், சட்டி மண் மூடிகள் தயாரிப்புக்கான மண் அருகேயுள்ள ஆதனூர் பெரிய ஏரியில் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு மாட்டு வண்டியின் விலை 1,000 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை நீர்விட்டு நனைத்து, குழைத்து, புளிக்க வைத்து, உருப்படிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இவற்றில் செம்மண் கலவை பூசி சூளையில் அடுக்கவேண்டும் இதற்கு தேவையான மட்டை, வைக்கோல் விலையும் அதிகரித்து விட்டது. இதனால் பலர் இத்தொழிலை விட்டு விட்டு மாற்றுத் தொழிலுக்கு சென்றவாறு உள்ளனர். ஆனால் பெரும்பாலோர் பாரம்பரியமான இத்தொழிலை விட மனமில்லாமல் தொடர்ந்து இத்தொழிலை செய்து வருகிறோம்.  இத் தொழிலை குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும்  செய்து வருகிறோம். தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு இதில் லாபம் கிடைக்கவில்லை. தற்போது இங்கு தயாரிக்கும் பொருட்களில் வியாபாரிகளுக்கு பானை ரூ. 40, சட்டி ரூ. 20 க்கும் கொடுக்கிறோம், விநாயகர் சிலை ஒரு அடி 1000க்கு என விற்று வருகிறோம். இப்பொருள்களின் விலை கை மாறுகையில் விலையும் இரட்டிப்பாகி உள்ளது. ஆனால் பொங்கல் நாளில் விலையை பற்றி கவலைப்படாமல் மக்கள் இவற்றை வாங்கி மண்பாண்டத் தொழிலுக்கு ஆதரவளித்து எங்களின் தொழிலை நலிவடைய விடாமல் மீண்டும் புத்துணர்ச்சி அடைய செய்ய பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்” என்றனர்.

;