சென்னை
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெள்ளியன்று (செப். 17) வெளியிட்ட செய்திக்குறிப்பில்,"வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, வரும் 19-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை".இவ்வாறு அதில் புவியரசன் தெரிவித்துள்ளார்.