tamilnadu

img

பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகமே இருண்டு விடுமா? - பெ. சண்முகம்

உயரழுத்த மின் கோபுரத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் குறித்து தமிழக மின்துறை அமைச்சர் தொடர்ந்து தவறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும் கூறி வருகிறார். போராட்டத்தை நடத்துபவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடத்துவதாகவும், விவசாயிகள் அப்போராட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்றும் கூறி வருகிறார். பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டு விட்டதாக நினைத்துக் கொள்ளும் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

கடந்த மூன்றாண்டு காலமாக பலவிதமான தொடர்ச்சியான போராட்டத்தை உயரழுத்த மின்கோபுரத்திற்கு எதிராக கூட்டியக்கம் நடத்தி வந்துள்ளது. பெரும்பாலான போராட்டங்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மற்றும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளனர். கைது செய்யப்பட்ட போதெல்லாம் காவல்துறையினரால் அவர்கள் பெயர், முகவரி, அடையாளம் உள்ளிட்ட விபரங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலை பரிசீலித்தால், இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எத்தனை பேர், இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பதை அமைச்சர் ஆதாரப்பூர்வமாக அறிந்து கொள்ளமுடியும். சம்பந்தப்பட்ட விவசாயிகளின் ஆதரவில்லாமல் இப்படியொரு நீடித்த போராட்டத்தை நடத்த முடியாது என்பதை அரசியல் அரிச்சுவடி மட்டுமே அறிந்தவர்களால் கூட உணர முடியும். இந்தப் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக தூண்டிவிடுகின்றனர் என்ற பிரச்சாரத்தை அமைச்சர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். எந்த போராட்டத்தையும் ஆளும் கட்சி நடத்தாது என்பது அனைவருக்கும் தெரியும். விவசாயிகள் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன என்பதும் அனைவருக்கும் தெரியும்.ஆனால் போராட்டத்தை தூண்டிவிடுவதே எதிர்க்கட்சியினர் என்று சொல்லுவதன் மூலம் விவசாயிகள் சுயமாக முடிவு எடுக்க முடியாதவர்கள் என்று அமைச்சர் சொல்வதாகத்தான் அர்த்தம். நீண்ட காலம் சுயமாக எதையுமே செய்யமுடியாமல் இருந்தவர்கள் இன்றைய அமைச்சர் பெருமக்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அந்தப்பட்டியலில் விவசாய பெருமக்களையும், அமைச்சர் சேர்த்துக் கொண்டு புலம்புவதாகத்தான் தெரிகிறது. ஆனால் விவசாயிகள் தங்களுக்கு பாதிப்பு என்றால் கிளர்ந்து எழுந்து போராடுவர்கள் என்பதற்கு வரலாற்றில் சான்றுகள் நிறைந்துகிடக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறோம். நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் போராடிய போதும் எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாகத்தான் அப்போதைய ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டிருந்தனர். 

நவம்பர் -18 ஆம் தேதி 11 மாவட்டங்க ளில் 24 மையங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. நான் கலந்து கொண்ட திருவண்ணாமலை மையத்தில் 36 பெண்கள் உட்பட 162 பேர் கைது செய்யப்பட்டோம். அதிமுக, திமுகவில் செயல் பட்டுக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட விவ சாயிகளும் இப்போராட்டத்தில் கைதாகியிருந்  தனர். பல மையங்களில் இதுதான் நிலமை. உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டை நாங்கள் தொடர்ந்து கூறிவருகிறோம். அது எந்த அளவுக்கு உண்மையானது என்பதற்கு ஒரு சில உதாரணங்களை இங்கு குறிப்பிடுகிறேன். திருவண்ணாமலை மாவட்டம், குன்னுமுறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ரபீக் பாட்ஷா என்பவருக்கு மின்கோபுரம் அமைக்கப்படும் இடத்திற்கு நஷ்டஈடாக ரூ.10,50,000, அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு ரூ.8,50,000 காசோலையாக தருவதாக சங்கராபுரம் மின் செயற்பொறியாளர் பா.சண்முகவேல் பாண்டியன் திருவண்ணாமலை நகர காவல்துணை கண்காணிப்பாளருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். அதன்படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு காசோலையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரபீக்பாட்ஷா 14 லட்ச ரூபாயும், கண்ணன் 11 லட்ச ரூபாயும் மொத்தத்தில் நஷ்டஈடாக பெற்றுள்ளனர்.

கீழ்ப்பெண்ணாத்தூர் ஒன்றியம் செல்லங்குப்பத்தை சேர்ந்த பவளக்கொடி என்பவருடைய நிலத்தில் மின்கோபுரத்தின் இரண்டு கால்கள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு கால் அருகிலுள்ள மற்றொருவருடைய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பவளக்கொடிக்கு பத்துலட்சம் கொடுத்த பவர்கிரீட் நிர்வாகம் மற்றொருவருக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை. மற்றொருவர் குன்னுமுறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த செல்வி தகராறு செய்ததையொட்டி 22,500 ரூபாய் கொடுத்துவிட்டு ஒரு டவர் போடும் பணிகள் துவக்கியுள்ளனர். பிறகு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலையிட்ட பிறகு மேற்கொண்டு பத்துலட்சம் ரூபாய் கொடுத்து பணியை முடித்துள்ளனர்.

சூரியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்ற விவசாயி நிலத்தின் வழியாக மின்கம்பி செல்கிறது. டவர் இல்லை. மின் கம்பி கொண்டு செல்லக்கூடாது என்று தகராறு செய்துள்ளார். சங்கத்தின் ஆலோசனையோடு பத்துலட்சம் நஷ்டஈடு கேட்டு கடைசியாக ஆறு லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்து கம்பி இழுத்துள்ளனர். அதே கிராமத்தில் கம்பி செல்லும் மற்ற நிலங்களுக்கு எவ்வித நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை. பல இடங்களிலும் இதுதான் நிலமை. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியில் 4 லட்சம் முதல் 6 லட்சம் வரை மின் கோபுரங்களுக்கு பவர்கிரீட் நஷ்டஈடாக வழங்கியதாக விவசாயிகள் தெரிவித்தனர். தகராறு செய்பவர்கள், நிலத்தில் வேலை செய்வதை தடுப்பவர்களுடன் பேரம் பேசி மேற்குறிப்பிட்டபடி பணம் தருவதும், அரசாங்க திட்டம் என்று அமைதியாக தங்களது நிலத்தில் உயரழுத்த மின் கோபுரம் அமைவதை வேடிக்கை பார்க்கும் விவசாயிகளுக்கு பட்டை நாமம் சாத்துவதும்தான் நடந்து கொண்டுள்ளது. நஷ்ட ஈட்டை உயர்த்தி அரசாணை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அரசாணைக்கும் நடைமுறைக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என்பதை மேற்கொண்ட விபரங்களிலிருந்து அமைச்சர் புரிந்து கொள்ள முடியும்.

விவசாயிகளின் மிக முக்கிய கோரிக்கை உயர்மின் கோபுரங்களுக்கு மாதவாடகை தீர்மானிக்க வேண்டுமென்பது. இதுகுறித்து மின்சார சட்டம் 2003ல் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த முடியாது என்று மின்துறை அமைச்சர் பிடிவாதம் பிடிக்கிறார். மக்களை பாதிக்கும் எத்தனையோ சட்டங்களை சிரமேற்கொண்டு அமல்படுத்தும் தமிழக அரசு, நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு சாதகமான “வாடகை” வழங்க வேண்டும் என்ற பிரிவை அமல்படுத்த மறுக்கிறார்கள். இதில் நானும் விவசாயி தான் என்று வசனம் வேறு! மின்உற்பத்தியில், விநியோகத்தில் தனியார் கம்பெனிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏழை எளிய விவசாயிகளின் நிலமதிப்பை இழந்து விரும்பியபடி பயிர்செய்ய முடியாமல், பலவிதமான பாதிப்புகளை ஏன் சுமக்க வேண்டும். நிரந்தரமான இழப்புகளை ஈடு செய்யும் வகையில் நிரந்தரமான வருமானத்தை உத்தரவாதப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பில்லையா? சட்டத்தை அமல்படுத்தாமல் சண்டித்தனம் செய்வதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மட்டுமே அரசு செயல்படுகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

விவசாயிகள் தங்களின் நில உரிமையையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக போராடுகிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரம், காவல்துறை, பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் திட்டத்தை நிறைவேற்ற அரசு நினைத்தால் அதற்குரிய பலனை அரசு அறுவடை செய்தே தீரவேண்டும். அரசின் மேற்கண்ட அணுகுமுறைகள் மூலம் விவசாயிகளுக்கு நிலத்தின் மீதுள்ள உரிமையை அரசு கேலிக்குரியதாக ஆக்கியுள்ளது. எந்த சட்டவிதி முறைகளையும் மதிக்காமல் பெரிய கம்பெனிகளின் வளாகத்திற்குள் அதிகாரிகளால் செல்ல முடியுமா? விவசாயிகளை கிள்ளுக்கீரையாக அரசு நினைப்பதன் காரணமாகத்தான் அடாவடித்தனமான அணுகுமுறையை மேற்கொள்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு கூட எடப்பாடி அரசு தயாராக இல்லை. அதன் விளைவாகத்தான் போராட்டம் தொடர்கிறதே தவிர, துண்டிவிடுவதால் அல்ல. எனவே, தமிழக முதலமைச்சர் போராடும் விவசாயிகள் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டும். நன்றி - பாராட்டு, நாடகங்கள் பிரச்சனைக்கு  தீர்வாகாது. போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டுவராது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைப்போம்.

கட்டுரையாளர் : பொதுச்செயலாளர், 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

 

;