tamilnadu

img

வெள்ளி விழா மாநாடு

பொது இன்சூரன்ஸ் துறையில் சந்திக்கும்  சவால்களை சாதனையாக மாற்றுவோம்!

ஆர்.ராஜேந்திரன், தலைவர், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

ஒரு தொழிற்சங்கம் என்பது ஊழியர்களின் நலனுக்காக மட்டும் இயங்குவது அல்ல. மாறாக சமூக மேம்பாட்டிற்காகவும் சமூக நீதிக்காவும், மக்கள் ஒற்றுமைக்காகவும், நாட்டின் இறையாண்மையை காக்கவும் போராடுவது, செயல்படுவதுதான் சரியான தொழிற்சங்க இயக்கமாக திகழ முடியும். அப்படிப்பட்ட அடிப்படைக் கூறுகளை தன்னகத்தே உள்வாங்கி இயங்குகின்ற ஒரு இயக்கம்தான் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். அதன் துணை அமைப்புதான் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

இன்சூரன்ஸ் தேசியமயமாக்கலின் விதையாக...

இந்தியா சுதந்திரம் பெறும் முன்பு ஆங்கிலேயர்களின் உடைமைகளை பாதுகாக்க அயல்நாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகள் பல வந்தன. அவை எல்லாம் திவாலகின. அயல் நாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகள் இந்தியர்களின் உடைமைகளை இன்சூரன்ஸ் செய்ய மறுத்தன. இந்த சூழலால்தான் திலகர் போன்ற தலைவர்கள் இந்தியர்களுக்கென்று ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி வேண்டுமென்ற சிந்தனைகளை மக்கள் மத்தியில் உருவாக்கினர். அதன் வெளிப்பாடாக “பம்பாய் மியூச்சுவல் லைப் அஸ்யூரன்ஸ் சொசைட்டி” போன்ற நிறுவனங்கள் உருவாகின. இதுவும் தோல்வியை தழுவியது. இப்படி உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் தோல்வியை சந்தித்த பின்னணியில்தான் 1931ல் கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிதி நிறுவனங்கள் வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக இன்சூரன்ஸ் துறை அரசு வசம் இருக்க வேண்டுமென சோசலிஸ்ட்டுகளும், கம்யூனிஸ்ட்டுகளும் தங்களது ஆழமான விவாதங்களை முன்வைத்தனர். இதுதான் இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக ஆரம்பப்புள்ளி.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (ஏஐஐஇஏ)

அதன் நீட்சியாகத்தான், தொப்புள்கொடியாகத்தான் 1951ஆம் ஆண்டு நடந்த AIIEA முதல் மாநாடு இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்க வேண்டுமென கோரிக்கை வைத்தது. பல போராட்டங்களுக்கு பின்பு 1956 ஆம் ஆண்டு எல்ஐசியும், 1972ல் பொது இன்சூரன்ஸ் துறையும் தேசியமயமாக்கப்பட்டது. எனவே இன்சூரன்ஸ் துறையின் ரத்தமும், நாளமுமாக ஏஐஐஇஏ கலந்து இயங்குகிறது.

தனியார்மய எதிர்ப்பாக உதயமானது சங்கம்

இதன் அடுத்தடுத்த வளர்ச்சியில் 1994ஆம் ஆண்டு மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உதயமான நேரம். அந்நிய உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்பந்தங்களுக்கு அடி பணிந்து இன்சூரன்ஸ் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதென மத்திய அரசு முடிவெடுத்தது. “எல்ஐசி மற்றும் ஜிஐசியின் நான்கு நிறுவனங்களிலும் 50 சதவீத பங்குகளை விற்பனை செய்ய வேண்டும்” என்ற மோசமான பரிந்துரையுடன் ஆர்.என்.மல்கோத்ரா கமிட்டி அரசுக்கு அறிக்கை தந்தது. இந்த தேச விரோத செயலை கண்டித்து “இன்சூரன்ஸ் தனியார்மயம், தேச விரோதம், மக்கள் விரோதம்” என்ற முழக்கத்துடன் ஏஐஐஇஏ இந்தியா முழுவதும் வீறுகொண்டு போராட்டங்களை முன்னெடுத்தது.  இன்சூரன்ஸ் தனியார்மய எதிர்ப்பு போராட்டத்தின் துவக்கப்புள்ளி மதுரையில் வைக்கப்பட்டது. 26.1.1994 இந்திய குடியரசு தினத்தன்று “மல்கோத்ரா அறிக்கை எதிர்ப்பு” மாநாடு மதுரையில் நடைபெற்றது. இதில் ஏஐஐஇஏ பிதாமகன் தோழர் என்.எம்.சுந்தரம் “இன்சூரன்ஸ் துறையானது அரசின் இயல்பான ஏகபோகமாக” இருக்க வேண்டுமென சூளுரைத்தார். இது நாடு முழுவதும் பொருளாதார அறிஞர்களிடையே பெரும் விவாதத்தை துவக்கி வைத்தது. 

ஒன்றரைக் கோடி கையெழுத்து கோடி

இன்சூரன்ஸ் துறை தனியார்மயமாக்கலை கண்டித்து 1999 ஆம் ஆண்டு ஒரு கோடி கையெழுத்தை பாலிசிதாரர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் பெறுவது என ஏஐஐஇஏ முடிவு செய்தது. அவ்வியக்கத்தில் மதுரை மண்டலத்தில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் துவங்கி கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என மக்கள் கூடும் பகுதிகளில் கோரிக்கைகளை விளக்கி இதனை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிய பெருமை மதுரை மண்டல சங்கத்திற்கு உண்டு. ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கைத் தாண்டி ஒரு கோடியே 54 லட்சம் கையெழுத்துக்களை அகில இந்திய அளவில் ஏஐஐஇஏ பெற்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

பங்கு விற்பனை எதிர்ப்பில்

1994லேயே பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டுமென அரசு முடிவு செய்தபோதிலும், ஏஐஐஇஏ நடத்திய மகத்தான போராட்டத்தின் காரணமாக 2017 வரை ஒரு சதவீத பங்குகளை கூட தனியாரிடம் விற்க முடியவில்லை. 2017ல் மோடி தலைமையிலான அரசு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி மற்றும் ஜிஐசி ரீ நிறுவனங்களின் 14 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்தது. இதனை எதிர்த்து இந்தியா முழுவதும் பிரச்சாரம் நடைபெற்றது. மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகள் மிகவும் வீரியமாக போராட்டத்தை எடுத்து சென்றதின் பலனாக அரசு நினைத்த அளவிற்கு விற்பனை செய்ய முடியவில்லை. இதன் விளைவாக மற்ற மூன்று நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை அரசு தள்ளி வைத்துள்ளது. இது மாபெரும் போராட்டத்திற்கு கிடைத்த தார்மீக வெற்றியாகும்.

அரசு பொது இன்சூரன்ஸ் 4 நிறுவனங்கள் இணைப்பு

பொது இன்சூரன்ஸ் துறையைப் பொறுத்தமட்டில் அரசு நிறுவனங்கள் நான்கையும் ஒரே நிறுவனமாக இணைக்க வேண்டுமென்பதுதான் ஏஐஐஇஏவின் நீண்ட நாள் கோரிக்கை. நியூ இந்தியா தவிர்த்து நேஷனல், ஓரியண்டல், யுனைடெட் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்படும் என 2018ஆம் ஆண்டு பட்ஜெட் உரையின் போது அப்போதைய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார். ஆனால் 22 மாதங்கள் கழிந்தபின்பும் இணைப்பதற்கான பணிகளில் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை.  ஒரு வலிமையான அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை உருவாக்க நியூ இந்தியா உள்ளிட்ட நான்கு நிறுவனங்களையும் ஒன்றிணைக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேற ஒரு வலிமையான பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் நடத்திட வேண்டுமென ஏஐஐஇஏ முடிவு செய்துள்ளது.

அகில இந்திய வேலைநிறுத்தம் - ஜனவரி 8 

மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்து பல்வேறு மக்கள் - விவசாயிகள், தொழிலாளர்கள், நாட்டு நலனுக்காக கோரிக்கைகளை முன்வைத்து ஜனவரி 8 வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. இது போன்ற இது வரை நடைபெற்ற 18 அகில இந்திய வேலைநிறுத்த போராட்டங்களிலும், ஏஐஐஇஏ உளப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பங்கேற்றுள்ளது. மற்ற தொழிற்சங்க கோரிக்கைகளுடன் ஜிஎஸ்டி வரியிலிருந்து ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு பொது இன்சூரன்ஸ் துறையில் மோட்டார் வாகன மூன்றாம் நபர் காப்பீடு பிரிமியத்திற்கு விலக்கு வேண்டுமென்ற கோரிக்கையையும் உள்ளடக்கி, மிகுந்த ஆணவத்தோடும், எதேச்சதிகாரமாக செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஜனவரி 8 பங்கேற்பதென ஏஐஐஇஏ முடிவு செய்துள்ளது. மதுரை மண்டல சங்கத்தின வெள்ளி விழா மாநாடு இந்த தேச பக்த போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுக்க சூளுரைக்கும்.