tamilnadu

img

இன்றும் தேவைப்படும் விந்தன்... - செப்டம்பர் 22 விந்தன் பிறந்தநாள்

நினைவலைகள்

1956ல் ராஜாஜி எழுதிய பஜகோவிந்தம் என்ற நூலின் கருத்துக்கு மாற்றாக பசி கோவிந்தம் என்ற நூலை விந்தன் எழுதினார். இன்றைக்கும் அது அப்படியே பொருந்துகிறது.
 

வாழ்த்து

“பாரதம் வாழி, பாரதம் வாழி!
பசிகோவிந்தம் பாடப் பசி தந்த
பாரதம் வாழி!
தாய்த்தமிழ் வாழி, தாய்த்தமிழ் வாழி!
தரித்திரத்தில் சரித்திரப் பெருமை பெற்ற
தாய்த்தமிழ் வாழி!”

வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் பெருங்கடல் வாலிபம்! பசிமிக்க பாரதத்தில் வறுமைமிக்கோர் அதைக் கடப்பது கடினம், ஆயினும், வயலில் சிறு வாய்க்காலைத் தாண்டுவதுபோல வாழ்க்கையில் சிலர் வாலிபக் கடலைத் தாண்டிவிடுகின்றனர். அதற்கேற்ற வசதியும் அவர்களுக்குப் பரம்பரை பரம்பரையாகவே இருந்து வருகிறது. சுயாதீனத்தால் சோம்பேறித்தனத்தையும், சுகானுபவத்தால் சொர்க்கலோக இச்சையையும் வளர்த்து வரும் அவர்களுடைய பரம்பரைச் சொத்துக்களைப் பராதீனப்படுத்தி, பசிக்குப் பலியாகும் கோடானு கோடி மக்களைப் பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்ததே இந்த ‘பசிகோவிந்தம்’ பாட்டு. பசி வேறு, பக்தி வேறு என்று பக்குவடையாத சிலர் பேசுவதுண்டு, எடுத்த விஷயத்தைக் குழப்பி, ஏமாந்தவரை லாபம் என்று கருதுவோர் அப்படிப்பட்ட சொற்றொடர்களை ஆங்காங்கே பிரயோகப்படுத்துகிறார்கள்; அவற்றைப் பார்த்து நீங்கள் மயங்கிவிடக் கூடாது. எதையும் ஊன்றிப் படிக்க வேண்டும்; தவறான பொருளை எடுத்துக் கொண்டு ‘ததிங்கிணதோம்’ போடக் கூடாது. பசியும் பக்தியும் ஒன்றே; இரண்டல்ல, பசி முத்தினால் பக்திக்கு அவசியமில்லை; புலன்கள் அனைத்தும் – ஏன், கடைசி மூச்சு உள்பட – தாமாகவே அடங்கிவிடும். ‘தத்துவம்’ இதுவே!.

‘உண்மை’ என்னவென்றால் மண், விண், நீர், நெருப்பு, காற்று ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம். இதனுள் வாழும் உயிர்களும் அப்படியே. பிறப்பினால் பஞ்ச பூதங்கள் சேருகின்றன; இறப்பினால் பஞ்சபூதங்கள் பிரிகின்றன. அவ்வாறு பிரியும் மண் மண்ணோடும், விண் விண்ணோடும், நீர் நீரோடும், நெருப்பு நெருப்போடும், காற்று காற்றோடும் கலந்து எந்தச் சூன்யத்திலிருந்து மனிதன் வந்தானோ, அதே சூன்யத்தில் அவனைக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகின்றன. இதற்குப் பின் இல்லாத ஒன்றைத்தான் மையமாக வைத்துப் பாவமென்றும் புண்ணியமென்றும், நரகமென்றும் மோட்சமென்றும் சொல்லி ஆசான்களும் அடியான்களும் கதைத்து வருகிறார்கள். இந்தக் கதையை நீங்க நம்பவில்லையென்றால், அவர்களுடைய கதி அதோகதிதான்! – அதற்குப் பின் இங்கே சனாதனமும் இருக்காது; சாஸ்திரங்களும் இருக்காது. பாவமும் இருக்காது; புண்ணியமும் இருக்காது. நரகமும் இருக்காது; மோட்சமும் இருக்காது – இத்தகைய நிலைமைக்கு 

நீங்கள் இடங்கொடுத்தால் என்ன ஆகும்? – ‘உழைப்பவன் வாயில் சோறு; உழைக்காதவன் வாயில் மண்ணு!’ என்று மக்கள் அனைவரும் தங்களைத் தாங்களே நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி நம்ப ஆரம்பித்துவிட்டால் இந்துமதமே ஆட்டங்காண ஆரம்பித்துவிடும். அதைக் காத்துத் தங்களையும் காத்துக் கொண்டு வரும் மடாதிபதிகளின் நெற்றியில் விபூதிக்குப் பதிலாக வியர்வையும், அவர்களுடைய கையில் ருத்திராஷ்டத்திற்குப் பதிலாக மண் வெட்டியும் இருக்க வேண்டிய அவசியம் நேர்ந்துவிடும் – இந்த ‘அபாய’த்தைத் தவிர்ப்பதற்காகத்தான் அடியான்களும் ஆசான்களும் நாம் விழித்துக் கொள்ளும் போதெல்லாம் நமக்குத் ‘தத்துவ போதை’ ஊட்டித் தூங்க வைக்கப் பார்க்கிறார்கள்.

‘மதுவிலக்’கால் தீர்க்க முடியாத இந்தப் போதையைத் ‘தத்துவ விலக்’காலாவது நீங்கள் தீர்க்கப் பார்க்க வேண்டும். அதற்கு முதற்படியாகவே இந்நூல் இயற்றப்பட்டிருக்கிறது.

தமிழில் புதிய துறைக்கு வழிகோலும் இதனைத் தமிழுலகம் துணிந்து வரவேற்குமென்று நம்புகிறேன்.

“பாமரர் வாழி, பாமரர் வாழி!

பஜகோவிந்தம் பாடாப் பாமரர் வாழி!”

சென்னை    வணக்கம்,
1-2-56                விந்தன்


 

;