tamilnadu

img

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு

சென்னை,ஆக.12- 73வது சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி தமிழகம் முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.  73ஆவது சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் வெடிகுண்டுகளை கண்டறியும் வீரர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மூன்று ஷிப்டுகளாக ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே காவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே டிஎஸ்பி முருகன் தலைமையில் ரயில்வே காவலர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ரயில் நிலையங்களில் சுமைத்தூக்கும் கூலித் தொழிலாளர்கள், ரயில் நிலையங்களில் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் படியான நபர்கள் இருந்தால் உடனே ரயில்வே காவல் நிலையம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ரயில் நிலையத்தில் இருக்கும் வாகன நிறுத்தத்தில் 8 மணி நேரத்திற்கு மேல் ஏதேனும் வாகனங்கள் இருந்தாலும், சந்தேகப்படும் படியான வாகனங்கள் இருந்தாலும் உடனே தகவல் அளிக்க வேண்டும் என்றும் குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது, சந்தேகப்படும் படியான பொருட்கள் உள்ளதா என கவனமாக பார்த்து சுத்தம் செய்ய வேண்டும் என்று துப்புறவு தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. உதவி எண் 1512, பாதுகாப்பு படை உதவி எண் 182 ஆகியவற்றுக்கு அவர்கள் தகவல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதோடு 24 மணி நேரமும் ரயில் நிலையங்களில் சோதனை நடைபெற உள்ள நிலையில், பயணிகள் தாமதமாக வராமல் முடிந்த வரை தாங்கள் பயணிக்க உள்ள ரயிலின் நேரத்திற்கு முன்பு ரயில் நிலையங்களுக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தில்லியிலிருந்து மற்ற மாநி லங்களுக்கும், மற்ற மாநிலங்களிலிருந்து தில்லிக்கும் ரயில்கள் மூலம் பார்சல்கள் கொண்டு செல்ல தடை விதித்து, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.