tamilnadu

img

கோஷமிட்ட கைகள் புத்தாண்டில் கோலமிடட்டும்

மாதர் சங்கம் அழைப்பு 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து  இந்தியா முழுவதிலும் தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழகத்தின் அதிமுக அரசு,  இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சத்தைத் தகர்த்ததோடு தமிழகத்தில் போராடிவரும்  பொதுமக்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரையும் கைது  செய்வது; போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது என ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று பெசன்ட் நகர் பகுதியில்  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலமிட்ட 5 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடந்த டிசம்பர் 21அன்று வாலிபர், மாணவர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட  அமைப்புகளோடு இணைந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்பு மறியல் போராட்டம் நடத்தி 86 பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டங்களை ஜனநாயக மாதர் சங்கம் முன்னெடுத்து வருகின்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தமிழக  அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது. வருகின்ற புத்தாண்டு தினத்தன்று ஜனநாயக மாதர் சங்கத்தின்  கிளைகள் தோறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் “இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், குடியுரிமை திருத்த சட்டத்தை நிராகரிப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து வீடுகள்தோறும் கோலங்கள் இட்டு நமது எதிர்ப்புகளை பதிவு செய்வோம்.  கடந்த காலங்களில் வன்முறைக்கு எதிராகவும், இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கவும்  கோஷமிட்டு உயர்ந்த நமது கரங்கள் புத்தாண்டில் வீடுகள் தோறும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலமிட்டு புத்தாண்டை வரவேற்கட்டும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

;