tamilnadu

img

ஜன.8 அன்று புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம்

தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவிப்பு

புதுச்சேரி,ஜன.2- மத்திய அரசின் தொழிலாளர் விரோத  கொள்கைகளை கண்டித்து  ஜனவரி 8-ல் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். சிஐடியு, ஏஐடியூசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள் முருகன்,சேது செல்வம், சீனிவாசன், ஞானசேகரன் ஆகியோர் கூட்டாக வியாழனன்று(ஜன.2) செய்தியாளர்களிடம்  கூறியதாவது:- தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரம், ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும். நிரந்தரமற்ற தொழிலாளர் முறைகளை ஒழித்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தையும்,  குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் கைவிட வேண்டும். கார்ப்பரேட், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும்.  மோட்டார் வாகன  திருத்தச் சட்டம் மற்றும் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும்,அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும். கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை 300 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 40 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தையொட்டி புதுச்சேரி மாநிலத்தில்   முழுஅடைப்பு (பந்த்) போராட்டம்  நடைபெறும். இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து பகுதி மக்களும், வியாபாரிகளும் ஆதரவு தரவேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். இச்சந்திப்பின் போது  எல்பிஎப் தொழிற்சங்க நிர்வாகி அண்ணா அடைக்கலம், ஏஐசிசிடியூ மாநிலச் செயலாளர்  மோதிலால், எல்எல்எப் நிர்வாகி செந்தில், அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் பிரேமதாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;