tamilnadu

img

விசாரணை தேவை! - சு.வெங்கடேசன் எம்.பி.,

ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் மீது அல்ல...  உங்கள் பொருளாதார பாதை மீது...

நிதி அமைச்சர் அவர்களே!

கொரோனாவால் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என 50 க்கும் மேற்பட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளின் குழு அறிக்கை மத்திய நேரடி வரி ஆணையத்திற்கு தரப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் ஃபோர்ஸ் (FORCE - Fiscal Options & Response to Covid - 19 Epidemic) என்று பெயர் வைத்துள்ளனர். அவர்களின் கீழ்க்காணும் ஆலோசனைகள் ஆழ்ந்த பரிசீலனைக்கு உரியவை.


*     சூப்பர் ரிச் (மிகப் பெரும் பணக்காரர்கள்) மீது வரி போடலாம்.

*     கோவிட் 19 செஸ் 4% ஐ விதிக்கலாம். நடுத்தர வர்க்கம் பாதிக்கப்படாமல் இருக்கிற வகையில் வருமான வரம்பை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

*     1 கோடிக்கு அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கு 40 % வரி என்கிற விகிதத்தை கொண்டு வரலாம்.

*     5 கோடி, அதற்கும் மேலான நிகர செல்வ இருப்பு உள்ளவர்கள் மீது செல்வ வரியை அறிமுகம் செய்யலாம்.

*     சர்வதேச வரி என்ற முறையில் இந்தியாவில் கிளை/நிரந்தர அலுவலகம் உள்ள அதிக வருமானம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் மீது சர்சார்ஜ் அதிகரிக்கலாம்.

*     சி.எஸ்.ஆர் நிதியை (கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி) கோவிட் நிவாரணப் பணிக்கு நிறுவனங்கள் பயன்படுத்தினால் அது பிரிவு 37 ன் கீழ் 2020-21 நிதியாண்டிற்கு கழிவாக அனுமதிக்கப்படலாம்.

இம் முன்மொழிவுகளை அமலாக்குவதன் மூலம் பல்லாயிரம் கோடி கிடைக்கும். அதைப் பொருளாதாரத்தை உயிர்ப்பிக்க எப்படி பயன்படுத்தலாம் என்றும் அவர்களின் அறிக்கை கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடே நெருக்கடியில் ஆழ்ந்திருக்கிற வேளையில் வருமான திரட்டலில் பெரும் அனுபவம் உடைய 40 ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் விவாதித்து அரசுக்கு தந்துள்ள அறிக்கை இது. ஆனால் மத்திய நேரடி வரி ஆணையம் (CBDT) இந்த அறிக்கையை ஏற்க மறுத்திருப்பதோடு, எப்படி தங்களின் அறிவுறுத்தல் இல்லாமல் அவர்கள் பரிந்துரைக்கலாம் என விசாரணை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. நிபுணர்களின் அனுபவங்களை அரசுகள் காது கொடுத்து கேட்க வேண்டிய நேரமிது. அலுவலகத்தின் கோப்புகளுக்குள் முகம் புதைத்து மக்களின் பசித்த முகம் பார்க்கத் தவறுபவர்கள் என்றிருக்கிற அவப் பெயரை துடைத்து தேசத்திற்காக சிந்திக்க முனைந்திருக்கிற இந்த ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள்.

நிதி அமைச்சரே! ஏன் மத்திய நேரடி வரி ஆணையம் அவசர அவசரமாக இந்த அறிக்கையை மறுதலிக்க வேண்டும்? ஏன் பல்லாண்டு காலம் இத் துறைக்கு தங்களின் அரிய சேவையை தந்துள்ள இந்த உயர் அதிகாரிகள் மீது கோபப்பட வேண்டும்?

அந்த அறிக்கையில் இருப்பது “தவறாகக் கருக் கொண்ட கருத்துக்கள்” என்று ஏன் கடுமையாக விமர்சிக்க வேண்டும்?

6 ஆண்டு கால ஆட்சியில் 33 சதவீத கார்ப்பரேட் வரிகளை 22 சதவீதத்திற்கு, ஏன் சில நிறுவனங்களுக்கு 15 சதவீதம் வரை கூட குறைத்த நீங்கள் சூப்பர் ரிச் மீது வரி போட வேண்டுமென்றால் இவ்வளவு பதறுவது ஏன்? பன்னாட்டு நிறுவனங்கள் மீது சர் சார்ஜ் போடுங்கள் என்றால் இவ்வளவு பதட்டம் அடைவது ஏன்? சாதாரண கிளர்க், பியூன்களின் அகவிலைப் படி உயர்வை பறிப்பதற்கான கையெழுத்தைப் போடும் போது நடுங்காத கரங்கள் இதற்கு மட்டும் ஏன் நகர மறுக்கின்றன?

நிதி அமைச்சரே!

ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு செவி மடுங்கள்.

விசாரணை தேவையென்றால் அது ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் மீதான விசாரணையாக இருக்கக்கூடாது, நாட்டை சீரழித்துக்கொண்டிருக்கும் உங்களின் பொருளாதார பாதையின் மீதான விசாரனையாக இருக்க வேண்டும்.