tamilnadu

img

மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்தது என்ன?

மதுரை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு உடைக்கப்பட்டது குறித்து 21.4.2019 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையீடு செய்தனர். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி இதுகுறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டார். 22.4.2019 இல் அவர் மதுரை வந்து விசாரணை நடத்தி 23.4.2019 இல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையின் விபரங்கள் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன.


அந்த அறிக்கையில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி கவனித்த அம்சங்களை கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளார்: 


1. மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை ஏப்.19 ஆம் தேதி அன்றே தேர்தல் பார்வையாளர், போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில், முத்திரையிடப்பட்டு, அவை காணொலி காட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 6 அறைகளில் மூன்றில் கதவுகள், ஜன்னல்கள், பூட்டுகள் ஆகியவற்றில் பார்வையாளர், வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோரின் கையெழுத்துக்கள் இல்லை. அதேபோன்று, மேற்படி அறைகளின் சாவிகள் உடனடியாக கருவூலத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த அறைகளின் சாவிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துணை தேர்தல் அதிகாரி, தாசில்தார்களிடம் இருந்திருக்கின்றன. 


2.இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குகள் மூன்று தளங்களில், அதாவது, தரைத்தளத்தில் மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு தொகுதிகள்; முதல் தளத்தில் மேலூர், மற்ற 3 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எந்திரங்கள் மற்றும் அவற்றின் ஆவணங்கள் இரண்டாவது தளத்திலும் வைக்கப்பட்டிருக்கின்றன. மாவட்ட நிர்வாகம் உரிய திட்டத்தை வகுக்காததால், மதுரை மேற்கு தொகுதி ஆவண அறைக்குள் தாசில்தார் கே.சம்பூரணம் நுழைந்த பிறகுதான், காவல்துறையில் இருந்தவர்களுக்கும் மின்னணு எந்திரங்களுக்கு அருகில் இருந்த அறையில்தான் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன என்பதும் இவை முத்திரையிடப்படவில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த அறைகள், 21.4.2019-க்குப் பிறகு முத்திரையிடப்பட்டுள்ளன. அதுவரையிலும், அவை முத்திரையிடப்படாமலேயே இருந்திருக்கின்றன.


3.மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளரின் அறிவுரையின்பேரில், துணை தேர்தல் அதிகாரி குருச்சந்திரன், கே.சம்பூரணத்தை, மதுரை மேற்குத் தொகுதியின் வாக்குச்சாவடி அதிகாரிகளின் டைரி மற்றும் 17ஏ படிவத்தை எடுத்து வருவதற்காக அனுப்பியிருக்கிறார். ஏப்.19 ஆம் தேதியன்று, தேர்தல் முடிந்தபிறகு சம்பந்தப்பட்ட அறையை முத்திரையிடும் வேலையை குருச்சந்திரன், தாசில்தார் கோபியிடம் ஒப்படைத்துவிட்டு, மதுரையை விட்டுச் சென்றிருக்கிறார். மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியுள்ளபடி, குருச்சந்திரன் தேர்தல் வேலைகளில், உண்மையாக இல்லாமலும், தயக்கத்துடனும் ஒரு மாத காலமாக செயல்பட்டிருக்கிறார். குருச்சந்திரன் அறிவுறுத்தலின்பேரிலேயே, கே.சம்பூரணம், மதுரை மாநகராட்சியின் உதவியாளராக பணிபுரியும் பி.சூர்யபிரகாஷ், இளம் உதவியாளராக பணிபுரியும் பி.ராஜபிரகாஷ் மற்றும் உதவி ஆணையாளர் (கலால்) அலுவலகத்தின் ஆவண எழுத்தராக பணிபுரியும் என்.சீனிவாசன் ஆகியோர் மதுரை மேற்கு தொகுதியின் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் 20.4.2019 அன்று பிற்பகல் 3.20 மணிக்கு சென்றிருக்கிறார்கள். அந்த அறையில், மாலை 6.39 மணி வரை இருந்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட ஆவணங்களை எடுத்து வந்து, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே உள்ள தனியார் கடையில், அந்த ஆவணங்களின் நகல்களை எடுத்துவிட்டு, 5.39 மணிக்கு திரும்ப உள்ளே சென்றுவிட்டார். இந்த வேலைக்கு பணிக்கப்பட்ட நபர்கள் 4.30 மணி முதல் 5.00 மணி வரை பல பண்டல்களையும் ஆவணங்களையும் தாள்களையும் நகல் எடுத்திருக்கிறார்கள். இதுகுறித்து, கூடுதல் விவரங்களை அறிவதற்கு மதுரை துணை காவல் ஆணையரிடம் கேட்கப்பட்டுள்ளது.


4.இந்த 4 நான்கு பேர் உள்ளே நுழையும் போது, எண்ணிக்கை மையத்தில் காவல் பணியிலிருந்தவர்கள், 4 பேரின் அடையாள அட்டையை பரிசீலிக்காமலேயே இரண்டாவது தளம் வரை செல்வதற்கு அனுமதித்துள்ளனர். 3.20 மணிக்கு உள்ளே சென்றவர்களை 6.18 மணிக்குத்தான் ஏறத்தாழ 3 மணி நேரம் ஆனபிறகுதான், திடீர்நகர் காவல் ஆய்வாளர் (குற்றப்பிரிவு) டி.கே.சி.மங்யைர்திலகம், முத்திரையிடப்படாத அறையில் ஏதோ நடப்பதை அறிந்து, அந்த அறையில் இருந்தவர்களிடம் விசாரித்திருக்கிறார். உடனடியாக அவரது, மேலதிகாரிகளுக்கு இதை தெரிவித்து, அனுமதியின்றி வந்த 4 பேரையும் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறவும் ஆவணங்கள் மற்றும் நகல்களை பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு செல்லும்படியும் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், இந்தப் பிரச்சனை குறித்து எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. 


5.இந்நிலையில்தான், சுமார் 7.35 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மூத்த வருவாய்த்துறை அதிகாரிகள் தலையிட்டு, அந்த 4 பேரையும் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து அழைத்துச் சென்றிருக்கிறார். 


6.இந்தப் பிரச்சனை குறித்து அறிந்த வேட்பாளர்களும் அவர்களது முகவர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு கூடி, இரவு 12 மணி வரை போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ச.நடராஜனை தொடர்பு கொள்ள தொடர்ச்சியாக முயற்சித்தபோதும், அவர் தொடர்புக்கு வரவில்லை.இப்படியாக குறைபாடுகளை சுட்டிக் காட்டியுள்ள கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி மேலும் பல விபரங்களை தனது விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 


எந்தெந்தப் பொருட்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது. எந்த அறையில் என்னென்ன இருக்கிறது என்பது குறித்த திட்டம் எதுவும், இந்த பிரச்சனை வெளியே தெரியும்வரை உருவாக்கப்படவும் இல்லை; அவற்றைப் பற்றி காவல்துறைக்கும் பாதுகாப்பு பணியிலிருந்தவர்களுக்கும் எதுவும் தெரியாது. மாணவர்களும் ஆசிரியர்களும் வந்து செல்கிற மருத்துவக் கல்லூரிக்குள் இந்தத் திட்டங்களெல்லாம் இல்லாமல், பாதுகாப்பு ஏற்பாடு என்பது மிகவும் கடினமாகும். இந்திய தேர்தல் ஆணையத்தின் இதுகுறித்த அறிவுரைகள் எதுவும் லாக் புத்தகத்தில் எழுதப்படவும் இல்லை. அப்படியொரு புத்தகம் 21.4.2019 வரை பராமரிக்கப்படவும் இல்லை. இது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை அப்பட்டமாக மீறியதாகும். 


மாவட்ட தலைநகரத்தில் வாக்கு எண்ணும் மையம் இருந்தால், மாவட்ட தேர்தல் அதிகாரி தினமும் காலையும் மாலையும் மையத்திற்குச் செல்ல வேண்டும் என லாக் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் இருக்கும் நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி 19.4.2019-க்குப் பிறகு இன்னும் சொல்லப்போனால், பாதுகாப்பு உடைக்கப்பட்டு, நள்ளிரவில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போதும் கூட, வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லவில்லை. இது நிலைமையை கூடுதலாக சிக்கலாக்கியதோடு, பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பற்றிய நம்பிக்கையை கணிசமான அளவு பாதித்தது. இரவு 11.30 மணிக்குத்தான் காவல்துறை துணை ஆணையர் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.


தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கெசட்டட் அதிகாரியும் போலீஸ் அதிகாரியும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் முறையாக பின்பற்றப்படவில்லை. அந்த கெசட்டட் அதிகாரியும் இந்தப் பிரச்சனை நடந்த போது, வாக்கு எண்ணிக்கை மையத்தில் இல்லை. மதுரை போலீஸ் துணை கமிஷனர் (குற்றப்பிரிவு) மோகன்தாஸ் காவல் பணிக்கு பொறுப்பாக்கப்பட்டிருந்தாலும், அந்த நேரத்தில் அங்கு இல்லை. 


தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கை மையத்தை பாதுகாப்பது குறித்த நடைமுறைகளை பின்பற்றுவதில் மாவட்ட ஆட்சித்தலைவர் அக்கறையின்றியும் கவனமின்றியும் நடந்து கொண்டார் என்று வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் முகவர்களும் தெரிவித்தார்கள். இவ்வாறு மிக விரிவாக பதிவுசெய்துள்ள கூடுதல் தேர்தல் அதிகாரி பாலாஜி கீழ்க்கண்ட தனது முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார்:


1.கே.சம்பூரணம் மற்றும் மூவர் முத்திரையிடப்படாத மதுரை மேற்கு தொகுதியின் அறைக்கு துணை தேர்தல் அதிகாரி குருச்சந்திரன் அறிவுரையின் பேரிலேயே சென்றிருக்கிறார்கள். குருச்சந்திரனுக்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது)தான் இந்த அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறார் என்பது தெளிவு. அவர்கள், மேலதிகாரியின் ஆணையை நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலையும் அறிவுரைகளையும் பின்பற்றவில்லை. 


2.துணை தேர்தல் அதிகாரி குருச்சந்திரன் ஒரு பொறுப்பற்ற அரசு ஊழியராக நடந்து கொண்டுள்ளார். அவருடைய அனைத்துப் பணிகளையும் தனக்கு கீழே உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறார். வாக்கு எண்ணும் பணி மிக நுணுக்கமாகவும் திறமையாகவும் நடத்தப்பட வேண்டிய ஒன்று. அவற்றை நடத்துகிறவர்களாக அவரால் பணி ஒப்படைக்கப்பட்டவர்கள் இல்லை. 


3.காவல்துறை அதிகாரிகளைப் பொறுத்தமட்டில், அவர்கள்தான் உள்ளே நுழைந்தவர்களை கண்டுபிடித்து விதிமீறலை வெளியே கொண்டு வந்தவர்கள். ஆனால், வாக்கு எண்ணிக்கை மையம் குறித்த அவர்களுடைய புரிதல் மிகவும் மோசமாக இருக்கிறது. மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்குமான ஒருங்கிணைப்பு பெரிய அளவிற்கு முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. 


4.மாவட்ட ஆட்சித்தலைவர்தான் தேர்தல் நடத்தும் அதிகாரி. அவர்தான் தேர்தலை நடத்துவதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் பொறுப்பானவர். அவர், தேர்தல் நடத்துவதில் வெளிப்படைத் தன்மையை உத்தரவாதப்படுத்தியிருக்க வேண்டும். அதன்மூலம், குறைபாடுகளோ அல்லது சார்புத்தன்மையோ குறித்த புகார்கள் வராமல் பார்த்திருக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையோடு இருப்பது தேர்தல்களின் நம்பகத் தன்மையை மேம்படுத்தும். அரசியல் கட்சியினருக்கும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளை அவ்வப்போது சொல்வது மிக மிக முக்கியமானது. ஊடகங்கள் மூலம் மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், அச்சங்களைப் போக்குவதற்கு தகவல்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் சட்டத்தில் உள்ள ஷரத்துக்கள் பற்றியும் ஆணையத்தின் அவ்வப்போதைய அறிவுறுத்தல்கள் பற்றியும் முழுமையாக தெரிந்திருப்பதோடு, அவற்றை திறமையோடும் கவனத்தோடும் நிறைவேற்றுவதன் மூலம் தேர்தலை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்த வேண்டும். 


5.மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் கவலைகளையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு திறமையாகவும் கவனமாகவும் திட்டமிடுவது அவசியமாகும். 

எனவே, மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியும் அங்கு நீடிப்பது தேர்தலை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்த உதவாது.இவ்வாறு விரிவான முறையில் கூடுதல் தேர்தல் அதிகாரி பாலாஜி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

தொகுப்பு: க.கனகராஜ்


;