tamilnadu

img

மதத்திற்கும் அதிகாரத்திற்குமான முரண் குறித்து பேச வேண்டும் குறும்பட விழாவில் சு.வெங்கடேசன் எம்பி பேச்சு

மதத்திற்கும் அதிகாரத்திற்குமான முரண் குறித்து அனைவரும் பேச வேண்டும் என சென்னை குறும்பட விழாவில் சு.வெங்கடேசன் எம்பி கேட்டுக்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல் தேவாலயத்தின் வரலாறு குறித்து, கட்டியங்காரி குழுவினர் இயக்கிய ‘வெஸ்ட் மினிஸ்டர் அபே ஆப் தி ஈஸ்ட்’ என்ற குறும்பட வெளியீட்டு விழா சென்னையில் வியாழனன்று (அக். 13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், “ஒரு கலைப்படைப்பு குறித்து வரலாற்று பின்னணியோடு இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தேவாலயத்தின் கதை மட்டுமல்ல, ஒரு தேசத்தின் கதை. நம் தேசத்தின் கதை மட்டுமல்ல. நம்மை ஆண்ட தேசத்தின் கதை. தேவனின் பெயரால் அந்த ஆட்சி நடைபெற்றிருக்கிறது என்பது தேவனின் கதையாகவும், ஆளப்பட்ட மனிதர்களின் கதையாகவும் இதை பார்க்க வேண்டும்” என்றார். ராபர்ட் கிளைவ் குண்டு துளைக்காத தேவலாயத்தினால்தான் உயிர் பிழைத்தார் எனும் போது, தேவன் மீது கூட ஒரு அச்சம் ஏற்படுகிறது. பிரிட்டீஷ் ஆட்சியாளர்களிடம் இந்த நிலம் இல்லாமல் போர்ச்சுகிசியர்கள் இடம் இருந்திருந்தால் இதை விட பல மடங்கு ரத்தத்தை மக்கள் இந்த மண்ணில் சிந்தியிருப்பார்கள். ஏனென்றால் போர்ச்சுக்கல் கைப்பற்றிய இடங்களில் நிகழ்ந்த காட்சிகளை நினைத்துப் பார்த்தால் பிரிட்டிஷார் ஆட்சி அதைவிட மேல் என்று கூறலாம். இன்றைய சமூகத்தில் நிகழ்ந்திருக்கக் கூடிய சமூக மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மன்றோ. அவர் இல்

லை என்றால் தமிழ்நாடு இன்னொரு பீகாரகவோ, உத்தரபிரதேசமாகவோ இருந்திருக்கும். ஜமீன்தார் முறையை ஒழித்து ரயத்வாரி முறையைக் கொண்டு வந்ததன் மூலம் 350 ஆண்டுகளுக்கு முன்பே நிலக்குவியலுக்கு முடிவு கட்டிய ஜனநாயகக் கூறு மிக மிக முக்கியமானது. இந்த மண்ணில் போற்றப்பட வேண்டிய மிக முக்கியமான ஆளுமை மன்றோ என்றும் அவர் கூறினார். 350 ஆண்டுகால தேவாலயத்தின் வரலாற்றை மிக நேர்த்தியாக தொகுத்து வழங்கியுள்ளனர். கடந்த 300 ஆண்டுகால இந்திய வரலாறு தேவாலயங்களுக்குள்ளும், ஆவணக் காப்பகங்களுக்குள்ளும் மட்டுமே உள்ளன. இந்த வரலாறு எழுதப்படும் போதுதான் பல வரலாற்றின் வாசல்கள் திறக்கும். கிளாரிண்டா தேவாலயத்தினுடைய வரலாற்றை எழுதினால் அதுதான் தென்னிந்தியாவின் ஒரு குதூகலமிக்க ஆவணமாக இருக்கும். அமெரிக்க மிஷனரி மதுரை தேவாலயத்தினுடைய வரலாற்றை எழுதினால் 200 வருட தென் தமிழகம் எப்படி இருந்தது என்பதற்கான ஆவணங்கள் கிடைக்கும். இறைப்பணியாளர்களுக்கும் காலனி ஆட்சியாளர்களுக்கும் இருந்த முரண், அதுதான் மதத்திற்கும் அதிகாரத்திற்குமான முரண். இவற்றை நீங்கள் பேச முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஒரு பெரும் இயக்கத்தை துவக்கியிருக்கிறீர்கள். தேவாலயம் குறித்த முதல் ஆவணப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று கூறிய அவர், ஒரு தேவாலயத்தின் கதையை இந்து மதத்தைச் சேர்ந்த ஸ்ரீஜித், கிறித்துவ மதத்தைச் சேர்ந்த கிருபா லில்லி எலிசபெத், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ரபீக் இஸ்மாயில் இணைந்து உருவாக்கியிருக்கிறார்களே, இதுதான் இந்தியாவின் அழகியல். இந்த அழகியல் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதை சில சக்திகள் மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் சிதைக்க நினைக்கிறார்கள். அந்த அழகியலை அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாப்போம் என்றார். திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், சாதிய ஏற்றத்தாழ்வுகள், வர்க்க பேதங்கள் சமூகத்தில் நிலவி வந்த காலத்தில், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக கிறித்துவர்கள் பாடுபட்டார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. வரலாற்றை மறைப்பதும், வரலாற்றிற்கு புதிதாக காவி சாயம் பூசுவதும் ஒரு சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே காட்சி ஊடகங்களின் மூலமாக உண்மையான வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இவர்கள் நம்மை மதம் மாற்றம் செய்ய வந்தவர்கள்,. இவர்கள் காலனி ஆதிக்கத்தின் எச்சங்கள் என்று ஒதுக்க நினைக்கிறார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்கியதில், தன்னைச் சுற்றியிருந்த மக்களை கை தூக்கி விடுவதில் கிறித்துவ மிஷனரிகளின் பங்களிப்பு மகத்தானது. இது மதம் சார்ந்த விஷயமல்ல, மனிதம் சார்ந்த விஷயம். அந்த வகையில் அனைவரும் ஒன்றினைந்து மனித்தத்தை பாதுகாப்போம் என்றார். இதில் பிஷப் ஜே.ஜார்ஜ் ஸ்டீபன், ஜி.தேவாசிர்வாதம், திரைப்பட இயக்குநர் வசந்த பாலன், இயக்குநர் பிரசாத் முருகன், ஆவணப்பட இயக்குநர் கோம்பை எஸ்.அன்வர், முன்னாள் டிஜிபி எம்.ரவி ஆகியோரும் பேசினர்.

;