tamilnadu

img

தமிழ்நாடு அரசை தவறாக வழிநடத்தும் அதிகாரிகளை விடுவிக்க வேண்டும்!

சென்னை, மே 2 - தமிழகத்தை திமுக அரசு ஆட்சி செய்கிறதா? அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? என்று மூத்த தொழிற்சங்கத் தலைவர் டி.கே.ரங்கராஜன் கேள்வி எழுப்பினார். 137 வது மே தின பேரணி - பொதுக் கூட்டம் திங்களன்று (மே 1) கோயம்பேட்டில் சிஐடியு - ஏஐடியுசி  தென்சென்னை மாவட்டம் சார்பில்  நடைபெற்றது. சிஐடியு தென்சென்னை  மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற  இந்த பொதுக்கூட்டத்தில் மூத்த தொழிற் சங்க தலைவர் டி.கே.ரங்கராஜன் பேசியதன் சாராம்சம் வருமாறு: நிதி மூலதன கொள்கையை அடிப் படையாக கொண்ட ஆர்எஸ்எஸ்-சின் அரசியல் பிரிவான பாஜக ஆட்சியில் இருக்கிறது. நிதி மூலதனத்திற்கு ஆதரவாக சாதியவாதமும், மதவாத மும் இருக்கிறது. சாதிய, மதவாதத்தை நிதி மூலதனம் பாதுகாக்கிறது. நிதி  மூலதனத்தை ஒழிக்காமல் சாதிய, மதவாதத்தை ஒழிக்க முடியாது. ராமர் கோவிலை எல் அண் டி நிறுவனம் கட்டுகிறது. 3 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மசூதிகளை இடித்துவிட்டு கோவில் கட்ட உள்ளதாக ஆர்எஸ்எஸ் கூறுகிறது. ஒன்றுபடு, போராடு என்பதை சாதிய வாதம், நிதி மூலதனமும் ஏற்கவில்லை. ஒன்றுபட்டு போராடியதால்தான், முதலமைச்சர் கொண்டு வந்த 8 மணி வேலை நேரத்தை நீக்கும் சட்டத்தை அவரே திரும்ப பெற்றுள்ளார். 8 மணி வேலை நேர முறை நீக்கும் சட்டத்தை  எதிர்த்த தொமுச-வை பாராட்டுவோம். தமிழகத்தை திமுக அரசு ஆட்சி செய்கிறதா? அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? அதிகாரிகள் அரசை தவறாக வழிநடத்துகிறார்கள். திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டு மானால், இந்த சட்டத்தை கொண்டு வர காரணமான அதிகாரிகளையும் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

கோணலாக மாறிய விரல்கள் 

 12 மணி வேலை நேரம் என்பது சமூக நீதியா? ஒருசில பத்திரிகைகள், குளுகுளு அறையில் 12 மணி நேரம்  வேலை செய்வது சிரமம் இல்லை என்கின்றன. ஐடி துறையில் பணிபுரிப வர்களுக்கு பார்வை மங்கி உள்ளது. விரல்கள் கோணலாக மாறியுள்ளது. இதுகுறித்தெல்லாம் ஆய்வு இல்லை. எனவே, நாட்டிற்கே முன்மாதிரியாக தமிழ்நாடு அரசு ஐடி-துறை பணி அபாயங்கள் குறித்து (ஆக்குபேஷனல் அசார்டு) ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளில் ஒன்றிய அரசை எதிர்கொள்ள பாஜக அல்லாத முதலமைச்சர்களிடம், தொழிற்சங்கங்களிடம் முதலமைச்சர் விவாதிக்க வேண்டும். இடதுசாரிகள்  ஆளுநருக்கு எதிராக போராடு கிறோம். ஆனால் திமுக-வின் கோபம் சட்டமன்றத்தோடு முடங்கிவிடுவது ஏன்? இந்த எச்சரிக்கை அனைத்து விஷ யங்களிலும் இருக்க வேண்டாமா? அரசியல் அமைப்புச் சட்ட விதிகளுக்கு புதிய வியாக்கி யானங்கள் தரப்படுகிறது. அதை  ஊடகங்கள் விவாதிக்கின்றன. அனைத்து துறைகளிலும் வலதுசாரிகளை நிரப்பி  வருகின்றனர். எனவேதான், நீதிபதி களை நியமிக்கும் உரிமையையும் அரசுக்கு தர பாஜக கோருகிறது. தற்போதுள்ள கொலிஜியம் முறையை முழுமையாக இடதுசாரிகள் ஏற்க வில்லை. அதேசமயம், பாஜக கோரு வதை அனுமதிக்கவும் முடியாது. அனைத்து இடங்களிலும் புதிய சூழல் உருவாகி இருக்கிறது. அதற்கேற்ப தொழிலாளி வர்க்கம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.