tamilnadu

img

திருபுவனம் தோழர் சா. ஜீவபாரதி காலமானார் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு இன்று உடல் தானம்

திருபுவனம் தோழர் சா. ஜீவபாரதி காலமானார் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு இன்று உடல் தானம்

கும்பகோணம்,  ஜுன் 24-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநிலக்குழு உறுப்பினரும், தஞ்சை மாவட்டத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினருமான கவிஞர் தோழர் சா. ஜீவபாரதி உடல்நலக் குறைவினால் செவ்வாய் அன்று மாலை கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தெற்கு வீதியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். தகவல் அறிந்து சிபிஎம் கட்சியினர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தினர் அமைச்சர்கள் அனைத்து கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  மறைந்த தோழர் சா. ஜீவபாரதி கடந்த காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 1974 முதல் 51 ஆண்டுகளாக மூத்த உறுப்பினராகவும், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட சிஐடியு மாவட்டச் செயலாளராகவும், கும்பகோணம் கமிட்டி உருவாவதற்கு முக்கிய தலைவர்களில் ஒருவருமாகவும், சிபிஎம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளராகவும் பணியாற்றி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் பல்வேறு போராட்டங்களில் மூலம் வென்றவர் ஆவார்.  இவர் தமுஎகச மூலம், பல எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உருவாக்கிய பெருமையும் உண்டு. இவர் கடைசி மூச்சு வரை கம்யூனிச சித்தாந்தத்தில் வேரூன்றி தோழர்களுக்கு உறுதுணையாக இருந்தவர். மறைந்த தோழர் சா. ஜீவபாரதிக்கு முருகன், டிமிட்ரோவ், கிருஷ்ணமூர்த்தி என்கின்ற 3 ஆண் பிள்ளைகளும் வசந்தா என்கின்ற மனைவியும் உள்ளனர். தோழரின் இறுதி நிகழ்ச்சி (இன்று) புதன்கிழமை மதியம் 2 மணிக்கு கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தெற்கு வீதி இல்லத்தில் இருந்து புறப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் செய்யப்படுகிறது.