tamilnadu

img

கோடி ரூபாயை கட்சிக்குக் கொடுத்துவிட்டு தீக்கதிரைக் கையில் ஏந்திய தோழர் - கே.காமராஜ்

தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் ஜூலை 1-10 தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கடந்த 4 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. ‌மேச்சேரி இடைக்கமிட்டியில் தோழர்களைச் சந்தித்து தீக்கதிர் சந்தாக்களைப் பெற்றுக்கொண்டு பத்திரிகை விநியோகம் எப்படி நடக்கிறது என்று கேட்டபொழுது, 82 வயதான தோழர் ரத்தினவேல் அவர்களை அறிமுகப்படுத்தினார்கள். அவரை பற்றி தெரிந்து கொள்ள தோழர்களிடம் பேசிய பொழுது ஆச்சரியமான தகவல்களை சொன்னார்கள். ஒரு காலத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட மலையூர் மம்பட்டியான் அந்த பகுதியில் வாழ்ந்தார். மம்பட்டியானின் தந்தையை ஒரு கும்பல் கொலை செய்துவிடுகிறது. அவர்களை பழிவாங்க மம்பட்டியான் 9 பேரை படுகொலை செய்த சம்பவம் நடக்கிறது. அந்த வழக்கில்  மேற்கண்ட தோழர் ரத்தினவேல், மம்பட்டியானின் உறவினர் என்ற ஒரே காரணத்திற்காக ஏதுமறியாத இவரும் கைது செய்யப்படுகிறார். இவருக்கு அப்போது வயது 17. ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை அறிவித்து சிறுவர்களுக்கான சிறையில் அடைக்கப்பட்டு விடுதலை ஆகிறார். அதற்குப் பிறகு ஒரு கட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டு கட்சியில் இணைந்து செயல்படுகிறார். மகன் பெயர் ஸ்டாலின். மகள் பெயர் ஸ்டாலினி. மேச்சேரி கமிட்டி செயலாளராக பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளார். இப்போது தினசரி 10 கிலோ மீட்டர் சுற்றளவில் இருசக்கர வாகனம் மூலம் தீக்கதிர் விநியோகம் செய்து வருகிறார். அதற்கு மேலாக, அவருக்கு சொந்தமான சுமார் ஒரு கோடி மதிப்புள்ள 6 செண்டு நிலத்தை  ஒரு ரூபாய் கூட வாங்காமல் கட்சிக்கு வழங்கி உள்ளார். இப்போது அந்த இடத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான கட்சி அலுவலக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ரத்தினவேல் போல் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான தோழர்களின் உழைப்பும் தியாகமும் தான், உழைப்பாளி மக்களின் போராட்டங்களுக்கும் எழுச்சிக்கும் உரமாக இருக்கிறது. தோழர் ரத்தினவேல் அவர்களைப் பற்றி தோழர்கள் தெரிவித்தவை சிறிய தகவல்கள்தான். ஆனால் மனதை விட்டு அகலாமல் அசைபோடச் செய்து கொண்டே இருக்கிறது.