tamilnadu

img

“இன அழிப்பில் அன்றைய ஜெர்மானியனும் இன்றைய யூதனும்” - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

ஹாலோகாஸ்ட்(Holocaust) என்றாலே யூத இனத்துக்கு ஏற்பட்ட பேரழிவைக் குறிக்கும் சொல்லாக வரலாற்றில் நிலைத்துவிட்டது. ஆனால் இன்று அந்த யூத இன வழிவந்தவர்கள் பாலஸ்தீன மக்களின் இன அழிப்பை நடத்திக் கொண்டிருப்பது வரலாற்று முரண். இங்கிலாந்தின் ஜோனாதன் ஹிலாசர் இயக்கியுள்ள “தி ஜோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்” என்ற இங்கிலாந்து படம் இந்த முரணை நினைவூட்டுகிறது. 1940களில், இரண்டாம் உலகப் போரின் போது போலந்து, நாஜி ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் உள்ளது. போலந்தின், முட்ஷியில் உள்ள வதை முகாமின் பெயர் கேஎல் ஆஷ்விட்ஸ்.இங்குள்ள எரிவாயு சேம்பர், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மனிதர்களை எரிக்கும் வசதி  உடையது. இதில் ஆயிரக்கணக்கான யூதர்களும், போரில்  பிடிபட்ட சோவியத் படை வீரர்களும் கைதிகளாக உள்ள னர். இந்த முகாமின் கமாண்டர்  ருடால்ப், இவனது மனைவி ஹெட்விக், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள். வளர்ப்பு  நாய் டில்லா, இக்குடும்ப உறுப்பினர்கள். முதல் தளம்  மற்றும் தரைத்தளத்துடனான “ஹோஸ் வில்லா” இவர் களது வீடு.வ தை முகாம், வீடு இரண்டையும் பிரிப்பது ஒரே மதில்.

பரந்து விரிந்த வில்லாவை சுற்றியுள்ள பகுதி யில் மணம் வீசும் மலர்த் தோட்டமும், காய்கறிச் செடிகளும்,  மரங்களும், பசுமை குடிலும், நீச்சல் குளமும் உள்ளன. ஹெட்விக் கண்காணிப்பில், வருடக்கணக்கில் கைதிகளின் கட்டாய உழைப்பில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு மனிதர்களை எரித்த சாம்பலே உரம். வீட்டையும், குழந்தைகளையும் போலந்து மற்றும் ஜெர்மானியப் பெண் வேலையாட்கள் கட்டுப்பாட்டோடு பார்த்துக் கொள்கின்றனர். வதைமுகாமில் கைதிகளைக் கொல்லும் துப்பாக்கிச் சத்தங்களும், மரண ஒலங்களும்,கைதிகளை கொணரும்  ரயிலின் சத்தமும் வீட்டிலும்,வளாகத்திலும் அன்றாடம் துல்லியமாகக் கேட்டுக் கொண்டேயிருக்கும்.ஆனால், இவை யாவும் காட்சிகளாக திரையில் வராது.மனிதர்களை உயிரோடு எரித்துக் கொல்லும் எரிவாயு சாம்பலிலிருந்து வெளிப்படும் கொடுந்தீயின் செந்நிற வெளிச்சத்தையும், அதன் புகைக்கூண்டில் இரவு பகலாக வெளியேறும் நாற்றக் கரும்புகையையும், வீட்டிலிருந்து பார்க்க முடியும். இக்கொடூரங்கள், ருடால்ப் குடும்பத்தினருக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. நாய் டில்லா மட்டும் குரைத்து எதிர்வினையாற்றும். முகாமில் ருடால்ப் சிறப்பாக பணியாற்றியதால், துணை ஆய்வாளராக பதவி உயர்வு பெறுகிறான்.ஆனால் அரசியல் காரணமாக ஓரானியன்பர்க் முகாமிற்கு  மாறுதல் செய்யப்படுகிறான். தோட்டம் துரவுகளை விட்டு வர  ஹெட்பிக் விரும்ப வில்லை.இங்கேயே இருப்பதற்காக ஹிட்லரிடம் முறை யிடச் சொல்கிறாள். இக்கட்டான சூழலை, ருடால்ப் எப்படி எதிர்கொண்டான்?என்பதே மீதிக்கதை.  

ருடால்ப் மகள் ஹினி பிரிஜிட் தூக்கத்தில் நடப்பவள்.ஓரிரவு,வேறு பெண்ணோடு சல்லாபத்தில் ஈடுபட்டு வீடு  திரும்பும் ருடால்ப்,தூக்கத்தில் நடக்கும் மகளை பார்க்கி றான். கைத்தாங்கலாக தூக்கி படுக்கையில் உறங்க வைக்க தேவதைக் கதையை சொல்கிறான். “பஞ்சத்தை சமாளிக்க முடியாத, விறகு வெட்டும் தந்தை, தனது குழந்தைகள் ஹான்சல் மற்றும் கிரெட்ட லைக் காட்டுக்குள் தவிக்க விட்டு ஓடிவிடுகிறான். வழி தவறி, சூனியக்காரியிடம் மாட்டிக் கொள்கின்றனர். அவளோ, இவர்களை அடுப்பில் சமைத்து சாப்பிடத் திட்டமிடுகிறாள்.கிரெட்டல் முந்திக்கொண்டு சூனியக்காரியை அடுப்பில் தள்ளிவிட்டு இருவரும் தப்பிக்கின்றனர்” எனக் கதை சொல்கிறான். படத்தில், ருடால்ப் கதை சொல்லும் குரல் மட்டும் கேட்கும். அதேநேரத்தில்  திரையில், நாஜிகளுக்கு எதிரான,  போலந்து ரெஸிஸ்டன்ஸ் (Polish Resistance) இயக்கத் தைச் சார்ந்த அலெக்ஸாண்டிரா என்ற யூதரல்லாத பெண் தொடர்பான காட்சிகள் வரும். தெர்மல் கேமராவில் பதிவான (Thermal night vision)காட்சிகளாக இவை தெரியும்.   “கண்டவுடன் சுடும் தடை செய்யப்பட்ட பகுதியில்  அலெக்ஸாண்டிரா, தன்னந்தனியாக, இரவில் நுழை கிறாள். ஆப்பிள், பேரிப் பழங்களை மரங்களில் பறிக்கி றாள். பகலில் வேலைக்கு பசியோடு வரும் கைதிகள் சாப்பிடுவதற்காக, அவர்கள் வேலை செய்யும் பகுதியில் உள்ள மண்மேட்டில் பாதி தெரியும்படி பழங்களை பதிக்கிறாள். அப்போது கவிதை எழுதி  மடிக்கப்பட்ட காகிதத்தை  கண்டெடுக்கிறாள்.

“சூடும் சுரணையும் 
சுடர்விடும் மனிதர்கள் நாங்கள்.
இளையோர் முதியோர் என்று
இங்கே சிறைப்பட்டோம்.
எங்கள் இதயங்கள் இன்னும்
இற்று அவிந்து போகவில்லை.
சூரியச் சுவாலையென 
எங்கள் ஆன்மா
கொழுந்துவிட்டு எரிகிறது
உயிர்வாதை வலிக்கிடையே
உடைத்துத் தகர்த்தெறிவோம் 
(பாசிசத்தை)
விரைவிலே எங்கள்
விடுதலைக் கொடி
பறக்கக் காண்போம்.”
 

காகிதக் கவிதையை வீட்டில் படித்துகொண்டே பியானோ இசைப்பாள். இவ்வரிகளும் திரையில் தெரியும். மூன்று விடயங்களை ஒரே நேரத்தில் திரையில் காட்சிப்படுத்தி, அலெக்சாண்டிராவின் எதிர்ப்பை போராட்டக் குறியீடாக்கி,பாசிசம்  விரைவில் அழிந்து விடு தலை பெறப்படும் என்ற நம்பிக்கையை, நவீன யுக்தியில் இத்தொடர் காட்சி(Sequence) மூலம்  இயக்குநர் அழகியலாக விவரித்துள்ளார்.   பெர்லின் அதிகாரியின் விருந்தில் கலந்து கொண்ட  ருடால்ப், அந்த வீட்டின் அமைப்பை பார்வையிடுகிறான். இதுகுறித்து மனைவியிடம் தொலைபேசியில் பேசு கையில், “எனது சிந்தனையெல்லாம்,உயர் கூரையை கொண்டுள்ள கட்டிடத்தில், மனிதர்களை எரிவாயுவில் எரித்து கொல்வது மிகவும் கடினமான பணி”எனத் தனது வேலையையே நினைத்துக் கொண்டிருந்ததாக குறிப்பிடு கிறான்.உயிர் வதையை தொழிலாகக் கொண்டுள்ள வனின் புத்தி எவ்வளவு குரூரமானது என்பதை இவ்வச னம் பயங்கரமாக உணர்த்தும்.   தூரக்காட்சிகளின் (Long shot) தொடர்ச்சியை வெவ்வேறு கோணங்களில் படம் பிடிக்க பத்துக்கும் மேற்பட்ட கேமராக்களையும்,துல்லியமான ஓசையை அப்படியே திரையில் கொண்டு வர முப்பதுக்கும் மேலான மைக்ரோ போன்களும் பயன்படுத்தி, படத்தரத்தை உயர்த்தியுள்ளனர். “Anatomy of a fall” படப்புகழ் ஸாண்ட்ரா ஹூல்லரே, ஹெட்பிக்காக சிறப்பாக நடித்துள்ளார்.வீட்டிலும், தோட்டத்திலும் சுற்றித்திரியும் கதாபாத்திரங்களில் ஒன்றாய்  வரும் டில்லா நாய் இவருடையதே.கொலை முகம் தெரியாத  கமாண்டராக ருடால்ப் பாத்திரமேற்றுள்ள கிறிஸ்டியன் ஃபிரீடல் நடிப்பில் அசத்தியுள்ளார். குழந்தைகள் உள்பட அனைவரும் நல்ல நடிப்பை தந்துள்ளனர். இயற்கையான வெளிச்சத்திலான சிறந்த ஒளிப்பதிவு.  பட இறுதியில் ஒலிக்கும் கெட்ட காரியம் நடப்பதற்கான  முன்னோட்டமாக வரும் இசை திகிலானது. இசை யமைப்பாளர் பாராட்டுக்குரியவர்.

வழக்கமான சினிமா பாணியிலிருந்து விலகி, அடுத்தடுத்து முரண்களை வரிசைப்படுத்தி (Juxtaposition)  தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். 2024 இல் சிறந்த உலகத் திரைப்படத்திற்கான மற்றும் சிறந்த ஒலிப்பதிவிற்கான (Best Sound), ஆஸ்கர் விருதுகளையும், கான்ஸ் விழாவில் கிராண்ட் ப்ரிக்ஸ் விருதையும் இப்படம் வென்றுள்ளது. கேஎல் ஆஷ்விட்ஸ்,ஹோஸ் வில்லா ஆகியவற்றை இன்றைய போலந்து அரசு அருங்காட்சியமாக  பராம ரிக்கிறது. யூத இன அழிப்பை படத்தில் பேசிய இயக்குநர், இஸ்ரே லின் பாலஸ்தீன இன அழிப்பை, ஆஸ்கர் விருது பெற்ற மேடையிலே எதிர்த்து குரலெழுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் பிரைம் அமேசானில் உள்ளது.