tamilnadu

img

ஒளிரும் மாமனிதர் - கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

‘பட்டப்படிப்பா - சுதந்திரப் போராட்டமா?’ என்ற கேள்வி எழுந்தபோது இறுதி ஆண்டு பட்டப் படிப்பைத் துறந்து சுதந்திரப் போராட்டத்தில் குதித்தவர் தோழர் என்.சங்கரய்யா!  நூறாண்டு காணும் (ஜூலை 15, 2021) தோழர் சங்கரய்யாவின் தனி வாழ்வு என்பதும் கூட ஒரு பொது வாழ்வே!

கட்சி வட்டாரத்தில் சுருக்கமாக என்.எஸ்.என்று அழைக்கப்படுபவர். 8 ஆண்டுகள் சிறைவாசம் - 3 ஆண்டுகள் தலைமறைவு வாசம் என்பதெல்லாம் சாதாரணமானதல்ல! இவருடைய பாட்டனாரும், தந்தையாரும் தந்தை பெரியார் தம் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். ‘குடிஅரசு’ இதழ் வாசகர்கள். என்.எஸ்.அவர்களின் மாமா திரு வரதராஜூலு தூத்துக்குடி சுயமரியாதை இயக்கச் செயலாளராகப் பணியாற்றியவர்.  இளைய வயதில் என்.எஸ். அவர்களின் சிந்தனையில் முற்போக்கு எண்ணங்கள் முளைவிட்டது இந்தச் சூழல்தான். தனது வாழ்விணையராக மதம் கடந்த பெண்ணை ஏற்று செயல்முறையில் வாழ்ந்து காட்டுபவர்.  தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டிய தொடக்கக் கால வீரர்களுள் இவர் முக்கியமானவர் ஆவார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், மத்தியக்குழு உறுப்பினர், மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர், விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மற்றும் அகில இந்திய செயலாளர், கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘தீக்கதிர்’ ஆசிரியர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றி, அந்தப் பொறுப்புகளின் மரியாதையை உயர்த்தியவர்! தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

முதுபெரும் பொதுவுடைமைவாதிகளான ஆர்.நல்லகண்ணு (சி.பி.அய்), என்.எஸ். ஆகியோர் கட்சியின் வரலாற்றையும் கடந்து தமிழ்நாட்டுப் பொது வாழ்வில் - பொதுத் தொண்டில் முன்னுதாரணமான ஒளிரும் மாமனிதர்கள் ஆவர். எளிமை இவர்களது அடையாளமாகும்! கொள்கை உறுதி இவர்களது முத்திரைகளாகும்!

தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (17.9.2018) 90 வயதைக் கடந்த தொண்டறச் செம்மல்களுக்குப் பாராட்டு - வாழ்த்து - விருது அளித்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா அவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று நாம் சிறப்பு செய்த நிகழ்ச்சியையும் இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து, தோழர் சங்கரய்யா நல்ல உடல் நலத்துடன் கட்சிக்கும், நாட்டுக்கும் நல்வழிகாட்ட வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

;