tamilnadu

img

அறிவியல் கதிர்

►தொட்டால் பூ மலராது 
கோவிட் தொற்று நோய் சிகிச்சைக்குப் பயன்படும் தடுப்பூசிகள் நம் உடலில் எதிர்உயிரிகளை(antibody) உண்டாக்கி கொரோனா கிருமியின் கொம்புகள்(spikes) நம் செல்களுடன் இணைவதை தடுக்கின்றன. ஆனால் ஆல்பா, டெல்ட்டா,ஒமிக்ரான் என கொரோனா வைரஸ் பல உரு மாற்றங்கள் அடைந்து புதியவகையில் இணைந்து விடுகின்றன. இதை தடுக்க மோனோ குளோனல் ஆன்டிபாடி குளோன்(Monoclonal antibody clone) எனப்படும் புதிய எதிர்உயிரிகளை இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம்(ICMR), இந்திய உயிரியல் தொழில்நுட்பத் துறை(DBT), மரபணு மாற்றம் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப சர்வதேச மையம் (ICGEB) ஆகியவை அமெரிக்க எமோரி தடுப்பூசி மையத்துடன் இணைந்து கண்டுபடித்துள்ளன. இது வேலை செய்யும் முறையை தெரிந்துகொள்ள கொரோனாவின் கொம்புகளின் அமைப்பு பற்றி பார்க்க வேண்டும். இந்தக் கொம்புகள் ஒவ்வொன்றும் மூன்று இதழ்கள கொண்டது. கவிழ்ந்த நிலையிலுள்ள மலர் அல்லது மொட்டு போன்று இருக்கின்றன. மனித செல்லுடன் இணையும்போது இவை விரிகின்றன. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மோனோ குளோனல் எதிர் உயிரி இந்த மொட்டு களுடன் இணைந்து அவை விரியாமல் செய்கின்றன. எனவே கொரோனா வைரஸ் நம் செல்களுடன் இணைய முடிவதில்லை. இதற்கு எதிராக வைரஸ் உருமாற்றம் அடையும் சாத்தியம் இல்லை.இதுவரை உருமாறிய எல்லாவித கொரோனா வகைகளுக்கும் எதிராக இது செயல்படும். இதுபோன்ற அதி நவீன தொழில்நுட்பங்கள் இதுவரை மேலைநாடுகளில் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. இப்போது இந்தியாவில் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு நோக்கங்கள் கொண்ட இந்தியாவின் இரு பெரும் ஆய்வகங்கள் (ICMR &DBT) மக்கள் பிரச்சினைக்காக ஒன்று சேர்ந்து தீர்வு கண்டிருப்பது பாராட்டப்பட வேண்டியது. (அன்மோல் சண்டேல் & அமித் ஷர்மா அவர்களின் 16.10.22 தேதியிட்ட இந்து ஆங்கில நாளிதழ் கட்டுரையிலிருந்து)

►பட்டு இழைகளுக்கு வலிமை 
அதி வலிமை கொண்ட பட்டு இழைகளை உற்பத்தி செய்வதில் ஆய்வாளர்கள் வெற்றிகண்டுள்ளார்கள். பட்டுப்புழுக்களிளிருந்து இழைகளை எடுப்பது எளிது.ஆனால் அவை வலிமையானதாக இல்லை. கையினால் நூற்கப்படும் இழைகளின் வலிமைக்கும் உறுதிக்கும் சிறந்த ஒப்பீடாக கூறப்படும் சிலந்திப்பூச்சிகளின் இழைகளை எடுப்பது சிரமமானது. ஏனெனில் சிலந்திகள் வாழுமிடமும் அவற்றின் முரட்டு சுபாவத்தினாலும் அவற்றை வளர்ப்பது கடினம். இதற்கு முன் பட்டுப்புழுக்களின் கூடுகளிலுள்ள பசைத்தன்மை கொண்ட மேல் பூச்சை வேதிப்பொருட்களில் கொதிக்கவைத்து நீக்கும்போது பட்டு இழைகளிலுள்ள புரோட்டீன்களும் அழிந்துவிட்டன. அவைதான் இழைகளுக்கு வலிமை தருபவை. இதை தவிர்ப்பதற்காக உயிரியல் கட்டமைப்பு ஆய்வாளரும் சீன டியான்ஜின் பல்கலைக் கழகத்தை சேர்ந்தவருமான சி லின் குழுவினர் மென்மையான முறைகளைக் கையாண்டனர். அவற்றில் ஒன்று பப்பாளி நொதியில் குறைந்த வெப்பத்தில் மேல்பூச்சை நீக்குவது. இதன்மூலம் சிறிய புரோட்டீன்கள் மட்டும் நீக்கப்பட்டு பெரிய புரோட்டீன்கள் தங்கின. இழையின் வலிமை கூடுகிறது. அதன்பின் பட்டுக்கூழை சிறு குழாய் மூலம் பற்பசை வெளிவருவதுபோல் இழைக்கப்பட்டது. இந்த இழைகள் துத்தநாகம் மற்றும் இரும்பு அயனிகள் கொண்ட திரவத்தில் முழுக்காட்டப்பட்டு நீண்ட மெல்லிய இழைகளாக இழுக்கப்பட்டன. உலோக தோய்ப்பே இழைகளின் வலிமைக்குக் காரணம் என்று லின் குழுவினர் கருதுகிறார்கள்.பிற ஆய்வாளர்கள் அதை உறுதியாக ஏற்கவில்லை. சிலந்தியின் இழைகளைப் போலவே வலிமையும் குறைவான கனமும் மக்கக்கூடியதுமான இழைகளை தயாரிப்பதில் பல காலமாக நடந்துவரும் ஆய்வில் இது ஒரு முக்கிய நிகழ்வு. இந்த முறையில் தயாரிக்கப்பட்ட இழைகள் சிலந்தி இழைகளைவிட 70% உறுதியாக உள்ளனவாம். காயங்களுக்கு தையல் போடுவது,எலும்புகளுக்கு தேவைப்படும் செயற்கை இணைப்பு இழைகள், மலையேறும் கயிறுகள் ஆகிய துறைகளில் இவை பயன்படும்.

►பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் 

ஜாஸ் இசையில் சில பாடல்கள் மட்டும் நம் கால்களை நடனமாடவும் தலையாட்டவும் வைக்கின்றன. இதன் காரணம் குறித்து ரசிகர்கள் பல காலமாக விவாதித்து வருகின்றனர். இதற்கான விடையை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளது போல் தோன்றுகிறது. ஜாஸ் இசையில் இசைக் கலைஞர்கள் எட்டாவது சுவரத்தை சற்று நீட்டிக்கவும் இடைப்பட்ட சுவரங்களை குறுக்கவும் செய்வதற்கு பயிற்று விக்கப்படுகிறார்கள். இதனால் வேகமான தாளக்கட்டு உண்டாகிறது. இது மட்டுமே அசைவாட்டத்தை (swing) விளக்க இயலாது என்கிறார் இயற்பியலாளர் தியோ கெய்செல். எட்டாவது சுவரத்தை இழுத்து இசைக்கும் பாடல்களை கணினி மூலம் ஏற்படுத்தியபோது, கலைஞர்கள் இசைக்கும் லயம் கிடைக்க வில்லை. ஒரு குழுவிற்குள் கலைஞர்களிடையே ஏற்படும் நேர வேறுபாடுகளினால் சுவிங் தோன்றுகிறது என்று இதற்கு முந்தைய ஆய்வுகளில் ஊகிக்கப்பட்டது. எனவே கெய்செல் ஆய்வுக்குழுவினர் தனி வாசிப்பாளர்களின் இடையீட்டை மட்டும் சற்று மாற்றி கணினியில் பதிவு செய்தனர். பின் வல்லுனர்களை யும் ஓரளவு பயிற்சி பெற்ற ஜாஸ் கலைஞர்களையும் அதன் சுவிங்கை மதிப்பிட கேட்டுக் கொண்டார்கள். தாளப் பகுதியிலிருந்து மிக நுட்பமான தாமதத்துடன் தனி வாசிப்பாளர்கள் கீழ் சுவரங்களை இசைக்கும்போது இசை அதிக சுவிங் உள்ளதாக மதிப்பிட்டார்கள். பெரும்பான்மையான கலைஞர்களால் இந்த சுவிங் எதனால் ஏற்படுகிறது என்பதை சரியாக கூற முடியவில்லை. பல்வேறு கலைஞர்களின் 456 இசை நிகழ்வை ஆய்வு செய்தபோது எல்லா தனி வாசிப்பாளர்களும் சராசரியாக 30 மில்லி செகண்ட் தாமதத்துடன் கீழ் சுவரத்தை இசைத்தது தெரிய வந்துள்ளது. வேகமான தாளங்களுக்கு தாமதப்படுத்துவது குறைகிறது. பல காலமாக இசைக்கும் தொழில்முறை ஜாஸ் கலைஞர்கள் தன்னிச்சையாக இதை கற்றுக்கொண்டதாக தோன்றுகிறது.

;