tamilnadu

img

சு.வெங்கடேசன் வெற்றி தமிழின் வெற்றி

துரை மாநகரில் எழுத்தாணிக்காரத் தெரு என்றொரு தெரு இருக்கிறது. இது தமிழகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது. ஓலைச்சுவடி காலத்தில் எழுத்தாணி கொண்டு தான் எழுத வேண்டியிருந்தது. அந்த எழுத்தாணிகளை தயாரித்துக் கொடுத்த கைவினைக் கலைஞர்கள் வாழ்ந்த, நடமாடிய தெரு இது. இவர்கள் படைத்தளித்த எழுத்தாணிகளை கொண்டு பல பைந்தமிழ் இலக்கியங்கள் எழுதப்பட்டன. இன்று எழுத்தாணிகள் காணாமல் போய்விட்டன. ஆனால், எழுத்து நிற்கிறது. எழுத்தாணிக்கார தெருவில் வசிக்கும் மக்கள் இன்று பொற்கொல்லர்களாகவும், வேறு சிறு, சிறு தொழில் செய்பவர்களாகவும், பெரும் வணிகப் புயலை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடும் ஒரு வாழ்வுக்குள் சிரமப்படுகிறார்கள்.மதுரை தொகுதியில் போட்டியிடும் எழுத்தாளர், கவிஞர் சு.வெங்கடேசன் இவர்களின் வாழ்வு உயரப் போராடுவார். 17 ஆண்டுகளுக்கு முன் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி எழுத்தாளர்கள், கலைஞர்கள் புதுதில்லியில் போராட்டம் நடத்தி அன்றைக்கு பிரதமராக இருந்த வாஜ்பாயிடம் மனு அளித்தனர். வாஜ்பாயை சந்திப்பதற்கு எங்களை அழைத்துச் சென்ற பொ.மோகனின் வழி வந்த சு.வெங்கடேசன் இன்றைக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திர சின்னத்தில் போட்டியிடுகிறார். தமிழ் பண்பாட்டைக் காக்க, தமிழர்களை பாதுகாக்க பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் அதிமுகவும் தோற்கடிக்கப்பட வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடும். சு.வெங்கடேசனின் வெற்றி தமிழின் வெற்றி. தமிழ் பண்பாட்டிற்கான வெற்றி என்று கூறினால் அது மிகையல்ல.கீழடியின் பெருமைகளை தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொண்டு சென்றவர்.


சு.வெங்கடேசன் ஒரு எழுத்தாளர். அவருக்கு அரசியல் தெரியாது என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். பேரறிஞர் அண்ணா மிகச்சிறந்த எழுத்தாளர். அவரது பெயரில் கட்சி வைத்துள்ள அதிமுக எழுத்தாளருக்கு என்ன தெரியும் என கேட்பது வேடிக்கையாக உள்ளது. செல்லூர் ராஜுவுக்கு அரசியல் தெரியாது என்பதையே அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது.


அன்றைக்கு மதுரையை மீட்க சுந்தர பாண்டியன் போராடினார். இன்றைக்கு மதுரையை மீட்க சு.வெங்கடேசன் போராடி வருகிறார். மதுரையில் சிறு, குறுந்தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. மதுரைக்கு பெருமை சேர்த்த பஞ்சாலைகளும் மூடப்பட்டுவிட்டது. மதுரை நகரம் மீனாட்சியம்மன் கோவிலை வைத்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு வைகை நதி வறண்டுவிட்டது. கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் காணாமல் போய்விட்டன. இதனால் நிலத்தடி நீர் வற்றிவிட்டது. இதுகுறித்தெல்லாம் நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் பேசி மதுரை நகரின் மையமான வாழ்வை, பண்பாட்டை, கலாச்சாரத்தை மீட்க குரல் கொடுப்பார்.கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையை எழுதியது இந்த மண்ணிலிருந்துதான். அதை எழுத அவருக்கு எழுத்தாணி கொடுத்தவர்கள் இந்த எழுத்தாணிக்காரத் தெருவைச் சேர்ந்தவர்கள் தான். சாத்தனார் நடந்து திரிந்த தெருவில் எழுத்தாளர்களாகிய நாங்கள் நடப்பது மிகுந்த பெருமை தருகிறது.நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் பாஜக வெற்றிபெறக்கூடாது. அது மீண்டும் ஆட்சியமைத்தால், மோடி பிரதமரானால் இனி இந்தியாவில் தேர்தலே நடக்காது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடைபெற ஜனநாயக, பண்பாடு, கலாச்சாரம் பாதுகாக்கப்பட, மதுரை காப்பாற்றப்பட எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திர சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்

- எழுத்தாளர் அருணன் பேசியதிலிருந்து...


ஏன் இத்தனை எழுத்தாளர்கள் வந்திருக்கிறோம் என்றால்...

எழுத்தாணிக்காரத் தெரு என்ற பெயரில் ஒரு தெரு இந்தியாவில் வேறெங்கும் கிடையாது. மதுரை மாநகரில் தான் இருக்கிறது. ஆகவே எழுத்தாளர்களாகிய நாங்கள் எங்கள் முன்னோடிகளுக்கு எழுத்தாணி தயாரித்துக்கொடுத்த முன்னோர்கள் வாழ்ந்த இந்தத் தெருவில் ஒரு அடையாளப்பூர்வமாக எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்குச் சேகரிக்க வந்திருக்கிறோம். இவர் ஒரு எழுத்தாளர் தானே, அவருக்கு அரசியல் தெரியாது என்று அதிமுக வேட்பாளர் ஒரு தொலைக்காட்சியில் பேசியுள்ளார். எழுத்தாளரை விட பெரிய அரசியல்வாதி வேறுயாரும் இருக்க முடியாது. ஜவஹர்லால் நேரு, அறிஞர் அண்ணா, மூதறிஞர் இராஜாஜி, டாக்டர் கலைஞர் போன்ற எழுத்தாளர்கள் அரசியலில் மிகப்பெரிய சாதனை புரிந்தவர்கள். அது மட்டுமின்றி எழுத்தாளர் சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக 28 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு போட்டியிட்டு மக்கள் மன்றத்தில் நின்றவர். அதிமுக வேட்பாளர் தான் அரசியலுக்குப் புதிது. எழுத்தாளர்கள் ஏன் இவ்வளவு பேர் வந்திருக்கிறோம் என்றால் இந்திய வரலாற்றில் அதிகமான எழுத்தாளர்கள் தாக்கப்பட்டதும் படுகொலை செய்யப்பட்டதும் இந்த ஐந்தாண்டுகால பாஜக ஆட்சியில்தான். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளமுடியாத பாஜக ஆட்சி தொடர்ந்தால் இனி யாரும் வாயைத் திறந்து பேசமுடியாத நிலை உருவாகிவிடும். ஆகவே நாடு முழுவதும் வாழும் ஒவ்வொரு எழுத்தாளரும் திரைக்கலைஞர்களும் விஞ்ஞானிகளும் அறிக்கைகள் கொடுத்தால் போதாது என்றுணர்ந்து நேரடியாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்கள். அதனொரு பகுதியாகவே எழுத்தாளர்களாகிய நாங்கள் வாக்குச் சேகரிக்கிறோம். எந்தக் கட்சியையும் சாராத பல முன்னணி எழுத்தாளர்கள் இங்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு.


தமுஎகச மாநில கௌரவத் தலைவர் ச.தமிழ்செல்வன் பேசியதிலிருந்து...

;