tamilnadu

நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி முக்கிய செய்திகள்

ஆரல்வாய்மொழியில் வீட்டை அபகரிக்க முயற்சி :  போலி ஆவணம் தயாரித்த பிரமுகர் கைது

நாகர்கோவில், ஜூன்.5- கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி   இந்திரா நினைவு கூட்டு குடியிருப்பு பகுதியில் உள்ள திருவள்ளுவர் காலணியை சேர்ந்தவர் சுபாஷ். தின கூலி தொழிலாளியான இவரது மனைவி வேலம்மாள். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சுபாஷ் தனது மனைவியின் சகோதரனான சண்முகத்திடம் வீட்டை பார்த்துக்கொள்ளும் படி கூறி விட்டு தனது மனைவியை அழைத்துக் கொண்டு அந்தமான் நாட்டில் வேலைக்கு சென்றுள்ளார். சண்முகம் இந்த வீட்டை பராமரித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகியும், முன்னாள் கவுன்சிலருமான முருகன் என்பவர் சுபாஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார் . இது குறித்து வீட்டை பாதுகாக்கும் சண்முகம் கேட்ட போது, பல்வேறு ஆவணங்களை காட்டி இது தன் வீடு என்றும் இனிமேல் இந்த வீட்டிற்கு யாராவது சொந்தம் கொண்டாடினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக புகார் அளித்துள்ளார். சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் முருகனை பிடித்து ஆரல்வாய்மொழி காவல் துறையினர் விசாரித்தனர். இதில், முருகன் வீட்டை அபகரிக்க முயற்சித்ததும், ஆவணங்கள் அரசு முத்திரைகள் போன்றவற்றை போலியாக தயாரித்து போலி பட்டா  வைத்து இருப்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து முருகனை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் வேறு நபர்களின் வீட்டை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லையில்  மேலும்  3  பேருக்கு கொரோனா

திருநெல்வேலி, ஜூன் 5- நெல்லை மாவட்டத்தில் மேலும் 3 போ், தென்காசி மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று  உறுதிசெய்யப்பட்டது.     நெல்லை மாவட்டத்தில் புதன்கிழமை வரை 378 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய ஒருவா் உள்பட 3 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.  இதன்மூலம், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 381 பேராக அதிகரித்துள்ளது.வியாழக்கிழமை குணமடைந்த 15 பேருடன் இதுவரை 294 போ் குணமடைந்து வீடுதிரும்பினா். பாதிக்கப்பட்டோரில் ஒருவா் உயிரிழந்தார்.  86 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தென்காசி மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96 பேராக உயா்ந்துள்ளது. இங்கு புதன்கிழமை வரை 94 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். வியாழக்கிழமை கிடைத்த பரிசோதனை முடிவில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. வியாழக்கிழமை குணமடைந்த இருவரை சோ்த்து இதுவரை மொத்தம் 83 போ் வீடுதிரும்பியுள்ளனா். 13 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசியில் தனிமைப்படுத்தப்பட்ட  மருத்துவப்பணியாளர்கள்

 தென்காசி, ஜூன் 5- தென்காசியில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவ பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் . தற்போது 8 நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வார்டில் சிறப்பாக பணி செய்த மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி கூறி அவர்கள் சேவையை பாராட்டி அவர்களை தனிமைப்படுத்த தனியார் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர்  டாக்டர்  ஜெஸ்லின் கூறுகையில், தற்போது உள்நோயாளிகளாக இருக்கும் நோயாளிகள் அனைவரும் சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது,பொதுமக்கள் யாருக்கேனும் கொரோனா சம்பந்தமான நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அல்லது அரசு மருத்துவமனையை அணுக வேண்டும், பிற மாநிலங்களிலிருந்து அல்லது சென்னையில் இருந்து யாரேனும் தென்காசிக்கு வந்திருந்தால் உடனடியாக தாமாக முன்வந்து மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆட்டோ ஸ்டான்டுகளை அகற்றிட காவல்துறைக்கு சிஐடியு எதிர்ப்பு

மதுரை , ஜூன் 5- சிஐடியு ஆட்டோ சங்க மதுரை மாவட்ட தலைவர் இரா-தெய்வராஜ், பொதுச் செயலாளர் என்.கனகவேல் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாடுமுழுவதும் கொரனாதொற்றுநோய்பரவலால் மார்ச் 24ம்தேதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. கடந்த 60 நாட்களாக அனைத்து மக்களின்வாழ்வாதாரம் முடங்கிபோய்விட்டது, இந்நிலையில் தமிழக அரசு பலகட்டங்களாக ஊரடங்கை தளர்த்தி, அறிவித்தநிலையில் கடந்த 23/5/2020 ம்தேதி முதல் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளித்தது. இந்நிலையில் மிகவும் வறுமையில் வாடிவரும் ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோக்களை இயக்க முயற்சிக்கும் போது விளக்குத்தூண் பகுதி போக்குவரத்து ஆய்வாளர் பல ஆட்டோ ஸ்டாண்ட்டுகளுக்கு சென்று ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது எனவும் மீறினால் ரூ2500/அபராதம் விதிப்பேன் எனக் கூறி விரட்டிவிடும் நடவடிக்கையை மேற்கொள்கிறார். எனவே வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற ஆட்டோ தொழிலாளர்களை மேலும் மோசமானநிலைக்கு தள்ளிவிடுவதை மேற்படிபோக்குவரத்து ஆய்வாளர் கைவிட வேண்டும். மாநகர் காவல்துறை ஆணையாளர் தலையிட்டு ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

;