tamilnadu

img

மீன்கொத்தியும் சிட்டுக் குருவியும்

வானத்தில் பறந்த சிட்டுக் குருவி
         கீழே கண்டதொரு அதிசயக் காட்சி
நிதானமாய்ப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தது
          மீன்கொத்தி ஒன்று லாவகமாய் குளத்தில்
தலைகீழாய் குளத்தில் பல்டி அடித்து
          மீனைக் கவ்விப் பறந்தது சிறப்பாய்

தானும் அதுபோல் குளத்தில் மீனை
‌         பிடிக்க விரும்பியது சிட்டுக் குருவி
வானுயரப் பறக்கும் சிட்டுக் குருவி
           முரட்டு வேகத்தில் குதித்தது குளத்தில்
மூழ்க இருந்த சிட்டுக் குருவியின்
           நிலையைக் கண்டன நட்புக் குருவிகள்

குருவிகள் ஒன்றாய்ச் சேர்ந்து குளத்தில்
           ஆபத்தில் இருந்த சிட்டுக் குருவியை
குருவிகள் மீட்டுக் காத்தன நன்றாய்
            அவரவர் வழிப்படி உழைப்பும் உணவும்
சரியாய் கிட்டும் போதில் விபரீதம்
            தவிர்த்தலே நன்றென நல்வழி காட்டின.
பெரணமல்லூர் சேகரன்