மனித உரிமைகளை காப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான பங்களிப்பு வாச்சாத்தி வன்கொடுமைக்கு எதிராக நடத்திய போராட்டம் என்று பெருமையுடன் குறிப்பிடலாம். குற்றமிழைத்தவர்கள் எவ்வளவு உயர் பொறுப்பில் இருந்தாலும் போராடி தண்டனைப் பெற்றுத் தர முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியது இந்த வழக்கின் தீர்ப்பு.
பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர், சிபிஎம்
வாச்சாத்தி வன் கொடுமை தொடர் பான மேல்முறையீட்டு வழக் கின் விசாரணை முடிந்து, வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக இன்று (28.2. 2023) ஏடுகளில் செய்தி வெளிவந்துள்ளது. தருமபுரி மாவட்டம், சித்தேரி மலை அடி வாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய வாச்சாத்தி கிராமத்தில் பழங்குடியினர் மீதான அந்த கொடு மைகள் நிகழ்த்தப்பட்டது 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்கள். அரசின் சீருடையணிந்த பணியாளர்களால் அந்த கிராமமே சூறையாடப்பட்டது. ஆண் களும், பெண்களும் அடித்து சித்ரவதை செய்யப்பட்டு சுமார் 200 பேர் சிறையில் அடைக் கப்பட்டனர். 18 இளம் பெண்கள் வனத்துறை யினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக் கப்பட்டனர். பழங்குடியினர் மீதான இந்த வன்கொடுமையை, மனித உரிமை மீறலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தான்.
அப்போது ஆட்சிப் பொறுப்பிலிருந்த அதி முக நடந்த சம்பவங்களை மூடிமறைக்க பகீ ரத பிரயத்தன முயற்சிகளை மேற்கொண்டது. அவதூறு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மீது பழி சுமத்தியது. இத்தகைய சூழ்நிலை யில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் அப்போ தைய பொதுச் செயலாளர் பெ. சண்மும் அவர் களால் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. அப்போது பொதுநல வழக்கை கவ னித்துக் கொண்டிருந்த நீதிபதி பத்மினி ஜேசு துரை அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப் போதைய மாநில செயலாளரும், மாநிலங்க ளவை உறுப்பினருமான தோழர் ஏ. நல்ல சிவன் அவர்களால் மேல்முறையீடு செய்யப் பட்டது. உச்சநீதிமன்றம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத் திற்கு உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை விசா ரணைக்கு ஏற்று, பிறகு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தென் மண்டல ஆணையராக இருந்த திருமதி பாமதி ஐ.ஏ.எஸ். அவர்கள் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. மக்கள் சொன்ன குற்றச்சாட்டுக் கள் அனைத்தையும் உறுதி செய்து அவர் உயர்நீதிமன்றத்திற்கு 11.12.1992 அன்று அறிக்கை அளித்தார். அவருடைய அறிக்கை யின் அடிப்படையில் மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு 24.2.1995 அன்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
அதிமுக அரசு இதை எதிர்த்து முழு பெஞ்சுக்கு மேல்முறையீடு செய்தது. பிறகு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. உச்சநீதி மன்றம் தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளு படி செய்தது. அதிமுக, குற்றவாளிகளை காப் பாற்றுவதிலும், மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மூடி மறைப்பதிலும் எவ்வ ளவு தீவிரமாக செயல்பட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம். சிபிஐ விசாரணை முடித்து 23.4.1996 இல் தனது அறிக்கையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. சிபிஐயால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் 269 பேர். வனத்துறையினர் 155 பேர், காவல் துறையினர் 108 பேர். வருவாய்த்துறையினர் 6 பேர். இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ண கிரி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இறுதியாக, தருமபுரி அமர்வு நீதிமன்றத்தில் 2011, செப்டம்பர் 29 ஆம் தேதி தீர்ப்பளிக்கப் பட்டது. இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் குற்றம்சாட்டப்பட்ட 269 பேரும் குற்றவாளிகள் என்றும், இறந்து போன 54 பேர் தவிர மீதமுள்ள 215 பேருக்கும் ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்பட்டது. அரசின் சீருடை பணியா ளர்கள், 4 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உட்பட இவ்வளவு பேர் தண்டிக்கப்பட்டது இது தான் முதன்முறை. எல்லாவற்றுக்கும் மேலாக ‘சந் தன மர திருடர்கள்’ என்ற பழியிலிருந்து வாச்சாத்தி கிராம மக்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு ஏறத்தாழ 12 ஆண்டுகள் கழித்து இப்போது தீர்ப்பு வர இருக்கிறது. மேல்முறையீட்டு வழக்கை விசா ரித்து வரும் நீதியரசர் பி.வேல்முருகன் அவர் கள் மார்ச் 4 ஆம் தேதி வாச்சாத்தி கிரா மத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு செய்ய விருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளது.
தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்யும் என்ற முழுமையான நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்க ளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எங்க ளிடம் சொன்னார்கள். நாங்கள் அந்த உண்மை களை மக்களிடமும், நீதிமன்றத்திலும் தெரி வித்தோம். மத்திய புலனாய்வுத்துறை நாங்கள் எழுப் பிய அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அப்போதைய டி.எஸ்.பி. ஜெகந்நாதன் தலை மையிலான புலனாய்வு குழுவினர் புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்தி ரிக்கையை தாக்கல் செய்தனர். எல்லா வித மான தடைகளையும் மீறி தைரியமாக மக்கள் சாட்சியமளித்தனர். அவர்களுக்கு உற்ற துணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் இருந் தது.
19 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகே அம்மக்களுக்கு நீதி கிடைத்தது. குற்றவாளி கள் தண்டிக்கப்பட்டார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்டவர்களிலும் பலர் இறந்து விட்டனர். குறிப்பாக, முக்கிய சாட்சி யான ஊர் கவுண்டர் பெருமாள் மறைந்து விட்டார். அப்போது 28 குழந்தைகள் தங்கள் தாய்மார்களுடன் சிறையில் இருந்தனர். இப்போது அவர்களுக்கெல்லாம் திருமணம் நடைபெற்று அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இப்போதைய தலைமுறை இப்படியொரு கொடுமை நிகழ்த்தப்பட்டதே அறியாதது. மனித உரிமைகளை காப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான பங்களிப்பு வாச்சாத்தி வன்கொடுமைக்கு எதிராக நடத் திய போராட்டம் என்று பெருமையுடன் குறிப்பி டலாம். குற்றமிழைத்தவர்கள் எவ்வளவு உயர் பொறுப்பில் இருந்தாலும் போராடி தண்ட னைப் பெற்றுத் தர முடியும் என்ற நம்பிக்கை யை மக்களிடையே ஏற்படுத்தியது இந்த வழக் கின் தீர்ப்பு. மேல்முறையீட்டு வழக்கிலும் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை இருக்கி றது. ஏனென்றால், உண்மை ஒரு நாளும் தோற்காது.