‘அடிமை’ ஜெலன்ஸ்கியை கைவிட்டது ஏகாதிபத்திய அமெரிக்கா
கடந்த மூன்று ஆண்டுகால உக் ரைன் - ரஷ்யா போரின் மூலம் பலன டைவதற்கு திட்டமிட்டு வந்த அமெ ரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தற்போது ஜெலன்ஸ்கியை கைவிடத்துவங்கியுள்ளன. இந்த நீண்ட போரில் உக்ரைனை ஆத ரித்து வந்த அமெரிக்கா, சவூதி அரேபியாவின் ரியாத் நகரத்தில் நடைபெற்ற அமெரிக்க - ரஷ்ய அதிகாரிகளின் சந்திப்புக்குப் பிறகு போரை கைவிடுவதற்கான நிலைபாடுகளை மேலும் வேகமாக எடுத்து வருகின்றது. குறிப்பாக டிரம்ப் வெளிப்படையாகவே ஜெலன் ஸ்கியை விமர்சிக்கத் துவங்கியுள்ளார்.
ஜெலன்ஸ்கி ஒரு வெற்றிகரமான கோமாளி, 350 பில்லியன் டாலர்களை செலவு செய்தும் அவர் போரில் வெற்றி பெற முடியவில்லை. தூங்கு மூஞ்சி பைடன் நிர்வா கம் உக்ரைனுக்கு எந்த பிணையும் இன்றி 350 பில்லியன் டாலர்களை அள்ளிக் கொடுத்துள்ளது என தனது ‘ட்ரூத்’ சமூக வலைத்தளத்தில் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் போரை நிறுத்தும் சக்தி எனக்கு இருக்கிறது. அது நன்றாகவே நடக்கின்றது. உக்ரைன் போரை துவங்கி இருக்கவே கூடாது என கடுமையாக விமர்சித்த டிரம்ப், தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி சர்வாதிகாரியாக உள்ளார். உடனடியாக உக்ரைனில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜெலன்ஸ்கி விரைந்து செயல்படுவது நல்லது. இல்லையென்றால் அவர் நாட்டை இழக்க நேரிடும் (அவருக்கு என நாடு இருக்காது) என ‘எச்சரிக்கை’ விடுத்தார். மேலும் அதற்காக உக்ரைன் 500 பில்லியன் டாலர்களை திருப்பி கொடுக்க வேண்டும். அதை கனிமங்களாகவோ, இயற்கை எரிவாயுக்களாகவோ கூட கொடுக்கலாம் எனவும் டிரம்ப் மிரட்டியுள்ளார். உக்ரைன் - ரஷ்யா போர் துவங்கியவுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனை அப்பாவியாகவும் ரஷ்யாவை மிகப்பெரிய ஆக்கிரமிப்பாளனாகவும் கட்டமைத்தன.
மேற்கு நாடுகளின் ஊடகங்க ளும் அதனையே பிரதானமாகப் பேசின. இதன் மூலம் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக உதவ வேண்டும் என அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பல பில்லியன் டாலர்க ளுக்கு ஆயுதங்கள் கொடுத்து உக்ரைனை பகடைக்காயாக வைத்து ரஷ்யா மீது போர் நடத்தின. ஐரோப்பிய ஒன்றியம் மட்டும் 70-100 பில்லியன் டாலர்கள் வரை நிதியளித்துள் ளது. ஆனால் இந்த நிதியை கடனாகவும் பிணை அடிப்படையிலும் வழங்கியுள்ளன. அதுவே அமெரிக்கா எந்த பிணையும் இன்றி சுமார் 350 பில்லியன் டாலர்கள் வரை அளித்துள்ளது. இப்போது டிரம்ப் முந்தைய பைடன் நிர்வாகத்தை மிகவும் கடுமை யாக விமர்சித்துள்ளார். மேலும் கனிமங்க ளாகவோ, இயற்கை எரிவாயுவாகவோ 500 பில்லியன் டாலர்கள் வரை அமெரிக்காவிற்கு திருப்பி கொடுக்க வேண்டும் என டிரம்ப் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு நேரடி யாகவே மிரட்டல் விடுத்துள்ளார். இப்போரின் மூலமாக ரஷ்யாவை ராணுவ ரீதியாக முடக்க வேண்டும், பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த வேண்டும் என்ற அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் திட்டம் நிறைவேறவில்லை. இந்நிலையில் தாங்கள் செய்துள்ள ராணுவ உதவிக்கு ஈடாக உக்ரைனை கொள்ளையடிக்க அமெ ரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முடிவெ டுத்துள்ளன. இதற்காக அமெரிக்கா போர் நிறுத்த பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவதுடன் உக்ரைனின் 50 சதவீத கனிமங்களை அமெ ரிக்காவுக்கு கொடுக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்து வருகின்றது.
மறுபுறம் போர் நிறுத்த பேச்சுவார்த்தை யில் தங்களை இணைக்காத காரணத்தால் உக்ரைன் மூலம் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் ஐரோப்பிய நாடுகள் உள்ளன. இந்நிலையில் உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் அதிகாரம் கொடுத்தால், அதற்கு பதிலாகத் தான் பதவி விலகுவதாக ஜெலன் ஸ்கி தெரிவித்துள்ளார். ஆனால் ரியாத் கூட்டத்தில் உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் அதிகாரம் வழங்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. நேட்டோ அமைப்பில் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனை உறுப்பினராக இணைக்கலாம் என 2008 இல் போடப்பட்ட ஒப்பந்தத்தையும் நீக்க வேண்டும் என ரஷ்ய அதிகாரிகள் வலியுறுத்தி யுள்ள நிலையில் ஜெலன்ஸ்கியின் கோரிக்கை நிறைவேறாது எனத் தெரிகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுக ளின் இந்தப் போக்கு வெளிப்படையாகவே ஏகாதிபத்திய நலனைக் காட்டுகின்றது. போர் நிறுத்தத்தின் முடிவாக ஏகாதிபத்திய நாடுகள் ஜெலன்ஸ்கியை கைவிட்டுவிட்டு உக் ரைனை சுரண்டும் முடிவுக்கு சென்று விட்டன எனவும் இதன் மூலம் தெரிய வருகின்றது.