tamilnadu

img

உயிராய் உன்னை நினைக்கின்றேன் - சின்ன மணல்மேடு த.இராமலிங்கம்

குருவி குருவி பக்கம்வா
கொரிக்க நெல்லும்  நான்தருவேன்
அருகே அருகே வாகுருவி 
அக்கா அரிசி வைத்துள்ளேன்!

அக்கா நானும் அழைக்கின்றேன்
அச்சம் வேண்டா அருகேவா
பக்கம் வந்தே உணவுண்டு
பறந்து செல்லத் தடையில்லை!

அணிலும் பக்கம் வருகிறது.
அதற்குப் பழமும் கொடுக்கின்றேன்.
இனிதாய் அதையும் தின்றஅணில்
இன்னும் என்னைக்  கேட்கிறது.

கிளியை அழைத்தேன் வந்ததுவே
கிழங்கும் கனியும் நான்கொடுத்தேன்.
களிப்போ  டதுவும் தானுண்டு
கடிது பறந்து சென்றதுவே !

பறவை புறாவும் உணவுகளைப்
பார்த்துப் பார்த்தே உண்கிறது.
பறவை அணிலோ டெவ்வுயிரும்
பாப்பா எனக்கே உறவாகும்

உன் மேல் மிக்க அன்புண்டு
உயிராய் உன்னை நினைக்கின்றேன்.
என்னை மிகவும் நீநம்பி 
என்றன் பக்கம் வாகுருவி!