கேள்வி:
எத்தனை எத்தனை பாடங்கள்
எப்படி நானும் படிப்பது
அத்தனை பெரிய பாடத்தை
எப்படிப் படித்து முடிப்பது?
மனனம் செய்ய முடியலையே
மனதில் ஏனோ பதியலையே
கனவாய்க் கல்வி போய்விடுமோ
காரணம் எனக்கே புரியலையே?
பதில்:
நண்பா நீயும் மயங்காதே
நேரம் இருக்கு தயங்காதே
என்னால் இதுவோ முடியாதே
எதிர்மறை எண்ணம் கூடாதே!
விளையாட நேரம் ஒதுக்கிவிடு
வீணான எண்ணம் செதுக்கிவிடு
அலைபேசி இருந்தால் தூக்கிஎறி
அப்புறம் சிந்தனை தேங்கும்படி!
பாடம் முழுதும் வாசித்தால்
பதிலும் அதிலே பதிந்திருக்கும்
தேட வேண்டிய அவசியமே
தேர்வு நேரம் இருக்காதே!
அன்று நடத்தும் பாடத்தை
அன்றே நீயும் படித்துவிடு
நன்றாம் அந்தப் பாடத்தை
நடத்தும் போதே குறிப்புஎடு!
ஒருவரி இருவரி கேள்வியிலே
உரிய மதிப்பெண் கிடைத்துவிடும்
பருவத் தேர்வு எதற்காக?
பதியம் போடும் அதற்காக!
பத்து மதிப்பெண் கேள்வியினை
பாதி யாவது எழுதிவிடு
மொத்த மதிப்பெண் எண்பதுக்கும்
மேலே எடுத்து வென்றிடலாம்!
செல்வம் என்கிற பொருட்செல்வம்
சேமிக்க பற்பல வழியிருக்கு
கல்விச் செல்வம் நாம்பெறவே
கற்றல் ஒருவழிதான் இருக்கு!