(கோவி.பால.முருகு)
சிறுவன் தானே என்று எண்ணி
சிந்தித்து இருக்காதே! - உலகில்
சிறுவர் செய்த சிறந்த செயலைச்
சிந்திக்க மறக்காதே!
உலக சாதனை கின்னஸ் நூலில்
உயர்ந்து வென்றார்கள்! - அவர்
நிலவும் புகழில் நிலைத்து மக்கள்
நினைவில் நின்றார்கள்!
குறளைக் கற்றுக் குறைவறச் சொல்லு
குவலயம் உனைப்போற்றும்! - மேலும்
அறிவியல் கற்று அதனில் வெல்லு
அகிலம் உனையேற்றும்!
பிறநாட் டுப்பெயர், தலைநகர் புவியியல்
பிறவும் அறிந்திடுவாய்! - மேலும்
வரலாறு கற்றிடு வானம் உயர்ந்திடு
வாழ்க்கை நிறைந்திடுவாய்!
விளையாடக் கற்றிடு வெற்றிக் களித்திடு
வேண்டும் புகழ்பெறுவாய்! - நல்ல
கலைகளைக் கற்றிடு காட்சி சிறந்திடு
காலத்தில் நிலைத்திடுவாய்!
அரசியல் கற்றிடு அதனைப் புரிந்திடு
ஆள்வோர் அறிந்திடுவாய்! - அதில்
குறைகளைக் கண்டிடு கொதித்து எழுந்திடு
கூடியே போரிடுவாய்!