tamilnadu

img

உலக ஆணழகன் பட்டம் வென்றவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பாராட்டு

மதுரை:
உலக ஆணழகன் பட்டம் வென்ற மதுரை காந்திநகர் ஜவஹர்குறுக்குத் தெருவைச் சேர்ந்த ரா.தனசேகரனை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பாராட்டினார்.

தாய்லாந்து நாட்டில் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் உலக அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. தமிழகத்திலிருந்து (கோயம்புத்தூர், சென்னை, மதுரை) மூன்று பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் மதுரையைச் சேர்ந்த ரா.தனசேகரன் உலகளவிலான ஆணழகன் போட்டியில் (45 வயதிற்கு மேற்பட்டோர்) மூன்றாமிடம் பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் இதற்கு முன்னர் மிஸ்டர் மதுரை, மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் அயர்ன் மேன், மிஸ்டர் சௌத்இந்தியா, மிஸ்டர் இந்தியா ஆகிய பட்டங்களையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
இவர் மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரன் கோவில் தெருவில் உடற்பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது தந்தை வ.ராசு. தாயார் கமலம். மனைவி த.ஜெயலெட்சுமி. இவருக்கு த.விஸ்வா என்ற மகன் உள்ளார்.

ரா.தனசேகரனை சனிக்கிழமையன்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவரது உடற்பயிற்சி மையத்தில் சந்தித்து உலக அளவில் பெருமையை சேர்த்ததற்கு வாழ்த்துத் தெரிவித்து பாராட்டினார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் உடனிருந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கேடசன், ரா.தனசேகரனின் சாதனை மதுரைக்கும், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பதாய் அமைந்துள்ளது. இது போன்ற உடற்பயிற்சிமையங்களையும், உடற்பயிற்சியாளர்களையும் ஊக்குவிப்பதற்கு மத்திய அரசிடமோ, மாநில அரசிடமோ திட்டங்கள் இருப்பின் அதைப் பெற்றுத்தர முயற்சி மேற்கொள்வேன். மதுரையில் தனசேகரன் போன்று பல்வேறு போட்டிகளில் சாதனையாளர்கள் உருவாகவேண்டும். விளையாட்டுத்துறையையும், விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

;