tamilnadu

img

மதுரை மாநகரப் பகுதிகளில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று....

மதுரை 
தமிழகத்தின் வடமாவட்டங்களை போலவே தென் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.  குறிப்பாக மதுரை மாநகர பகுதிகளில் மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்து வருகிறது.  மார்ச் மாதத்தின் முதல் 3 வார இடைவெளியில் தினசரி பாதிப்பு சராசரியாக 30-க்குள் இருந்த நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 70-தை தாண்டியது.

இதனால் மாநகரப் பகுதிகளில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதன் மூலம் ஒரே தெருவில் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட  கொரோனா நோயாளிகள் உள்ள பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டது. தொடர்ந்து 18 தெருக்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அங்கு கொரோனா நோயாளிகள் வசிக்கும் தெருக்கள் வியாழன்று மாநகராட்சி நிர்வாகத்தால் அடைக்கப்பட்டன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மதுரை நகரில் மட்டும் 123 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் தினேஷ்குமார் கூறியது,"மதுரை நகரில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 18 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்ய மாநகராட்சி சார்பில் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வீடு வீடாகச்சென்று கொரோனா அறிகுறிகளை  கண்டறியும்  பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி அப்பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீர், ஏஆர் 30 ஹோமியோபதி மாத்திரைகள் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  18 தெருக்களிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. தெருக்கள் முழுவதும் கிருமி நாசினி  தெளிப்பு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகரில் கரோனா பாதிப்பு உயர்வதால் வரும் நாள்களில் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளின் எண்ணிக்கையும் உயரும் வாய்ப்புள்ளது என்றார்

;