tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் ஐ. மாயாண்டி பாரதி நினைவு நாள்....

பொதுவுடைமைப் போராளி, இதழாளர், எழுத்தாளர், நகைச் சுவைப் பேச்சாளர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் தலைவர் என்று பலபரிமாணம் கொண்டவர்.  இந்திய விடுதலைக்கு முன்னும்பின்னும் 13 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த இவர், தனது 70 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஊர்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் வழியாகப் பொதுவுடமைக் கருத்துகளைப் பரப்பி வந்தவர்.

மாயாண்டி பாரதி சிறையில் இருந்தபொழுது, இந்து மகாசபையினர் அவரிடம் இரண்டாம் உலகப் போர் எதிர்ப்பு நடவடிக்கையில் இனி ஈடுபடுவது இல்லையென மன்னிப்பு கடிதம் எழுதி அரசுக்குக் கொடுத்துவிட்டு விடுதலை ஆகும்படி கூறினர். மாயாண்டி பாரதி அதற்கு ஒப்புக்கொள்ளாமல் நிராகரித்தார்.போர் எதிர்ப்புக் கைதியாக 1941 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் சிறையில் இருந்தபொழுது கம்யூனிஸ்ட் தலைவர்களான ஜமத்கனி, வி. பி. சிந்தன், கே. ஏ. தாமோதரன் ஆகியோரை மாயாண்டி பாரதி சந்தித்தார். அவர்கள் நடத்திய மார்க்சிய வகுப்பால் ஈர்க்கப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1941ஆம் ஆண்டில் மதுரை ஹார்விமில் தொழிலாளர் போராட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அதனால் மீண்டும் கைது செய்யப்பட்டு மதுரை, திருச்சி, வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். அங்கே கே. பி. கிருஷ்ணா என்பவரிடம் மார்க்சியம் பயின்றார். தண்டனைக் காலம் முடிந்து 1942 ஜூலையில் விடுதலை ஆனார். மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆனார்.
1942 ஆகஸ்ட்  மாதம் நடைபெற்ற ஆகஸ்ட்புரட்சியில் கலந்துகொண்டதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அப்பொழுது அவர்தம் தாயார் காலமானார். தாயாரின் முகத்தைக் கடைசியாகப் பார்க்க மாயாண்டி பாரதியை அனுப்ப அன்றைய பிரிட்டிஷ் அரசு மறுத்துவிட்டது. பின்னர் தண்டனை முடிந்து 1944 ஆம் ஆண்டில் விடுதலையானார். 1945 ஆம் ஆண்டில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, சுபாஷ் சந்திர போஸின்இந்திய தேசியப் படையினரை விடுதலைசெய்ய வேண்டுமெனப் போராட்டம் நடத்தியது. மாயாண்டி பாரதி அப்போராட்டத்தில் கலந்துகொண்டார். 1946 பிப்ரவரி 23 ஆம் நாள் இராயல் இண்டியன் நேவி என்னும்

இந்திய விடுதலைக்குப் பின்னரும் பிரிட்டிஷாரின் கையில் இருந்த தொழில்களையும் சொத்துகளையும் நாட்டுடைமையாக்க வேண்டும் எனகம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்ட மாயாண்டி பாரதி1948 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். 1949 ஆம் ஆண்டில் விடுதலையானதும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

நெல்லை சதி வழக்கு
1950 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப் பட்டது. பலரும் கொல்லப்பட்டனர். அக்கொலைகளுக்குப் பழிவாங்கும் நோக்கில்,தூத்துக்குடிக்கு அருகில் உள்ள மீளவிட்டான் தொடர்வண்டி நிலையத்தில் தண்டவாளத்தைப் பிரித்துச் சரக்குத் தொடர்வண்டியின் 25 பெட்டிகளையும் 2 இயந்திரங்களையும் மாயாண்டி பாரதி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கவிழ்த்தனர். அவ்வழக்கில் மாயாண்டி பாரதிக்கும் மேலும் பதின் மருக்கும் இரட்டை வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட 100 பேரில், மீதமிருந்தவர்களுக்குக் குறைந்தகால அளவுத் தண்டனைகள் வழங்கப் பட்டன. மதுரைச் சிறையில் 4ஆண்டுகள் தண்டனை அனுபவித்த மாயாண்டிபாரதி உள்ளிட்டவர்கள், தமிழகத்தில் நடந்த பெரும் போராட்டங்களுக்குப் பின்னர், 1954 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டனர்.1956 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ரோசன் பார்க் இணையர்கள் மின்சார நாற்காலியில் உட்கார வைத்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னை அமெரிக்க தூதரகத்தின் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் மாயாண்டி பாரதி கலந்துகொண்டார். இதனால் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறையில் இருந்தார்.

1962 ஆம் ஆண்டில் இந்திய - சீன எல்லைப் போரின் பொழுது, சீனாவோடு சமாதானம் செய்ய வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடினர். அதன் காரணமாக மாயாண்டி பாரதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1966 ஆம் ஆண்டில் விடுதலை ஆனார்.1964 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. மாயாண்டி பாரதிஅக்கட்சியில் இணைந்தார். 1968 ஆம் ஆண் டில் கீழவெண்மணிப் படுகொலைகளை எதிர்த்து நடத்தப்பட்ட கண்டனப் போராட்டத்தில் மாயாண்டி பாரதி 144 தடையை மீறிக்கலந்துகொண்டதனால் கைது செய்யப்பட்டார்1985 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்துக்கு (USSR) சென்று திரும்பினார். 1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மாயாண்டி பாரதி தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் மறைந்தார்.

;