tamilnadu

img

போட்டித் தேர்வு : வழிகாட்டினா, ஜெயிச்சுருக்கனுமா? - ஹரி

கனமழைக்கு வாய்ப்பு என்று செய்தி படித்தது நினைவுக்கு வந்ததால் சிரித்தவாறே பேருந்தை விட்டு தேர்வர் இறங்கினார். சாலையைக் கடப்பதற்காகக் காத்திருந்த சக தேர்வர், “என்ன சிரிச்சுக்கிட்டே வர்றீங்க” என்றார். “கனமழைக்கு வாய்ப்புனு போட்டிருந்துச்சு.. வெயில் பாருங்க. சுள்ளுனு அடிக்குது..” “எப்பவுமே இப்புடிதாங்க.. பெய்யும்னா பெய்யாது... தானா பெய்யும்..” தேர்வர் பார்த்த பார்வையால் “அனுபவத்துல சொல்றேன்..” என்று கொஞ்சம் இறங்கிக் கூறினார். சாலையைக் கடந்தவுடன் இரண்டு தேர்வர்கள் கடுமையாக விவாதித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.  

“நண்பா என்ன ஆச்சு” என்று அவர்களுக்கு வேகத்தடை போட முயற்சித்தார்கள். ஆனால், இவர்களையும் சாட்சிக்கு அவர்கள் அழைத்தனர். “நீங்களே சொல்லுங்க, ரெண்டு பேர்ல யார் சொல்றது சரின்னு.. நமக்கு வகுப்பு எடுக்குற டீச்சர்ஸ்லாம் ஏன் தேர்ச்சியாகுறது இல்ல..? உடனடியாக ஆக முடியாதுல்ல... அதனால நமக்குச் சொல்லிக் குடுக்க ஆரம்பிக்குறாங்கன்னு நான் சொல்றேன்.. அவங்க எப்புடி நமக்குச் சொல்லிக் குடுக்கலாம்னு இவன் சொல்றான்..”
‘இதுதான் பிரச்சனையா’ என்று இருவரும் பார்த்துக் கொண்டனர்.
“என்ன ஒண்ணும் பேச மாட்டேங்குறீங்க..?”
“இல்ல.. ரெண்டு பேர் சொல்றதயும் ஏத்துக்குறதுல எனக்கு சிரமம் இருக்கு..”
“உங்களுக்கு சீனியர் ரொம்ப நெருக்கமாச்சே.. அவர வெச்சு சொல்லுங்க பாப்போம்..”
“அவருன்னு இல்ல... நமக்குப் பாடம் எடுக்குறவங்கள ஆசிரியர்களாவே நாம பாப்போம்... தேர்வுல வெற்றி பெறாதவங்க... இல்லேனா, அவங்கள வெச்சு நமக்கும் தாமதமாகும்னு நினைக்குறது எல்லாம் தயாரிப்பைப் பின்னுக்குத தள்ளவே செய்யும்..”
“அவங்க நமக்கு ரோல் மாடல் இல்லையா..? இப்ப இந்தியாவுல பேட்மிண்டன் ஆடுறவங்களப் பாருங்க... முன்னணி வீரர், வீராங்கனைகள் எல்லாமே பிரகாஷ் படுகோன்.. கோபிசந்த் ஆகியோரோட மாணவர்களாத்தான் இருக்காங்க.. அந்த ரெண்டு பேரும் சர்வதேசத் தரப்பட்டியல்ல உச்சத்த அடைஞ்சவங்க.. தங்கள மாதிரியே பல பேர உருவாக்கிக்கிட்டு இருக்காங்க..”
“பெரிய ஆட்டக்காரங்க எல்லாம் நல்ல பயிற்சியாளரா இருக்கனும்னு அவசியமில்லையே... சொல்லித் தர்றதுங்குறது எல்லாருக்கும் வருமா என்ன..?”
“அதுதான் இங்க விவாதமே... வரணும்னு நான் சொல்றேன்... இவன் என்னன்னா, வெற்றி தாமதமாயிருக்கு அவங்களுக்குனு சொல்றான்..”
“பயிற்சியாளரையும், வெற்றியையும் போட்டுக் குழப்பிக்க வேண்டாமே.. கிரிக்கெட்டுல பெரும் வெற்றியைச் சந்திச்ச சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் ஆட்டங்கள்ல ஆடுனாரு... சாதனை எந்திரம்னு சொல்லலாம்.. முதல் தர ஆட்டங்கள் என்று எடுத்துக் கொண்டால் 310 ஆட்டங்கள்ல அவரு விளையாடுனாரு... அவரோட பயிற்சியாளர் யாரு..?  ராமகாந்த் ஆச்ரேகர்... ஒரேயொரு முதல்தர வகுப்பு ஆட்டத்துலதான் அவர் விளையாடிருக்காரு... இரண்டு இன்னிங்ஸ்கள்லயும் சேத்தே 28 ரன்தான் எடுத்தாரு.. ஆனா, ஒரு தலைசிறந்த கிரிக்கெட்  ஆட்டக்காரரோட பயிற்சியாளர்..”
“நீங்க சொல்றது ஒரு வகைல சரிதான்.. உலகக் கால்பந்துல உச்சத்துல இருக்குற லியோனல் மெஸ்ஸி, இப்போ இன்டர் மியாமிங்குற அணிக்காக விளையாடுறாரு.. அந்த அணிக்கு ஜெரார்டோ மார்டினோனு ஒரு பயிற்சியாளர் இருக்காரு..  அவரும் அர்ஜெண்டிக்காரர்தான்... தேசிய அணிக்கும் பயிற்சியாளரா இருந்திருக்காரு... மெஸ்ஸி பார்சிலோனா கிளப்புக்கு ஆடுறப்ப அங்கயும் பயிற்சியாளர்.. ஆனா அர்ஜெண்டினா தேசிய அணிக்காக மூணு ஆட்டங்கள்தான் விளையாடிருக்காரு... அதுலயும் ரெண்டு 20 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கான ஆட்டங்கள்.. ஒரு கோல் கூட அடிக்கல..”
“பாத்தீங்களா... இவ்வளவு விபரம் உங்களுக்குத் தெரிஞ்சுருக்கு... இப்படிப் பல பயிற்சியாளர்கள் இருக்காங்க..  ஆட்டக்காரர்களா ஜொலிச்சவங்களும், பயிற்சியாளர்களா ஜொலிச்சுருக்காங்க... பெரிய ஆட்டக்காரங்க சில பேரு, பயிற்சியாளரா படுமோசமான தோல்விகளயும் சந்திச்சுருக்காங்க..” 
“அப்புடியா..?”
“ஆமா.. பெரிய ஜாம்பவான் நம்ம கபில்தேவ்... அவரு இந்திய அணியோட பயிற்சியாளரா இருந்தப்ப 8 டெஸ்ட்  ஆட்டங்கள்ல ஆடுன அணி ஒரு ஆட்டத்துல மட்டும்தான் ஜெயிச்சுது.. 25 ஒரு நாள் ஆட்டங்கள்ல எட்டுல மட்டும்தான் வெற்றி கிடைச்சுது..”
“என்ன ரெண்டு பேரும் இவ்வளவு புள்ளிவிபரம் வெச்சுருக்கீங்க..?”
அப்போது அங்கு வந்து சேர்ந்த சீனியர், “என்ன ஆச்சு... புள்ளிவிபரப் புலிகளா மாறியிருக்கீங்க..”
“சீனியர்... இன்னிக்கு வாட்ஸ் அப்புல ஒரு கவிதை படிச்சேன்... உங்களப் பாத்தவுடன சொல்லனும்னு இருந்தேன்..”
“கவிதையா..? சொல்லு... சொல்லு..”
“துளித்துளியாக
ஒவ்வொரு துளியாக
கடலையே குடிப்போம்...”
“ஏம்பா... பயங்கரமா இருக்கே.. சரி... வா, வா.. தேநீர் குடிச்சுட்டு வருவோம்..”
“இல்ல, சீனியர்... டி.என்.பி.எஸ்.சி.க்குப் படிச்சா, இந்தப்பக்கம் ஒரு பத்து யூனிட்டு, அந்தப் பக்கம் மொழிப்பாடம்னு நிறைய படிக்குறதுக்கு இருக்குனு பேசிட்டு இருந்தாங்க.. இதைப் படிச்சப்ப அவங்க ஞாபகம் வந்துச்சு.. ஏன், சீனியர்.. நீங்க கவிதைலாம் வாசிக்க மாட்டீங்களா..?”
“வாசிக்காம எப்புடி நாம மொழிப்பாடத்துல மார்க் வாங்க முடியும்..? சில வரிகள்லாம் குடுத்து அத யாரு எழுதுனதுனு கேக்குறாங்களே..? நான் கூட சில சமயம் முயற்சி பண்ணிருக்கேன்..” 
“என்ன சீனியர், கவிதை எழுதுவீங்களா.. சொல்லவே இல்ல.. எங்க ஒண்ணு சொல்லுங்க, பாப்போம்..”
“உன்னோடு தேநீர்..
வயிற்றுக்குள் அல்ல..
நேராக மனதிற்குள்.”
“சரி, சீனியர்... கவிதை சொல்றதாச் சொன்னீங்களே... சொல்லுங்க...”
“ஓ... அப்போ நான் சொன்னது கவிதை இல்லியா.. கிண்டல் பண்றியோ..?”
“சீனியர்... நீங்கதான சொல்லிருக்கீங்க... இப்போதைக்கு எதப்படிச்சாலும், எதக்கேட்டாலும் நமக்கு பாடம் ஞாபகம் வரனும்னு... அதனாலதான் அப்புடிக் கேட்டேன்.. ஒரு பாட்டச் சொல்லிக்கூட நீங்க சொன்னீங்க... அந்தப் பாட்டு வரிகள்லாம் கேக்குறதுக்கு ஒரு மாதிரி இருக்கும்... ஆனா, உடல்ல வியர்க்காத பகுதி உதடுனு அதுல வரும்.. ஒன்றரை மார்க் முக்கியம்னு சொல்லலியா..??”
“ஆமா... அதுமாதிரிதான் இப்பவும் யோசிக்கனும்.. மனதிற்குள் தேநீர் போகுமா..?  இப்புடிக் கேட்டுட்டு, உடல் பாகங்கள்... அப்புறம் அதோடு செயல்பாடுகள்னு படிச்சிர வேண்டியதுதான்..  சரி, கேக்கனும்னு நெனச்சிட்டே இருந்தேன்.. ரொம்ப நாளா முடி வெட்டாம இருக்கியே... என்ன விஷயம்..”
“சும்மாதான் சீனியர்... வெட்டிற வேண்டியதுதான்... முடின்னா, இறந்து போன உயிரணுக்கள்தான..” 
“ஆமா, முடி, நம்ம நகம் இதையெல்லாம் உருவாக்குறது கெரட்டின்னு ஒரு புரதம்தான்.. காண்டாமிருகத்தோட கொம்பக் கூட அதுதான் உருவாக்குது..”
“அந்த ஒத்தக் கொம்பையுமா..?”
“ஆமா... அதையும்தான்.” 
“அந்தக் கொம்புல மருத்துவ பயன் இருக்கும்னு சொல்வாங்களே..”
“இருக்குது... ஆனா, அது அழிந்து வர்ற விலங்குகள் பட்டியல்ல இருக்குறதுனால, 1993லயே மருத்துவ நோக்கங்களுக்கான அந்தக் கொம்பப் பயன்படுத்துறதுக்கு தடை விதிச்சிட்டாங்க..”
“சீனியர்... நாம ஒரு விஷயத்தப் பேச ஆரம்பிச்சோம்.. அங்கங்க இடைவெளி விழுந்துருதே..”
“ஒருநாள் முழுக்க நேரம் ஒதுக்கிப் பேசிரலாம்..”
“இந்த டீல் நல்லாருக்கு... வர்றேன், சீனியர்..”