தஞ்சாவூர், ஏப்.25 - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மருவூர் மணல் குவாரியில் கனரக வாகனங்களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.ஆர் என்ற தனியார் நிறுவனத்திற்கு மணல் அள்ள அனுமதி வழங்கியதை கண்டித்தும், மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் அள்ள அனுமதி கேட்டும், கடந்த வெள்ளிக்கிழமை மணல் ஏற்றி வந்த கனரக லாரியை தடுத்து நிறுத்தி, சிஐடியு மணல் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆறு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தின் நிறைவில், திருவையாறு வட்டாட்சியர் நெடுஞ்செழியன், பொதுப்பணித் துறை நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் கல்யாண சுந்தரம், திருவையாறு காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணி யம் உள்ளிட்டோர் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஏப்ரல் 25 (திங்கள்) காலை முதல், தொடர்ந்து சனிக்கிழமை வரை வாரத்தில் ஆறு நாட்கள், காலை 7 மணி முதல் 12 மணி வரை மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி வழங்கினர். மேலும் 25 கனஅடி மணல் எடுக்க ரூ.350 கட்டணம் வசூலிப்பது எனவும் தெரிவித்தனர். இந்நிலை யில், திங்கட்கிழமை மணல் எடுப்பதற்காக சென்ற மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, முறை சாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், வி.ச.மாவட்ட பொருளாளர் எம்.பழனிஅய்யா, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ், திருவையாறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு மற்றும் மாட்டு வண்டி சங்கத்தினர் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தற்காலிகமாக மாட்டு வண்டியில் மணல் அள்ள அதிகாரிகள் அனுமதி அளித்தனர். மணல் குவாரிக்கு உரிய அனுமதி வழங்கப்படும் வரை, கனரக வாகனங்களில் மணல் அள்ளவும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.