tamilnadu

img

‘மிகப்பெரிய பொக்கிசம் சங்க இலக்கியம்’

விருதுநகரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் மதுரை மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன்  ‘தமிழென்னும் பொய்யாக் குலக்குடி’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் பகுதிகள்

‘‘தீபாவளியன்று உத்தரப்பிரதேச அரசு 15 லட்சம் தீபங்களை ஏற்றி புதிய கின்னஸ் சாதனை புரிந்தது. அதைவிட மிகப்பெரிய சாதனையை தமிழக அரசு செய்து வருகிறது. அது என்னவெனில், மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருவது தான். அவர்கள் அங்கே தீப ஒளியை ஏற்றி வைத்தார்கள். இங்கே, மனதில் உள்ள இருளை அகற்றும் சுடர் ஒளியை ஏற்றி வைத்து வருகிறார்கள். வடமாநிலங்களில் மிகக் குறைவாகவே நூலகங்கள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை நூலகங்கள் உள்ளன. கேரளாவில் 60 ஆயிரம் நூலகங்கள் உள்ளன. இந்தி மொழியின் கண்காட்சியை வைத்தால் 500 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகங்கள் மட்டுமே இருக்கும். ஆனால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட  நூற்றுக்கணக்கான புத்தகங்களை லட்சக்கணக்கான வாசகர்களிடம் பகிர்கின்ற புத்தகத் திருவிழாவை நாம் தமிழகத்தில் தான் பார்க்க முடியும். மத்தியப் பிரதேச மாநிலத்தில் விந்திய மலைத் தொடரில் உள்ள ஒரு பகுதி. அங்கு 700 குகைகள் உள்ளன. அதில் 500-க்கும் மேற்பட்ட குகைகளில் ‘ஓவியங்கள்’ உள்ளன. இவை 30 ஆயிரம் வருடங்கள் தலைமுறை, தலைமுறையாக  வரையப்பட்ட ஓவியங்களாகும். இது மிகப் பெரிய வரலாற்றுப் பொக்கிசமாகும். வரலாறு முழுக்க இந்த ஓவியங்களில் உள்ளன. அது கலையின் பொக்கிசம் என்றால், அதற்கு இணையான இலக்கிய பொக்கிசம்  ‘சங்க இலக்கியம்’. 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆண்டு மனிதனின் நினைவுகள் முழுக்க தொகுக்கப்பட்டுள்ளது சங்க இலக்கியம். இந்த அறிவு சாதாரணமானதல்ல. கீழடியின் பெருமை ஒரே பக்கமாக எழுதப்பட்ட வரலாற்றை சட்டென நிறுத்திய பெருமை கீழடியைச் சாரும். இன்று வரை அதன் மீதான பயம் சிலருக்கு உள்ளது. அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கையை ஏன் தொல் பொருள் ஆராய்ச்சித் துறை வெளியிட மறுக்கிறது. ஏனெனில், தமிழ் நாகரீகத்தின் காலத்தை, எழுத்தறிவின் காலத்தை அது இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு செல்கிறது.  அங்கு கிடைத்த பொருட்கள் அனைத்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ளதாகும். தமிழ்நாட்டில் தொல்லியல் இடங்கள் 500 வரை உள்ளன. புத்தகமும், இலக்கியமும் என்ன செய்யும்? மனதின் அழுக்கை கழுவுகிற வல்லமை அதற்கு உண்டு. அது சிந்தனையை கடத்திக் கொண்டே இருக்கும். கிளி பேசுகிற மொழிக்கு பெயர் கிள்ளை. தில்லைக்கு பக்கத்தில் கிள்ளை உள்ளது. கிளிகளின் பெருங்காடு அங்கு இருந்தது. சங்க இலக்கியத்தில் கிளிகளைப் பற்றி 60-க்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. கிளி பேசும் மொழி பற்றி 13 கவிதைகள் உள்ளன.  வரலாற்றின் எந்தக் கட்டத்திலும் 2500 ஆண்டுகளாக அறுபடாத மொழியாக தமிழ் மொழி மட்டும் தான் உள்ளது. அதற்கான காரணம், இது, அரசர்களால், அதிகாரத்தால் பார்த்து வளர்க்கப்பட்ட மொழியல்ல. இது   எல்லாக் காலத்திலும் மக்களின் மொழி.   பாலினப் பாகுபாடு இல்லாத சமூகம்  வட இந்தியாவில் அசோகர் கால கல்வெட்டுகள் மட்டுமே உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் கிடைத்துள்ள 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், 140  பானைகள், நாணயங்கள், முத்திரை மோதிரங்கள், தங்கக் கட்டிகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் எல்லாம் பேரரசனைப் பற்றி அல்ல. எல்லாம் மக்களைப் பற்றியது.

இதை எழுதியது எல்லாம் சாமானிய மனிதர்கள். அப்படியென்றால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்று திசையெங்கும் செழித்திருந்தது என்பதன் அடையாளம் தான் அந்த எழுத்துக்கள். ஆணும் பெண்ணும் பாலின பாகுபாடில்லாத சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்துள்ளது.  தமிழ்நாட்டினுடைய அதிசயம், வியப்பு என்னவெனில் இலக்கியமும், வரலாறும், தொல்லியலும் என மூன்று புள்ளிகளும் ஒன்றுக்கு ஒன்று ஒளியூட்டி இருள் அகற்றுகிற பேரொளியாக இங்கே எழுகிறது. பெரு மதங்கள் உருவாவதற்கு முன்பே நம்முடைய மொழி உருவானது. எனவே, தான் பலர் இந்த மொழிக்கு சொந்தம் கொண்டாடினர். இன்னும் சொல்லப்போனால், பலர் இந்த மொழிக்கு பங்களிப்பு செய்தனர். சமணர்கள், பௌத்தர்கள், சைவர்கள், வைணவர்கள்,  இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் பங்களிப்பை செலுத்தினர். எல்லோரும் கொடுத்த கொடைகளை பெற்றுக் கொண்டு தனக்கான காலில் நின்று விண்முட்ட எழுகிற பேரலையாக பெரும் நெருப்பாக இம் மொழி உள்ளது. இந்த சிறப்பு, பன்மைத்துவம், தனித்துவம் அனைத்தும் தமிழ்மொழியில் உள்ளது. உ.வே.சா சங்க இலக்கியத்தை தேடித் தேடி எடுத்தார். மிகப்பெரிய செல்வந்தர்களிடம் எடுக்கவில்லை. அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத தமிழ்ப்புலவர் கவிராயன் வீட்டில் தான். அவர்கள் தான் மகத்தான தமிழ் செல்வத்தை பாதுகாத்தவர்கள், அதனால் தான் ஒரு போதும் வீழாமல் இருக்கிறது சங்க இலக்கியம். 

- தொகுப்பு : கே.ஜெயக்குமார்