tamilnadu

img

“தோழர் ஹெலன் கெல்லர்” - கணேஷ்

கையில் புத்தகங்களோடு கிளமபியவளைப் பார்த்தவுடன்
ஆளே இல்லாத கடைல யாருக்குமா டீ ஆத்துற..
என்ன அங்கிள்.. நக்கலா..
இல்லமா... எல்லாத் தேர்வும் ரத்தாகிட்டே இருக்கு... ஒரு தேர்வர் சொல்றாரு, ஒரு மாசத்துக்கு முன்னாடியே வினாத்தாள் கிடைச்சுருச்சாம்.. தனக்கு வேண்டிய தேர்வர்களுக்குத் தேவையான மார்க் கிடைக்கலைனா, கருணை மதிப்பெண்ணு போட்டுக்குறாங்களே.
இரவோட இரவா இன்னோரு தேர்வ ரத்து பண்ணினருக்காங்க.. அதுக்காகப் படிக்காம இருக்க முடியுமா.. ஜனநாயக நாடுதான.. மக்களோட உணர்வுகள் முக்கியமாச்சே.. இப்புடி தில்லுமுல்லுகள் நடக்குறத மக்கள் சாதாரணமா எடுத்துக்க மாட்டாங்களே. 
அது என்னவோ சரிதான்.. மக்கள் பேசுறதுதான் நாடு போற பாதையா இருக்கும்.. தேர்தல்ல கூட பாரு.. எல்லா ஊடகமும் சொன்னது ஒண்ணு... ஆனா, மக்கள் நினைச்சது வேற.. 
அங்கிள், ஆனா, எப்பவுமே மக்களோட உணர்வுகள ஆட்சியாளர்கள் கணக்குல எடுத்துக்குறாங்கன்னு சொல்லிற முடியுமா?
வேற பிரச்சனையை முன்னிறுத்த முயற்சிப்பாங்க.. அதுல வெற்றி கிடைக்குமானு பாப்பாங்க.. இந்தத் தேர்தல்ல கூட அதத்தான் பண்ணிப் பாத்தாங்க.. நடக்கல.. சில சமயங்கள்ல திசைதிருப்புறதுல வெற்றி கிடைக்கும்...
சிலர் கண்ணிருந்து குருடராய், காதிருந்து செவிடராய், வாயிருந்து ஊமையாய் இருந்துர்றாங்களே..
இதெல்லாம் பைபிள் வாசகங்கள்தானே... இப்போ நாம மாறியிருக்கோம்... அதனாலதான் மாற்றுத் திறனாளிகள்னு கூப்புடுறோம்..
போன வாரம் தேர்வு எழுதப் போனோம்.. ஒரு மாற்றுத்திறனாளித் தேர்வர் மோட்டார் பொருத்துன சக்கர நாற்காலில வந்தாரு.. அவர வெளிலயே நிறுத்திட்டாங்க... தவழ்ந்துதான் மையத்துக்குள்ள வந்தாரு... 
மாற்றுத் திறனாளிகள் பத்தி புரிதல் இல்ல.. சொல்லப்போனா, கால்குலேட்டர் மாதிரி சில உபகரணங்களை தேர்வு அறைக்குள்ள அவங்க எடுத்துட்டுப் போகலாம்னே இருக்கு.. ஆனா, அனுமதிக்குறதில்ல..
ஓ.. என்கூட ஒருத்தர் வந்தாரு.. அவரோட வாக்கிங் ஸ்டிக்கை புடுங்கி வெச்சுட்டாங்க... நான்தான் கூட்டிட்டுப் போனேன்..
இப்புடி இவங்ககிட்ட கொடூரமா நடந்துக்குறாங்க.. மறுபக்கம், ஒரு மாசத்துக்கு முன்னாடியே வினாத்தாள்களக் காசுக்கு வித்துடுறாங்க.. 
சிலபேரு வெளிப்படையாவே இவங்கள்லாம் வந்து என்ன பண்ணப் போறாங்கனு பேசுறாங்க, அங்கிள்... பெரிய ஹெலன் கெல்லர்னு நினைப்புனு கிண்டல் வேற..
ஹெலன் கெல்லர் கோடில ஒருத்தரு.. மாற்றுத் திறனாளிகளுக்கு உத்வேகம் தர்ற வாழ்க்கை அவரோடது.. அவர வெச்சு இவங்களக் கிண்டல் பண்றது கொடுமை..
அவரப் பத்தி எங்களுக்கு தேர்வுப் பாடத்திட்டத்துல இருக்கு, அங்கிள்.. ஆனா, அவர விட எனக்கு சலீவன் பத்தி நிறைய தெரிஞ்சுக்கனும்னு ஆசை..
சலீவனும் பார்வை மாற்றுத் திறனாளினு நெறயப் பேருக்குத் தெரியாது.. பெரும் வறுமை... குடிகாரத்தந்தைனுதான் அவரோட தொடக்க வாழ்க்கை.. 14 வயசுலதான் படிக்க ஆரம்பிச்சாரு. பார்வையை சரி பண்ண அறுவை சிகிச்சை பண்ணுனாங்க.. கொஞ்சம் பார்வைய மீட்டாங்க..
வித்தியாசமா கத்துக் கொடுத்தாங்களாமே..?
ஆமா.. ரெண்டு பேருக்கும் முதல்ல சரிப்பட்டு வரல.. ஒரு நாள் தண்ணீரில கை கழுவுறப்ப, ஹெலனோட கைல தண்ணீரை ஓட விட்டு W-A-T-E-R னு எழுதிக்காட்டிருக்கார்... அத அப்புடியே ஹெலன் புடிச்சுக்கிட்டார்.. ஆறு மாசத்துல 575 வார்த்தைகளக் கத்துக் கொடுத்தாரு... பிரெய்லி முறையையும் சொல்லிக் கொடுத்தார்.. ஹெலனோட வாழ்க்கை மாறுச்சு.. 49 வருஷம் ரெண்டு பேரும் ஒண்ணாப் பயணிச்சாங்க..
ஹெலனோட வெற்றில சலீவனுக்கு பெரிய பங்குதான, அங்கிள்..
ஆமா... ஆமா.. அதேநேரத்துல ஹெலனும் சாதாரண ஆளில்லையே.. நீ ஒரு வாசகம் சொன்னியே... அப்படி மூணு பிரச்சனைகளும் இருந்த ஒரு பெண் இவ்வளவு சாதிச்சாங்க.. 
அப்புடியா... பார்வை, கேட்கும் திறன், பேச்சுனு எதுவுமே அவருக்கு வராதா..? ஜூன் 27 ஆம் தேதி அவரோட பிறந்தநாள்.. அவரப்பத்தி எங்க பாடப்புத்தகத்துல இல்லாதது எதுவும் இருக்கா..?
இருக்கு... அவரு சோசலிஸ்டு.. அந்தக் கோட்பாடுதான் உலக மக்களுக்கு விடிவு தரும்னு அழுத்தமா நம்புனாரு.. அமெரிக்க சோசலிஸ்டு கட்சில இணைஞ்சு செயல்பட்டாரு.. 
அப்படினா, தோழர் ஹெலன் கெல்லர்னு சொல்லுங்க.. என்றவாறே நகர்ந்தார்.

;