வறட்சிக்கு ஏற்றபடி
வெள்ளாமை செய்ய,
வளர்ந்த பயிர் அழுகுதம்மா
பேய் மழை தான் பெய்ய!
பருவம் மாறி மழை அடிக்குது;
துருவக் கரடி குளிரில் நடுங்குது!
மழைக்கு பதில் பாராய்
முகில் குன்றுகள் நேராய்
வயலின் மீது இற்று விழுந்தது!
பயிரின் மீது பட்டு அழுந்துது!
வெள்ளம் சூழ்ந்து பள்ளத்தோடு
மேடும் மூழ்குது
ஜாண் பறித்தால் தரையில் ஊற்று;
ஜன்னி வரும் ஊதைக்காற்று;
அழுகி நாறும் கிழங்கு;
துயரம் நூறு மடங்கு.
பாறை மீது நட்டாலும் நாற்று
அழுகிப் போகும் ஈரத்தை ஏற்று!
உழவனது தோழன்மழை;
இன்றுகொடும் கூற்று.
மாமழையை போற்றுதும் என்றான்.
மாமழையை தூற்றுதும் என்பேன்!
நஞ்சானது மழையே;
பஞ்சானது தரையே;
மண்ணெல்லாம் புண்ணாய் விடவே
மழை கசிந்து ஓடுது புரையே.
உழவன் இமை ரோமமே முள்
ஓடும் நித்திரையே!
வறட்சியோடு மல்லுக் கட்டுகள்;
வெள்ளத்தோடு ஜல்லிக்கட்டுகள்;
மல்லாந்து குடிசை
படகு ஆகும் மகிமை!
மிரட்சியோடு பிள்ளைக் குட்டிகள்;
கோமாரி யில் ஆட்டுப்பட்டி கள்;
மடியும் பசுக்கள்உழவன்வாழ்வில்
மரண சாட்சிகள்.
விவசாயி கண்ணீர் வெள்ளமே
வெல்லுமா அதைத் தண்ணீர் வெள்ளமே?
தண்ணீருக்கு அணைகள்;
கண்ணீர்க்கேது அணைகள்?
கரைகள் போன்ற இமையும் கரையுமே!
கண்ணீர்த் துளிகள் இரும்பாய் கனக்குமே!
உருக்குநெஞ்சும் கண்ணீர் சூட்டில்
உருக லாகுமே.