tamilnadu

img

வன்ம மேகத்தைக் கலைக்கும் நாவல் - -ப.முத்துக்குமரன் திருவண்ணாமலை

இந்த நாவலின் முன்னுரையே ‘‘தமிழ்நாடே சமத்துவபுரமாய்’’ என்கிற வேட்கையுடன், வள்ளுவன் சொன்னதுபோல் ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்கிற சமத்துவ சிந்தனைகளுடன் எழுதப்பட்டுள்ளது. தமிழில் ‘‘சமத்துவம் உலாவும் இடமே’’ என்கிற பாடல் மயானத்தைக் குறிக்கும். இந்த நாவலில் இறந்து விட்டார் என்கிற சோகத்தை விட பெரும் சோகம் இறந்த உடலைப் புதைக்க நடக்கும் போராட்டமே நாவலின் ‘‘கரு’’.  நாவலாசிரியர் அரசுப் பணியில் இருந்ததாலும், தொழிற்சங்கத் தலைவ ராகத் திகழ்ந்ததாலும், இவரது மார்க்சி யக் கண்ணோட்டமும் இவரது எழுத்து களும் இவர் ஒரு பொதுமைவாதி என நமக்கு உணர்த்துகிறது.   நாவலின் ஆரம்பமே இயற்கை வளத்தைப் பற்றி பேசுகிறது. அது- ‘‘ஆறு இருக்கும் ஊரில் வாழ எல்லோருக்கு வாய்ப்பு வராது. வாய்ப்பு கிடைக்கும் மக்களுக்கு அனுபவிக்க நேரமிருக் காது’’. அடுத்த வரி ‘‘இப்போதெல் லாம் ஆற்றில் தண்ணீர் போவதே அதி சயந்தான்’’. இது போன்ற எளிமை யான வரிகள் தான் வாசிக்கும் போது வாசகனை கட்டிப்போட்டு ஒரே மூச்சில் இந்த நாவலை வாசிக்கச் செய்துள்ளது.  விடியலூர் அதன் பெயர். பெரும்பான்மை மக்கள் விவசாயம்.  கூலிகள் வீட்டில் மிலிட்டரி உத்தி யோகம் அல்லது நூறு நாள் வேலை திட்டம். பூவரசுவின் அத்தை இறந்து விட்டார் என்கிற சோகத்தை விட சுடு காட்டுப் பிரச்சனை குறித்து தனது ஊர்க்காரனும், மிலிட்டரியில் தன்னோடு  பணிபுரியும் கோபியுடன் தனது இந்நிலை குறித்துப் பேசுகிறான். மிச்சம்  இருப்பது இன்னும் இரண்டு நாள் விடு முறை, அதற்குள்ளே சுடுகாட்டுப் பிரச்ச னை, எல்லா ஊர் பிரச்சனைகளையும் தீர்க்க முடியுமா என்ன? ஊர்த் தலைவர் மற்றும் அவரின் ஜால்ராக்கள் செய்கின்ற அட்டூழியம் தீண்டாமைக் கொடுமையின் கோரத்தி னை விளக்குகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சேரி மக்களும், ஊர்ப் புறத்தில் வாழ்கின்ற சாமானிய உழைப்பாளி மக்களும் தான் என்பது இந்த நாவல் முழுவதும் பரவிக் கிடக்கிறது. நாட்டாமையிடம் யாரும் பேச்சுவார்த்தைக் கூடாது என்பதில் ஆரம்பித்து, சேரி மக்களுக்கு சவரன் கூட செய்யக்கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு எனும் பெயரிலான ‘‘தீண்டாமை’’.

இதற்கு சேரியும் எதிர்வினை ஆற்று வது, மிகச் சிறப்பு. அதாவது செப்டிக் டேங்க் தொட்டி அடைப்பு, இறந்தால் மேளம் அல்லது அது சம்பந்தப்பட்ட எந்த வேலையும் செய்யமாட்டோம் போன்றவற்றை இந்த நூல் முழுவதும் விரிவாகவே அலசுகிறது.  அதனின் நீட்சியாக குடிநீரில் மலத்தைக் கலந்தது.  இந்த இடத்தில் ஆரம்பித்து நாவ லாசிரியர், தனது உள்ளக்கிடக்கையை இலக்கிய வடிவில் கொட்டித் தீர்த்துள் ளார்.  ‘‘வாழ்க்கையே போராட்டம் என்பதை ஒவ்வொருவரும் தம் வாழ் நாளில் ஒரு சந்தர்ப்பத்திலாவது உணரத்தான் செய்கிறார்கள்.  ஆனால் போராட்டமே  வாழ்க்கையாகிப் போகிற வர்களும் இருக்கத்தான் செய்கிறார் கள். அவர்கள் அத்தகைய நிலையை விரும்பி ஏற்பதில்லை. காலச் சக்கரத்தில் மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஒருபுறமெனில், மறுபுறம்  எதிர்பாரா நிகழ்வுகளில் சிக்கிச் சின்னாபின்னமாவதுண்டு’’. சுடுகாடு கூட இன்று அனுபவிக்க முடியாத சேரி மக்களின் நியாயமான உணர்வு மறுக்கப்பட்டதன் விளைவு, சகோதரர்கள் போல் இருந்த ஊரும், சேரியும் பிரிந்தால், அதுவும் ஆதிக்க மனோநிலை கொண்ட இமாலயன் மற்றும் அவன் சொல்கேட்டு ஆடும் ஊர்த் தலைவன் தானே நாட்டாமை பொறுப்பையும் கைப்பற்றி செய்கின்ற அட்டூழியங்களை வாசிக்கும்போது இரத்தம் சூடேறி, நாடி நரம்புகளை எல்லாம் உசுப்பிவிடுகிறது. 

இதனிடையே, அன்பு, சகோத ரத்துவம், நட்பு, காதல் போன்றவைகள் குறித்து வாசிக்கும்போது, அந்த இளங்காற்று மேற்படி அட்டூழியங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல: மனிதம் இருக்கிறது என்பது இந்த நூல் முழுவதும் விரவிக் கிடக்கிறது. பொங்கல் பண்டிகை ஊர்மக்கள் யாவரும், அவரவர் சக்திக்கேற்பக் கொண்டாடும் மிக முக்கியமான பண்டி கை.  ஆனால், இந்த சேரி மக்களுக்கு மலம் கலந்த குடிநீர் தொட்டியைப் பார்க்கும் போதெல்லாம், அந்த  இழிசெயல் செய்தவனை நினைக்கும் போது ஆத்திரம் மேம்பட்டாலும், அவர்களெல்லாம் என்ன பிறப்பு? என்கிற கேள்வியோடே, பொங்க லாவது?  பண்டிகையாவது? என்கிற சூழல். தங்களது எதிர்வினைகளை தலைமை தாங்கி நடத்த மிலிட்டரி யிலிருந்து பொங்கல் விடுமுறைக்கு வந்த முன்னாள் நாட்டாமையின் மகன்தான் கோபி எனினும், அவனது எண்ணவோட்டங்கள் யாவும் சேரி மக்களின் முன்னேற்றத்திலேயே இருக்கிறது என்பதை இந்நூல் கவித்துவமாக விவரிக்கிறது.  அதிலும் அவன் சிவகாமியின் மீதான காதல் அவ்வளவு ‘ஜென்டில் நெஸ்’ ஆக இருப்பது, அதுவும் இந்தக் கால காதலில் ஒப்பிடும்போது மிக அருமை. இத்தனைக்கும் இடையே, ஊரும், சேரியும் ஒன்றாயிற்றா? தலைவன் மற்றும் இமாலயன் ஆகியோர்களுக்குத் தக்க தண்டனை கிடைத்ததா? ஊருக்கும், சேரிக்கும்-எல்லைப் போரில் வீரமரணமடைந்த பூவரசு-அவனின் மரணம் தந்த செய்தி, போன்ற இடங்களில் கம்யூனிஸ்டுகள் போராடிப் பெற்ற சட்டங்கள், நூறு நாள் வேலை திட்டம், தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற சட்டங்களின் அறிவியல்பூர்வ அணுகுமுறையின் தன்மையினையும் வாசகன் எளிமையான நடையில் புரிந்துகொள்ள ஏதுவாகிறது இதையொட்டி இந்நூல் செல்லும் கடைசி அத்தியாயங்கள் விறுவிறுப் பாக அமைந்துள்ளன. ஒவ்வொரு வரி  வாசிக்கும்போதும் அடுத்து என்ன!  என்கிற எதிர்பார்ப்பைக் கூடுத லாகுக்கிறது.

எனவே, அவசியம் வாங்கி வாசிக்க வேண்டிய நூல்.  இனியாவது கலைந்து  போகட்டும் வன்ம மேகங்கள்; மக்கள் வாழ்க்கையில் வீசட்டும் தென்றல் காற்று. சமத்துவம் நிலைக்கட்டும்! எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கட்டும் என்பதை இந்நூல் வாசிப்பு மிக அழுத்தமாகவும், தெளிவாகவும் பேசுகிறது. இந்நாவல் விதைகள் பதிப்பகம் நடத்திய இலக்கியப் போட்டிக்கான விரு தையும், களரி இலக்கியக் களத்தின் முதல் பரிசையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நாவல்.

நூல் : ‘‘வன்ம மேகம் கலையும்போது’’
ஆசிரியர் : பெரணமல்லூர் சேகரன்.
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை.
விலை : ரூ.270/-