tamilnadu

img

பழங்குடியின மாணவி கொலை செய்யப்பட்டாரா?

மும்பை:
பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவி பாயல் தத்வி, தற்கொலை செய்து கொள்ளவில்லை; அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று உடற்கூராய்வு அறிக்கை அடிப்படையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாயல் தத்வி (23). பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். இவரது கணவர் சல்மான் தத்வி. பாயல் தத்விக்கு, கடந்த 2018-ஆம் ஆண்டு மும்பையின் புகழ்பெற்ற நாயர் மருத்துவமனையில் முதுகலை மருத்துவப் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி நாயர் மருத்துவமனையில் மருத்துவம் பயின்றுவந்த பாயல் தத்வியை, அங்குள்ள சீனியர் டாக்டர்கள், சாதிய ரீதியில் துன்புறுத்தி வந்துள்ளனர். இதனிடையே, கடந்த மே 22-ஆம் தேதி நாயர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதி அறையில் பாயல் தத்வி தூக்கில் பிணமாக தொங்கினார். பாயல் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஒரு பழங்குடியின மாணவியை சாதி ரீதியின் துன்புறுத்தி, அவரைத் தற்கொலைக்கு தூண்டிய மருத்துவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன.இதனால், பாயலைத் துன்புறுத்திய சீனியர் டாக்டர்கள் ஹேமா அகுஜா, பக்தி மகாரே, அங்கீதா ஆகியோரை மும்பை போலீசார் கைது செய்தனர். இந்தியக் குற்றவியல் சட்டம் 306 பிரிவின் கீழ் தற்கொலைக்குத் தூண்டுதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், ராகிங் எதிர்ப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 ஆகிய பிரிவுகளின் கீழ், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பிரிகான் மும்பை மாநகராட்சி நிர்வாகமும், கைதான மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்தது.இதனிடையே திடீர் திருப்பமாக, பாயல் தற்கொலை செய்துகொள்ளவில்லை அவர் கொலை செய்யப்பட்டே இறந்துள்ளார் என பாயல் குடும்பத்தினர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.“பாயல் மன அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அது தற்கொலை இல்லை; கொலை. குற்றவாளிகள் மூவரும் பாயலின் உடலை வேறு எங்கோ எடுத்துச் சென்றுள்ளனர்.

நீண்ட நேரத்துக்கு பிறகே மீண்டும் கல்லூரிக்குக் கொண்டு வந்துள்ளனர். பாயலின் உடல் சேதப்படுத்தப்பட்டு இருப்பதற்கான தடயம் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கைக் கொலை வழக்காகவே விசாரிக்க வேண்டும்” என பாயல் குடும்பத்தின் ஆலோசகர் நிதின் கோரிக்கை விடுத்துள்ளார்.நீதிமன்றத்தில் வாதாடிய பாயல் தரப்பு வழக்கறிஞரான ஜெய்சிங் தேசாயும்,

“குற்றவாளிகளைக் குறைந்தது 14 நாள்கள் காவலில் வைக்க வேண்டும். ஏனெனில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகள் உண்மையைக் கூற பயப்படுகின்றனர். குற்றவாளிகள் மூத்த மருத்துவர்கள் என்பதால், சாட்சிகள் வாய் திறக்க மறுக்கிறார்கள். இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தவில்லை என்றால் சமூக ரீதியிலான பிரச்சனைகள் ஏற்படும். குற்றவாளிகளின் வாட்ஸ்-அப் சாட்டையும் போலீசார் சோதனை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், “பாயல் தற்கொலை செய்துகொண்டபோது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது; அப்படியிருக்கையில் அவர் எவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்க முடியும்?” என்று குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

;