tamilnadu

img

பேட்மிண்டனின் ‘பீனிக்ஸ் பறவை’ - சி.ஸ்ரீராமுலு

“பேட்மிண்டன் உலகப் போட்டியில் முதன் முதலாக தங்கம் வென்ற இந்தியர் என்ற புதிய வரலாறு படைத்த பி.வி. சிந்துவால் 7000 கிலோ மீட்டருக்கு அப்பால் கடல் கடந்து நமது “தேசிய கீதம் ஒலிக்க, மூவர்ண தேசிய கொடி பட்டொளி வீசி பறந்த அந்த தருணம் அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் புல்லரித்தது”. பேட்மிண்டன் விளையாட்டில் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, ஜப்பான், கொரியா வீரர்களுக்கு வலுவாக ஈடு கொடுத்து வரும் இந்திய வீரர்களில் நட்சத்திர அந்தஸ்துடன் ஜொலிக்கும் சிந்துவுக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான ‘பத்மபூசன்’ விருதுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளது. இம்முறை அந்த விருது கிடைப்பது உறுதியாகலாம்.

அடையாளம்

2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்  சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் பேட்மிண்டன் புகழ் நாடுமுழுவதும் பரவியது. சாய்னா நேவாலை விட நான்கு வயது இளையவரான புசர்லா வெங்கட சிந்து, இதுவரைக்கும் 312 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டில் உலக தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தை பிடித்தும் உச்சத்தை தொட்டார்.  ‘தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி’ என்பதை நிரூபித்து வரும் சிந்துவின் தந்தையும் தாயும் வாலிபால் வீரர்கள். சகோதரி திவ்யா விளையாட்டுத்துறையில் கால்பதித்தாலும் மருத்துவத்துறையில் கோலோச்சி வருகிறார்.

பதக்க வேட்டை

2011 ஆம் ஆண்டில் காமன்வெல்த் இளையோர் விளையாட்டுப் போட்டியில் முதன் முதலாக ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சிந்து, அடுத்த ஆண்டே ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கத்தை வென்றார். கடந்த ஆண்டு காமன்வெல்த் ஒற்றையர் பிரிவில்  தங்கத்தை தவற விட்டாலும் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தை தட்டினார்.  ஒலிம்பிக்கில் பங்கேற்ற இளம் வீராங்கனை சிந்து, தனது அபாரமான ஆட்டத்தால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். தங்கப் பதக்கம் வென்று புதிய அத்தியாயம் படைப்பார் என்று நாடே எதிர்பார்த்தது. ஆனால் வெள்ளிப் பதக்கம் வென்றாலும், கடுமையாகப் போராடியதை நாடே பாராட்டியது. அதன்பிறகு நடந்த ஆசிய, காமன்வெல்த், தெற்காசிய, இந்தோனேசிய, தாய்லாந்து, இந்திய ஒபன், உலகச் சாம்பியன்ஷிப் போட்டி என முக்கிய தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் கடைசிக் கட்ட பதற்றத்தால் வரிசையாக தோல்வியடைந்து பெரும் விமர்சனத்துக்குள்ளானார். இதிலிருந்து மீண்டெழுந்திட மேற்கொண்ட தீவிர பயிற்சியும், கொரிய பயிற்சியாளர் கிம்மின் ஆலோசனையும் பெரிதும் கை கொடுத்தது.

தனது வழக்கமான ஆட்ட முறைகளில் மாற்றம் செய்து புதிய திட்டத்துடன் உலகப் போட்டியில் களமிறங்கி உலகின் முன்னணி வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்று தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். சிந்துவின் வெற்றியை பாராட்டி பலரும் வாழ்த்து தெரிவித்தனர். நாடு திரும்பிய சிந்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது விசாகப்பட்டினத்தில் பேட்மிண்டன் பயிற்சி மையம் அமைக்க 5 ஏக்கர் நிலம் வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தங்கத்தை வெல்ல ஐந்து வருடம் போராடினார். கடும் போராட்டம், கடின உழைப்புக்கு இந்த முறை பலன் கிடைத்தது. இந்த வெற்றியை தனக்காக தியாகம் செய்த பெற்றோருக்கு அர்ப்பணித்தார்.

தேடிவந்த கவுரவம்

விளையாட்டுக் குடும்பத்தில் பிறந்ததால், சிறு வயதிலேயே விளையாட்டுத் துறைக்குள் அறிமுகமாகி செகந்திராபாத்தில் மெகபூப் அலியிடம் பேட்மிண்டன் விளையாட்டின் வேகம், துடிப்பு, நுணுக்கம் போன்ற அடிப்படை அம்சங்களை கற்றுக் கொண்டு தனது10 வது வயதில் தேசிய அளவில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று முத்திரை பதித்தார்.  தேசிய அணியில் இடம் பிடித்ததில் இருந்து தற்போதைய தலைமை பயிற்சியாளர் கோபிசந்த் அகாதமியில் பயிற்சி பெற்று வருகிறார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவுக்கு  சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர மாநில அரசு துணை ஆட்சியர் பதவி வழங்கியது. கடந்த ஆண்டு காமன் வெல்த் போட்டியின் துவக்க நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் கவுரவமும் கிடைத்தது. அர்ஜூனா, பத்மஸ்ரீ, ராஜூவ் கேல்ரத்னா ஆகிய உயரிய விருதுகளும் கிடைத்தது.

24 வயதான பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்ததால் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பெண் வீராங்கனை என்ற மகுடத்தை மீண்டும் பெற்றுள்ளார். ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் கிடைக்கிறது. உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனைகளின்(போர்ப்ஸ்) பட்டியலிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.
 

நம்பிக்கைச் சுடர்

உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. ஆட்டத்திறனும் மெருகேறி இருக்கிறது. தேவையற்ற நெருக்கடிகளிலிருந்து மீண்டு நல்ல முன்னேற்றம் கண்டிருக்கும் அவரது அடுத்த இலக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே. அந்த லட்சியத்தை நிறைவேற்றி நாட்டுக்கு மேலும் பெருமை சேர்க்க அனைவரும் வாழ்த்துவோம்!
 

;