tamilnadu

img

திட்டக் கமிஷனைக் கலைத்துவிட்டு நிட்டி ஆயோக் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன?

புதுதில்லி, ஜூலை 7-

மத்திய பாஜக அரசு, திட்டக் கமிஷனுக்குப் பதிலாக, நிட்டி ஆயோக் அமைத்ததற்கான நோக்கம் என்ன என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், மத்திய பாஜக அரசு, திட்டக் கமிஷனுக்குப் பதிலாக, நிட்டி ஆயோக் நிறுவியதன் நோக்கம் என்ன என்றும், இது எந்தவிதத்தில் திட்டக் கமிஷனிடமிருந்து வேறுபட்டது என்றும், இவ்வாறு நிட்டி ஆயோக் நிறுவியதன் மூலமாக அது இதுவரை சாதித்தது என்ன என்றும் கேள்விகள் எழுப்பியிருந்தார்.

இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய திட்ட இணை அமைச்சர் (சுயேச்சையான பொறுப்பு)  ராவ் இந்தர்ஜித் சிங் அளித்த பதில் பின்வருமாறு:

அரசாங்கம், திட்டக் கமிஷனுக்குப் பதிலாக இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் (NITI Aayog – National Institution for Transforming India) என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தை ஏற்படுத்தியது.

நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து ஒரு கூட்டுறவு கூட்டாட்சித்தத்துவத்தின் (cooperative federaism) அடிப்படையில் நாடு தழுவிய அளவில் நிகழ்ச்சிநிரலைத் தயாரித்து செயல்படத்துவதற்காக இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது. அதாவது மாநிலங்கள் வலுவாக இருந்தால்தான் நாடு வலுவாக இருக்கும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு இது அமைக்கப்பட்டது. இதற்காக நிகழ்ச்சிநிரலில், நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமைகள் அளிக்க வேண்டிய பகுதிகள், கிராம அளவிலும் நம்பகமான திட்டங்களை வடிவமைப்பதற்கன கருவிகளை உருவாக்குதல், பொருளாதார உத்தி மற்றும் கொள்கை உட்பட நாட்டின் பாதுகாப்பு நலன்களின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பகுதிகள், பொருளாதார முன்னேற்றத்தில் இதுவரை போதுமான அளவில் பயன்பெறாத பகுதிகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்துதல், நாடு தழுவிய அளவிலும் சர்வதேச அளவிலும் உள்ள வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று பயன்படுத்திக் கொள்ளுதல். தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்துதல் உட்பட பல்வேறு 13 அம்சங்களை நிட்டி ஆயோக் வரையறுத்திருந்தது.

மேலும் 2016-17ஆம் ஆண்டு 12ஆவது ஐந்தாண்டுத் திட்டம் முடிவுக்கு வருவதற்கான இறுதி நிதியாண்டாகும். இத்துடன் நாட்டின் இதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்த ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு நிரந்தர முடிவு கட்டுவதற்காகவும் நிட்டி ஆயோக் கொண்டுவரப்பட்டது.

அதற்குப் பதிலாக அரசாங்கம், 2017-18 முதல் 2023-24 வரையிலான ஏழாண்டு காலத்திற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயார் செய்தது. இந்த நிகழ்ச்சிநிரல் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக மூன்று ஆண்டுகள் கழித்து, (அதாவது 2020 மார்ச் மாதத்தின் நிதியாண்டின் முடிவில்) ஒரு மறு ஆய்வினை மேற்கொள்ளவும் அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.

இவ்வாறு பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்திருந்தார்.

(ந.நி.)

;