புதுதில்லி, ஏப்.27- ஊரடங்கு விரைவில் நீக்கப்படாவிட்டால், லட்சக்கணக்கான மக்கள் வறுமையின் விளிம்பிற்கு தள்ளப்படும் நிலை ஏற்படும் என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் துவ்வூரி சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஊர டங்கைப் பின்பற்றி வருகின்றன. இந்தியாவில் ஏப்.14 வரை இருந்த ஊரடங்கு, மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலை யில், மந்தன் அறக்கட்டளை சார்பில் நடந்த “கொரோனாவுக்கு பிந்தைய உலகத்திற்கான பாடங்கள்” என்ற தலைப்பில் இணையவழி யில் நடந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ், முன்னாள் துணை கவர்னர் உஷா தோரத் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது சுப்பாராவ் பேசியதாவது: கொரோனா நெருக்கடி முடிந்ததும் இந்தியாவில் சில பொருளாதார மாற்றங்கள் வேகமாக இருக்கும்.
பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சியானது எதிர்மறையாகச் செல்லும் அல்லது வளர்ச்சி சுருங்கிவிடும் எனக் கருதுகிறார்கள். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே நம்முடைய வளர்ச்சி குறைந்துவிட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இப்போது அது முற்றிலுமாக நின்றுவிட்டது. கடந்தாண்டு வளர்ச்சி ஐந்து சதவீதமாக இருந்தது. இந்தாண்டு நாம் எதிர்மறை அல்லது பூஜ்ஜிய வளர்ச்சிக்கு செல்லப்போகிறோம். இது ஐந்து சதவீத வளர்ச்சியின் சரிவு.
மற்ற நாடுகளை விட இந்த நெருக்கடியில் இந்தியா சிறப்பாக செயல்படப் போகிறது என்பது உண்மைதான். ஆனால் இந்தியா ஏழ்மையான நாடு என்பதால், அது ஆறுதல் அளிக்காது. நெருக்கடி தொடர்ந்தால், ஊர டங்கு விரைவில் நீக்கப்படாவிட்டால், தேசத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவார்கள். எந்த மூலதனமும் அழிக்கப்படவில்லை. தொழிற்சாலைகள் நிற்கின்றன. நமது கடை கள் இன்னும் நிற்கின்றன. ஊரடங்கு நீக்கப்பட்ட வுடன் மக்கள் வேலை செய்யத் தயாராக உள்ள னர். எனவே மீட்பு “வி” வடிவமாக இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.