tamilnadu

img

ஒரு வாரமாகவே தாக்குதலுக்கு முயன்ற இந்துத்துவா பயங்கரவாதி!

புதுதில்லி:
தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடுநடத்தியவர், ராம்பக்த் கோபால் (Rambhakt Gopal) என் பெயரில் முகநூலில் இயங்கி வந்ததும், ஒரு வாரத்திற்கும் மேலாகவே அவர் போராட்டக்காரர்களை தாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டியதும் அம்பலமாகியுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியிலுள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மகாத்மா காந்தியின் 72-ஆவது நினைவு நாளையொட்டி அவர்கள், ராஜ்காட்டை நோக்கி பேரணி ஒன்றை நடத்தினர்.‘ஹோலி பேமிலி மருத்துவமனை’ அருகே அதனை போலீசார் தடுத்து நிறுத்தியதால், மாணவர்களுக்கும் போலீசா ருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அப்போது, திடீரென அந்தப் பகுதிக்கு கூச்சலிட்டுக் கொண்டே வந்த இளைஞர், போராடும் மாணவர்களைப் பார்த்து, “உங்களுக்கு சுதந்திரம் தானே வேண்டும்... எடுத்துக் கொள்ளுங்கள்.. என்று கூறிக்கொண்டே துப்பாக்கியை காட்டி மிரட்டினார். அவரை சமாதானப்படுத்த மாணவர்கள் முயற்சி மேற்கொண்டனர். எனினும், அந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டார். இதில் சதப் பரூக் என்ற மாணவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. 

இந்த சம்பவங்கள் அனைத்தையும் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்த போலீசார், ராம்பக்த் கோபால் அவராகவே வந்து சரணடையும் வரை கர்மசிரத்தையுடன் காத்திருந்தனர். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 19  வயது இளைஞர் என்று போலீசார் கூறும் நிலையில், அந்த இளைஞர், ‘ராம்பக்த் கோபால்’ (Rambhakt Gopal) என்ற பெயரில் தீவிர இந்துத்துவா பேர்வழியாக முகநூலில் இயங்கி வந்ததும், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடுவோருக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்ததும், தாக்குதல் நடத்தப் போவதாக ஒருவாரமாக பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருந்ததும் அம்பலமாகியுள்ளது. முகநூலில் இடம்பெற்றுள்ள பல புகைப்படங்களில் அவர் துப்பாக்கியுடன்தான் தோன்றியுள்ளார்.குறிப்பாக ‘சிஏஏ’ எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று அங்கு நடப்பதை தனது செல்போன் மூலம் வீடியோவாகப் பதிவிட்டு, “Azadi de rha hu” (நான் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறேன்) என்று கூறியுள்ளார்.

மேலும், சக இந்துத்துவவாதிகளிடம் “என் வீட்டை பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு நான் மட்டும்தான் இந்து; எனது கடைசிப் பயணம் இது. ஜெய் ஸ்ரீராம்” எனவும் கூறியுள்ளார்.துப்பாக்கியால் சுடுவதற்கு சற்று முன்னதாககூட, “ஷாகீன் பாக்... ஆட்டம் முடிந்தது” என பதிவிட்டுள்ளார்.மாணவர்களை துப்பாக்கியால் சுடும்போது, தனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என்பதையும் கணக்கிட்டு, ஒருவேளை தான் இறந்தால், “இறுதிச்சடங்கின்போது, எனது உடலை காவி நிற துணியால் போர்த்துங்கள்; ராமரை பாடுங்கள்” என்றும்  குறிப்பிட்டுள்ளார்.இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவற்றை முகநூல் நிர்வாகம் தற்போது நீக்கியுள்ளது.

;