tamilnadu

img

பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை நோக்கி... - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

...நேற்றைய தொடர்ச்சி

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் அடிப்படையிலேயே வேறுபட்ட பாதைகளில் பயணித்த முரண்பாடு என்பதுதான் பிரச்சனையாக இருந்தது. கம்யூனிஸ்ட்டுகள் தங்களது வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட அனைத்து பலவீனங்களையும் உணர்ந்து, பல்வேறு தருணங்களில் திருத்திக் கொண்டு, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் நின்றார்கள். சர்வதேசிய மற்றும் தேசிய பிரச்சனைகளை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தோடு அணுகினார்கள். ஆனால் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியானது முதலாளித்துவ கொள்கைகளில் உறுதியாக நின்றது. காங்கிரசுக்குள் இருந்த கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து, அதை ஒரு உறுதிமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பாக வளர்ப்பதற்கு முயற்சித்தனர். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இணைந்து, பின்னர் அதிலேயே தங்கிவிட்டவர்கள் தங்களை சோசலிஸ்ட்  என்று அழைத்துக் கொண்டாலும் அடிப்படையில் காங்கிரஸ்காரர்களாகவே இருந்தார்கள். ஆனால் காங்கிரசில் செயல்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் கம்யூனிஸ்ட்டுகளாகவே இருந்தார்கள். காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் எப்படியாயினும் காங்கிரஸ் ஸ்தாபனத்திற்கே விசுவாசமாக இருந்தார்கள். ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் அடிப்படையில் தங்களது வர்க்கத்திற்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருந்தார்கள். 

1942 ஆகஸ்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் அதைத்தொடர்ந்த ஆண்டுகளில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியானது சந்தேகமே இல்லாமல் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு கட்சியாகத்தான் இருந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகொண்ட வெகுமக்களை அப்போராட்டத்தில் திரட்டியது. ஆனால் அக்கட்சி, காங்கிரசின் முடிவுகளைத்தான் அமலாக்கியது. காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை மூலமாக ஒரு தீர்வை எட்டும் நோக்கத்துடன் வெகுமக்கள் போராட்டப் பாதையை கைவிட்ட போது, அதைத் தடுத்த நிறுத்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்தியாவில் வெகுமக்களிடையே சற்று தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தபோதிலும், மீண்டும் மிகவும் சக்திவாய்ந்த முறையில் பிரம்மாண்டமான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் போராட்டங்களை நடத்தியது. தெலுங்கானா, புன்னப்புரா-வயலார், தேபாகா என பல போராட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்தக் காலக்கட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களும் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் எழுச்சிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களும், சிறைபிடிக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாகவும் கம்யூனிஸ்டுகள் எண்ணற்ற போராட்டங்களை நடத்தினார்கள். இத்தகைய போர்க்குணமிக்க வெகுஜன போராட்டங்களின் வாயிலாகத்தான் இந்திய நாட்டின் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மைய நீரோட்டத்திற்கு மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வந்தது.

எனினும், இத்தகைய தீவிரமான போராட்டமானது, 1948 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு இடது திரிபுவாத நிலைப்பாடுகளை நோக்கி சென்றது; ஆனால் அந்தத் தருணத்திலும் கூட வெகுஜன மக்களின் எழுச்சிகர உணர்வலைகளுக்கு முரணாக கட்சி செல்லவில்லை; கட்சி தனது நிலைப்பாட்டை சரி செய்து கொண்டது என்ற போதிலும், நாட்டின் விடுதலையைத் தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்த புதிய காங்கிரஸ் அரசின் மீது மக்களின் விமர்சனங்கள் படியத் துவங்கின. இந்த நிலையில் வெகுமக்களின் உணர்வுகளுக்கு முரணாக கட்சி செல்லவில்லை. மக்களின் உணர்வுகளோடு கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றி நின்றது. அதனால்தான் 1952 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளைவிட கம்யூனிஸ்ட்டுகள் ஒரு சிறந்த வெற்றியினை ஈட்ட முடிந்தது.

தத்துவார்த்த போராட்டம் 

விடுதலைக்குப் பிறகு முதல் பொதுத் தேர்தலிலும் சரி, அதற்கு பிந்தைய ஆண்டுகளில் எண்ணற்ற போராட்டங்களிலும் சரி, அதன்பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான பிறகு மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பல்வேறு சோசலிச குழுக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான படிப்பினை என்னவென்றால் இந்த சக்திகளெல்லாம் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்பதுதான்; எதேச்சதிகாரத்தை நோக்கி ஆளுங்கட்சி செல்லும் போது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாட்டின் இதர ஜனநாயக சக்திகள் நடத்தும் போராட்டங்களை, கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரி சக்திகளும் முதலாளித்துவத்திற்கு எதிராக சுயேட்சையான முறையில் உழைக்கும் மக்களை அணிதிரட்டும் தங்களது போராட்டத்திற்கான  அடிப்படைப் போராட்டமாக கைக்கொள்ள வேண்டும் என்பதுதான். 

இடதுசாரி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உருவாக்கும் இந்த முயற்சியில், கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிச இயக்கங்களுக்கு இடையிலான தத்துவார்த்த வேறுபாடு என்பது ஒரு போதும் தடையாக இருக்கவில்லை. சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் எழுந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அது எல்லாவிதமான வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்துவிட்டநிலையில், எப்படிப்பட்ட சூழலிலும் தனது நிலைப்பாடுகளில் உறுதியாக நிற்கிறது; கம்யூனிஸ்ட் இயக்கம் தனது தவறுகளை, சறுக்கல்களை சந்தேகமேயின்றி சரிசெய்து, உறுதியான முறையில் அவற்றை வென்றெடுத்துள்ளது; இது எப்படி சாத்தியமானது என்றால் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேசிய மற்றும் தேசிய பிரச்சனைகளை பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தோடு அணுகும் என்ற அதன் அடிப்படை குணாம்சத்தை அனைத்துத் தருணங்களிலும் உயர்த்திப்பிடித்ததால்தான்.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுவீகரித்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் ஒரு புரட்சிகர வெகுஜன கட்சியை கட்டிவளர்ப்பதில், பாட்டாளி வர்க்க குணாம்சத்திற்கு எதிரான போக்குகளை எதிர்த்து விழிப்போடு இருக்க வேண்டும் என்ற உணர்வினை அது பெற்றிருக்கிறது. அந்த அடிப்படையில்தான் வலதுசாரி மற்றும் இடது திரிபுவாத போக்குகளுக்கு எதிராக தொடர்ச்சியான தத்துவார்த்த போராட்டங்களை கட்சி நடத்தியது. விமர்சனம், சுயவிமர்சனம் என்ற அடிப்படை அணுகுமுறையை இதற்கு கட்சி பயன்படுத்தியது. இந்த அணுகுமுறை இல்லாமல் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வெகுஜன கட்சியாக, தன்னை வளர்த்துக் கொள்ள முடியாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறியும். அத்தகைய பாதையில் கட்சி என்றென்றும் பீடுநடை போடும்.

மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) தத்துவ ஏடு, ஜனவரி 1984
தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்

...முற்றும்...