tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

போலீசார் கருத்து தெரிவிக்க குஜராத் பாஜக அரசு தடை!

“குஜராத் மாநில போலீசாருக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும்’’ என அங்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பிரச்சாரம் நடந்து வருகிறது. இந் நிலையில், “காவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், சமூகவலைத்தளங்களில் இனிமேல் அரசியல் ரீதியாக எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது’’ என்று குஜராத் பாஜக அரசு தடைவிதித் துள்ளது.

டாங்கியை அழிக்கும் ஏவுகணை சோதனை

‘துருவஸ்ட்ரா’ என்ற ஹெலிகாப்டரில் இருந்து சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை ஒடிசாவின் பாலசோரில், கடந்த ஜூலை 16, 17 தேதிகளில் நடத்தப்பட்டு ள்ளது. ஆனால், ஹெலிகாப்டரில் சுமந்து சென்று சோதனை நடத்தாமல் தரையில் இருந்தே சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

இமாச்சலில் பஸ் கட்டணம் 25 சதவிகிதம் உயர்வு!

கொரோனா நெருக்க டிக்கு இடையே, பேருந்து கட்டணத்தை 25 சதவிகிதம் உயர்த்த, ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான இமாச்சலப் பிரதேச பாஜக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 3 கி.மீ. தூரத்திற்கான குறைந்தபட்ச பேருந்துக் கட்டணத்தை ரூ. 5-இல் இருந்து 7 ரூபாயாகவும் இமாச்சல் அரசு உயர்த்தியுள்ளது.

“அடுத்தாண்டு முதல்வராக  மம்தா பதவியேற்கமாட்டார்”

“மேற்குவங்க முதல் வர் மம்தா பானர்ஜியின் பேச்சில் 95 சதவிகிதம் பாஜக-வை பற்றியே இருக்கிறது; அவர் பாஜக-வை கண்டு அச்சமடைந்து உள்ளார் என்பதையே இது காட்டுகிறது; எனது வார்த்தைகளை கவனமாக கேளுங்கள்: அடுத்த ஆண்டு (2021) மம்தா பானர்ஜி பதவி ஏற்கமாட்டார்” என்று மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.

மேற்குவங்கம் ஒருபோதும் குஜராத்திகளால் ஆளப்படாது

“வெளியாட்கள் வங்காளத்தை ஆள அனுமதிக்கப்படமாட்டார்கள். அதைத் தடுப்பது எவ்வாறு என்பது எங்களுக்குத் தெரியும். வங்காளம் ஒரு வங்காளியாலேயே ஆளப்படும்; மாறாக வெளி மாநிலத்தவர்கள் அல்லது குஜராத்தைச் சேர்ந்தவர்களால் அல்ல!” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

நீதிபதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 50 ஆயிரம்..!

கண் கண்ணாடிகள் வாங்குவதற்கு மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இந்த நிதித்தொகுப்பு, நீதிபதிகளின் வாழ்க்கைத் துணை மற்றும் சார்புடையவர்களையும் உள்ளடக்கியது என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அமர்நாத் பனிலிங்க யாத்திரை ரத்து!

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயில் பனிலிங்க தரிசனத்திற்கான யாத்திரை, ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று அபாயம் காரணமாக, யாத்திரை ரத்து செய்யப்படுவதாக ஜம்மு - காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

“கொரோனா.. கடவுள் கொடுத்த தண்டனை..”

‘‘கொரோனா ஒரு நோய்  அல்ல; நம்முடைய பாவத்திற்காக கடவுள் கொடுத்த தண்டனை; கொரோனாவை போக்குவதற்கான சிறந்த வழி, நாம் அனைவரும் கடவுளை நோக்கி  பிரார்த்தனை செய்வதுதான்’’ என்று  சமாஜ்வாதி கட்சி
யின் சம்பல் தொகுதி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பர்க் பேசியுள்ளார்.

பீகார் பாஜக எம்எல்சி கொரோனாவால் மரணம்!

பீகார் மாநில சட்டன்ற மேலவை உறுப்பினராக இருப்பவர் சுனில்குமார் சிங். பாஜக-வைச் சேர்ந்த இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி இறந்து போயுள்ளார்.