tamilnadu

img

100 ரூபாயைத் தொடும் வெங்காயத்தின் விலை!

புதுதில்லி:
இந்தியாவில் வெங்காயத்தின் விலை, திடீர் உச்சத்தை அடைந்துள்ளது.கடந்த வாரம் சராசரியாக 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயமானது, தற்போது 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விரைவிலேயே இது 100 ரூபாயைத் தொட்டாலும் ஆச்சரியமில்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் பெய்த மழை, வெங்காய சாகுபடியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.இதுவே வெங்காயத்துக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, தற்போது விலை உயர்வுக்கு இட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் மட்டுமே சந்தைகளுக்கு வருவதால், தில்லி, மும்பை,கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வெங்காயத்தின் மொத்த விலையும் சில்லரை விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.ஆசியாவின் மிகப்பெரிய வெங்காயச் சந்தையான மகாராஷ்டிர மாநிலத்தின் லசல்கோன் சந்தையில், கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 45 ரூபாயாக உயர்ந்தது. அதேபோல, கடந்த வாரத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லரை விலை, சென்னையில் 38 ரூபாயாகவும் கொல்கத்தாவில் 48 ரூபாயாகவும், மும்பையில் 56 ரூபாயாகவும், தில்லியில் 57 ரூபாயாகவும் இருந்தது.இன்றைக்கு அது சராசரியாக 70 முதல் 80 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் 70 முதல்80 ரூபாய் வரை விற்பனையாகிறது.

இந்த விலை உயர்வு கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பிந்தைய புதிய உச்சமாகக் கருதப்படுகிறது. இதேநிலை நீடித்தால், இன்னும்சில நாட்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நூறு ரூபாயை எட்டினாலும் ஆச்சரியமில்லை என்று கூறப்படுகிறது.வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த வாரமே, தனது இருப்பில் உள்ள 56 ஆயிரம் டன் வெங்காயத்தை மாநிலங்கள் தங்களது தேவைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அத்துடன், வெங்காயத்துக் கான குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 850 டாலராக நிர்ணயித்ததோடு, 2 ஆயிரம் டன் வரையிலான வெங்காயம் இறக்குமதிக் கான வரியையும் ரத்து செய்தது. எனினும் வெங்காய விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் வரவுள்ள நிலையில், இந்த உயர்வுமேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

;