tamilnadu

img

குழந்தை கவனிப்பு விடுப்பு குறித்து பிஆர்.நடராஜன் எழுப்பிய கேள்வியும் அமைச்சர் பதிலும்

பெண் ஊழியர்களுக்கு, குழந்தை கவனிப்பு விடுப்பு அளிப்பதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது உண்மைதானா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு, மத்திய  அமைச்சர் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், பெண் ஊழியர்களுக்கு அளித்து வந்த குழந்தை கவனிப்பு விடுப்பு (CCL-Child Care Leave) அளித்து வந்ததில் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறதா, ஆம் எனில், அவை என்ன என்றும், அதற்கான காரணங்கள் என்னவென்றும் கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்த மத்திய பணியாளர்தொகுதி, பொதுக் குறைகள்தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டுள்ள கேள்விகளுக்கு ஆம் என்று பதிலளித்திருப்பதுடன், அதற்கான காரணங்களைக் கீழ்வருமாறு பதிவு செய்துள்ளார்.

ஒற்றைத்தாய்மார்களாக (single mothers) இருக்கின்ற பெண் ஊழியர்களின் தோள்களில் கூடுதல் பொறுப்புகள் ஏற்றப்பட்டிருப்பதை அங்கீகரிக்கும் விதத்திலும், ஏழாவது மத்தியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும், குழந்தை கவனிப்பு விடுப்பு தொடர்பாக இருந்த நிபந்தனைகளை அரசாங்கம் தளர்த்தி இருக்கிறது. அதாவது, 2018 டிசம்பர் 12 தேதியிட்ட அறிவிக்கையின்படி ஓராண்டுக்குள் (a calendar year) மூன்று தடவைகள் வரை இவ்விடுப்பினை எடுத்துக்கொள்ளலாம் என்றிருந்ததை, ஆறு தடவைகளாக எடுத்துக்கொள்ளலாம் என மாற்றியிருக்கிறது.

மேலும், ஏழாவது மத்திய ஊதியக்குழு குழந்தை கவனிப்பு விடுப்பினை ஒரு நலம் பயக்கும் நடவடிக்கையாக பார்த்ததால், உண்மையில் இவ்விடுப்பு தேவைப்படும் தாய்மார்களுக்கு இது சென்றடையவேண்டும் என்று கருதி, சில பரிந்துரைகளை அளித்தது. அவற்றை ஏற்றுக் கொண்டு, அரசாங்கம் அவற்றை முழுமையாக அமல்படுத்தியது. அதன்படி, பெண் ஊழியர்களுக்கு குழந்தை கவனிப்பு விடுப்பின் முதல் 365 நாட்களுக்கு ஊதியம் முழுமையாக (100 சதவீதம்) அளிக்கப்பட வேண்டும் என்றும், பின்னர் அடுத்த 365 நாட்களுக்கான குழந்தை கவனிப்பு விடுப்புக்கு அவர்களின் ஊதியத்தில் 80 சதவீதம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்திருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

(ந.நி.)

 

;