tamilnadu

img

ஆழம் பார்த்த அமீர் ஹைதர் கான் - பி.ராமமூர்த்தி

1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த சட்டமறுப்பு இயக்கம், குறிப்பாக உப்புச் சத்யாகிரகமும், அந்நியத் துணிகள் பகிஷ்காரமும் இந்தியா முழுவதும் நடைபெற்று வந்தது. ஏப்ரல் மாதம் என்னுடைய இறுதியாண்டு கல்லூரி தேர்வை (பி.எஸ்.ஸி) எழுதி முடித்த அடுத்த நாளே நான் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டேன். காசி நகரில் கோதேலியா என்ற வர்த்தக ஸ்தலத்தில் அங்கு கூடியிருந்த மக்களிடையே அந்நியத் துணியை எரித்தேன். உடனே கைது செய்யப்பட்டு 6 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பெற்று பரூக்காபாத்திலிருந்த பதேகர் சிறைக்கு அனுப்பப்பட்டேன். தண்டனைக் காலம் முடிந்து சென்னைக்குத் திரும்பினேன். 

சென்னையில் அப்பொழுது டி.பிரகாசத்தின் தலைமையில் உப்புச்சத்யாகிரக இயக்கம் நடந்துவந்தது. பிரகாசம் கைதான பின் துர்க்காபாய் (தேஷ்முக்) தலைமையிலும், அவர் கைதான பின் இன்னும் பல காங்கிரஸ் தலைவர்கள் தலைமையிலும் சத்யாக்கிரஹம் நடந்து போராட்டம் ஒரு தேக்க நிலையில் இருந்தது. எனவே இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க, சிறையிலிருந்து திரும்பிய சில காங்கிரஸ் ஊழியர்களுடனும் குறிப்பாக ஸ்ரீபாத சங்கர், கணபதி முதலியோருடன் சேர்ந்த பாடுபட்டேன், இயக்கத்தை மீண்டும் துவக்கினோம். அப்போது நாங்கள் வெளிமாவட்டங்களிலிருந்து இயக்கத்தில் சேரும்படி பல வாலிபர்களை ஊக்குவித்து அவர்களைச் சென்னைக்குக் கொண்டு வந்து அந்நியத் துணிக்கடை மறியல் இயக்கத்தை ஆரம்பித்து நடத்தினோம். அப்பொழுது இயக்கத்தை நடத்துவதற்கு தேவைப்பட்ட பணத்திற்கு, சென்னையிலிருந்த ராம்னாத் கோயங்கா, மதுரை டி.வி.சுந்தரமய்யங்கார், ஹாஜா ஷெரீப்பின் மாமாவும், கப்பல் கம்பெனி ஏஜெண்டுமான ஷேக் முகமது ராவுத்தர் முதலானவர்களுடைய தொடர்பினால் இயக்கத்திற்கு ரகசிய பண உதவி கிடைத்தது.  1931ஆம் ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தையொட்டி சிறையிலிருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.  “சுதந்திரச் சங்கு ” பத்திரிகையைப் பற்றி சில விபரங்களை இங்கே கூற விரும்புகின்றேன். நீண்ட நாள் காங்கிரஸ்காரரான சங்குகணேசன் இப்பத்திரிகையை நடத்தி வந்தார். அவர் காந்திஜியின் நூல்களை வெளியிடும் உரிமையை வாங்கி, பல ஆண்டுகள் வெளியிட்டு வந்தார். 1930ஆம் ஆண்டின் சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பமானவுடனேயே “ சுதந்திரச் சங்கு” பத்திரிகையை காலணா விலையில் (இன்றைய கணக்கில் 2 நயா பைசா) டெம்மி சைசில் நாலு பக்கத்தில் வெளியிட்டு வந்தார். செய்திகள் இருக்காது. விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து விறுவிறுப்பான கட்டுரைகள் இப்பத்திரிகையில் வெளியாகும்.

நான் நடத்தி வந்த இந்தி வகுப்புகளில் பயின்று வந்த மாணவர்களை, தட்சிணபாரத் ஹிந்தி பிரச்சார சபை, அவர்கள் நடத்தி வந்த இரண்டாம் நிலை தேர்வுக்கு (மத்யமா) நேரடியாக அனுப்பிவிடுவார்கள். இந்த மாணவர்களின் இந்திமொழி அறிவின் தரம் அதிகமாயிருந்ததால் முதல் கட்ட தேர்வான ‘பிராத்மிக்’ குக்கு அனுப்புவதில்லை. இத்தேர்வுகளில் மிகப் பெரும்பான்மையான மாணவர்கள் பெருவாரியான மதிப்பெண்களுடன் வெற்றியடைந்தார்கள். அதனால் 1931ஆம் ஆண்டு ‘ தமிழ்நாட்டில் ’ சிறந்த ஹிந்தி பிரச்சாரகர் என்ற நற்சாட்சிப் பத்திரத்தை காந்திஜி எனக்கு தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபை மூலம் அனுப்பி வைத்திருந்தார். அப்பொழுது தட்சிண பாரத் சபா நிர்வாகஸ்தர்களாக இருந்த ஹரிகர சர்மா, மோட்டூரி சத்ய நாராயண முதலியோருடனும் மற்றும் பல இந்திப் பிரச்சாரகர்களுடனும் நெருங்கியதொடர்பேற்பட்டது.

மறியலுக்கு உதவிய சக ஊழியர்கள்

1932ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாடு தோல்வியில் முடிந்தது. காந்திஜி, நேரு, கான்அப்துல கபார்கான் முதலிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து இரண்டாவது சத்யாகிரஹப் போராட்டம் ஆரம்பித்தது. சென்னையில் சத்யாகிரஹப் போராட்டத்தை நடத்தும் பொறுப்பை, மாவட்டக்காங்கிரஸ் கமிட்டி ஜகன்னாத்தாஸிடமும், என்னிடமும் ஒப்படைத்தது. போராட்டத்தை நடத்துவதற்காக என்னுடைய வேலையை ராஜினாமா செய்தேன். ஆனால் என்னுடன் வேலைசெய்த இதர ஊழியர்கள், என்னுடைய மேலதிகாரிகள் ஆகியோர் ஒரு ஏற்பாடு செய்தனர். என்னுடைய ராஜினாமா கடிதத்தை தேதியிடாமல், என் மேலதிகாரியான ஆடிட்டர் நடராஜனிடம் கொடுக்கும்படியும், நான் கைதானால் அந்த ராஜினாமா முந்திய தேதியிட்டு ஏற்கப்பட்டுவிடுமென்றும், நான் கைதாகவில்லையென்றால் தினமும் அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட்டுவிட்டுப் போகும்படியும் கூறி அவ்வாறே ஏற்பாடும் செய்தனர்.

சீனிவாசராவுடன் தொடர்பு

போராட்டக்காலத்தில் என்னுடைய முக்கியமான வேலை மறியல் செய்வதற்கு தொண்டர்களைத் தேர்ந்தெடுப்பது, அன்றாடம் அவர்கள் உணவிற்குப் பணம் கொடுப்பது, அவர்களை ரகசியமாகச் சந்தித்துத் திட்டமிடுவது போன்றவைகள், அந்நாட்களில் அனேகமாக நான் திருவல்லிக்கேணியிலிருந்த ஜகன்னாத தாஸ் வீட்டில் தான் தங்குவது வழக்கம். என்னுடைய வீட்டிற்குப் போவதில்லை. ஜகன்னாத தாஸின் குடும்பத்தினருக்கு தமிழ் தெரியாது. தெலுங்கு மட்டும்தான் தெரியும். அவர்களிடம் பேச வேண்டிய அவசியமேற்பட்டதால் தெலுங்குபேச கற்றுக்கொண்டேன். இச்சமயத்தில்தான் பி.சீனிவாசராவுடன் தொடர்பேற்பட்டது. இப்போராட்டக்காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பல்வேறு மாநிலங்களில் இயக்கத்தை நடத்திச் செல்ல ஜெயப்பிரகாஷ் நாராயணன் நியமிக்கப்பட்டிருந்தார். அவரும் தலைமறைவாகவே சென்னைக்கு வந்திருந்தார். நான் இருக்கும்பொழுது மும்முறை அவர் வந்திருந்தார். அச்சமயத்தில் தான் அவருடன் எனக்கு தொடர்பேற்பட்டது. சிறிது காலத்திற்கு முன்புதான் தன் பட்டப்படிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன் இந்தியாவிற்குத் திரும்பியிருந்தார். இதே நேரத்தில்தான் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பதற்காக தலைமறைவாக வந்த அமீர் ஹைதர்கானைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அமீர்கானின் யோசனை

அமீர் ஹைதர்கான் , மீரட் சதி வழக்கில் சம்பந்தப்பட்டவர், ஆனால் அதிலிருந்து கைதாகாமல் தப்பிவிட்டவர். அவர் முதலில் என்னைச் சந்தித்த பொழுதெல்லாம் கம்யூனிசம் பற்றி எதுவும் பேசவில்லை. அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்றும் எனக்குத் தெரியாது. என்னுடன் பேசியபொழுதெல்லாம் என்னை ஆழம் பார்த்தார். தொழிலாளி வர்க்கம் பங்கெடுக்காமல் சத்யாகிரஹப் போராட்டத்தினால் ஒன்றும் பயன் ஏற்படாது என்ற யோசனையைக் கூறியதோடு விவாதம் செய்து என்னை கம்யூனிஸ்ட் ஆக்கலாமா என்ற ஆரம்பப் பரிசோதனை வேலைகளில் ஈடுபட்டிருந்தார் அமீர் ஹைதர்கான். ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் அமீர் ஹைதர்கான் கூறிய யோசனையைக் கூறினேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். நானும் ஜெ.பியும் இந்த விஷயத்தை விவாதித்து, சத்யாகிரஹப்போராட்டம் வெற்றிகரமாக நடைபெற வேண்டுமானால் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டுமென்றும் ரயில்வேயில் ஸ்டிரைக் நடந்தால் நல்லதாயிருக்கும்மென்று முடிவு செய்து, அப்பொழுது ரயில்வே தொழிற்சங்கத் தலைவராயிருந்த வி.வி.கிரியை சென்று கண்டோம். ரயில்வேயில் ஸ்டிரைக் நடத்தும் பொறுப்பை வி.வி.கிரி ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை.


 

;